Sunday, September 27, 2009

மனிதர்கள் மகத்தானவர்கள்

இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இரண்டு பேரின் மறைவு குறித்து - ஒருவர் இலக்கிய ஆய்வாளர்.  மற்றவர் சமூக சேவகர்.
முதலாமவர் மீனாக்ஷி முகர்ஜி. இவர் ஆங்கில  இலக்கிய உலகில் நம் நாட்டு எழுத்தாளர்கள் பலரின் சாதனைகள் பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார்.இவரின் படைப்புகள் இலக்கிய உலகில் தனது எழுத்துக்கள் மூலம் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கிலப்படைப்புகள் பற்றிப் பதிவு செய்திருக்கிறார்.
இன்னொருவர் நரேன் என்ற சமூக ஆர்வலர். தனது பணிகள் மூலம் சித்தூர் மாவட்டம் வேங்கடராம புறம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் வாழ்க்கைப் பிரச்னைகளில் தலையீடு செய்து வந்தார். நிலம் தான் அவர்களின் வாழ நாள் கனவு. அது நனவாக தனது வாழ நாள் முழுவதும் போராடி வந்திருக்கிறார். மிகப்பெரிய நிலவுரிமையாலரின் மகனாக இருந்த போதும், இந்த இலட்சியங்கள் இவரின் வாழ்நாள் செயல்பாடுகளில் முழு இடம் பெற்று வந்திருப்பது ஒரு அபூர்வமான விசயம்தான். மனிதர்கள் மகத்தானவர்கள் ஆக இருப்பது இம்மாதிரி ஆன சமயங்களில்தான்.           

Friday, September 25, 2009

நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி





என் கட்டுரைத் தொகுப்பு. பல மாநில படைப்பாளர்கள் தங்கள் சிந்தனைகளை ஆசிரியரைச் சந்தியுங்கள் என்ற சாகித்ய அகடமி நிகழ்ச்சியின் போது பார்வையாளர்கள் நடுவே பகிர்ந்து கொள்வார்கள்.அந்தக் கட்டுரைகள் Indian literature -இல்  வெளியாவது உண்டு. நான் அந்தக் கட்டுரைகளைத்  தமிழில் மொழி பெயர்ப்பது  வழக்கம். அதில் இருந்து சில பகுதிகளைத் தர விரும்புகிறேன்.
ஆங்கிலத்தில் எழுதுகிற சஷி தேஷ்பாண்டே, மராட்டிய மாநில தலித் எழுத்தாளர் நாராயண் கார்வே ,தெலுங்கு நாவல் ஆசிரியர் வாசிரெட்டி சீதாதேவி, மலையாள நாவல் ஆசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர், வங்காள நாவல் ஆசிரியர் மஹா ஸ்வேதாதேவி ஆகிய படைப்பாளர்களின் நேர்காணல்களைத் தமிழ மொழியில் நான் கட்டுரைகள் ஆக தந்திருக்கிறேன்.

முதலில் சஷி இன் 'பெண்-வாய்ப்பும் அங்கீகாரமும்' என்ற கட்டுரையில் இருந்து:   "எனது பால்ய காலத்தில் இருந்தே மூன்று விஷயங்கள் என்னை எழுதுகிறவள் ஆக வடிவமைத்தன.அவை - என் தந்தை ஒரு படைப்பாளி. நான் கல்வி முழுவதையும் ஆங்கில மொழியில் படித்து முடிக்க நேர்ந்தது.  நான் ஒரு பெண் ஆக பிறந்து இருந்தேன்..என் தந்தை ஒரு எழுத்தாளர் என்பது என்னில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சொல்கிற போது, மரபணு சார்ந்த அம்சங்களைப்பற்றி குறிப்பிடவில்லை. மரபணுக்கள் இந்த விஷயத்தில் எவ்வளவு பெரிய பங்காற்றி இருக்க முடியும்? என்னை எழுத்தாளர் ஆக்க அவை எந்த அளவிற்கு உதவி இருக்க முடியும்?-எனக்குத் தெரியாது".

"நடன இசைக் கலைஞ்கர்களுக்கு அவர்களின் வாரிசுகளை உருவாக்கி வளர்த்து எடுப்பது போல என் தந்தை என்னை மிகுந்த நுண் கவனத்தோடு ஒரு எழுத்தாளர் ஆக வடிவமைத்தார் என்று நான் கூறுவதாகவும் அர்த்தம் இல்லை".

"இந்தத் தாக்கம் மறைமுகமானது; மிக நுண்மையானது. உதாரணத்திற்கு வீட்டில் இருந்த எண்ணற்ற வெவ்வேறு விதமான புத்தகங்களும் அவற்றை வாசிக்க முடிந்ததும்.
 விரைவில்லையே, படிப்பது  என்பது சுவாசிப்பதையும், சாப்பிடுவதையும் போலவே  ஒரு  அடிப்படைத் தேவை ஆயிற்று. இன்று வரை நான் புத்தகங்களுக்கு அடிமையாகவே இருக்கிறேன் என்பதையும் நினைவு கூர்கிறேன்".




சஷி தேஷ்பாண்டேயின் சிந்தனைகள் இப்படித் தொடங்கி மேலும் விரிவாக வளர்ந்து செல்கின்றன. தனது அப்பா தங்களுக்கு - அவரின் அன்பு பிள்ளைகளுக்கு -கருத்துச்சுதந்திரம், அறிவுச் சுதந்திரம் தந்தது பற்றிச் சொல்கிறார். எழுத்து இவருக்கு வெறுமனே ஒரு தொழில் அல்ல.அது ஒரு விதமான வாழ்க்கைப்பாதை. சசிக்கு எழுதுவதென்பது ஒரு தீவிரமான பணி, அது வெறும் பொழுதுபோக்கு அல்ல. தனது எழுத்துபோக்கின் வளர்ச்சிபோக்கைத் திசை திருப்பிய ஒன்று - ஒரு சிறுகதை.

நமது எழுத்தில் எதிர்பாராத வகையில் அதிர்ச்சி மிக்க திருப்பங்கள் நமக்காகக் காத்திருக்கும் என்கிறார் சசி. எழுத்து மூளையைத் தாக்குகிற நிகழ்வனுபவம் அது என்கிறார். அறிவின் உள்ளார்ந்த வலிமையினை அறிய முடிந்தது என்கிறார். இந்த உலகம் ஆணின் உலகம். ஆகவே ஒரு பெண் ஆணைப்போல் பார்க்கப் படுவது இல்லை. அவளது எழுத்தும் ஆணினுடைதைப்போல் அல்ல.


தான் ஒருபெண் என்பதால் வாய்ப்பு மறுக்கப் படாவிட்டாலும் அங்கீகாரம் மறுக்கப் படுகிறது என்றே தான் கருதுவதாக சசி கூறுகிறார். இறுதியாக அவர் இப்படி முடிக்கிறார் - "மானுட வாழ்வின் பிரச்னைகளை கையாள்கிற ஒரு எழுத்தாளர் என்ற முறையில் எனக்கான இடமும் கௌரவமும் மறுக்கப் படுகின்றன. மானுடத்தின் மீதான எனது அக்கறை நிராகரிக்கப் படுகிறது". சசியின் குரலில் நம் பெண் எழுத்தாளர்கள் அனைவரின் குரலையும் கேட்க முடியும்.

Sunday, September 20, 2009

என்னை பற்றி..

கமலாலயன்

அப்பா: நாராயணசாமி வேலுசாமி
அம்மா: தாயாரம்மாள்
மனைவி: ஜெயந்தி
மகன்: பிரசன்னகுமார்
மகள்: பிரதிபா

பிறந்து வளர்ந்தது திண்டுக்கல். படிப்பு Tool and die டிசைன்.
1989 வரை அத்துறையில் பணி  செய்த பிறகு, 1990 முதல் இன்று வரை எழுத்தறிவுப் பணி (அறிவொளி இயக்கம், திருவள்ளூர் மாவட்டம்).
 
என் படைப்புகளில் நூல் வடிவம் பெற்றவை:
1.பார்வைகள் மாறும் - அன்னம் வெளியீடு. சிறு கதை தொகுப்பு.
2.நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி - மொழியாக்கக் கட்டுரைகள்
3.நூலகங்களுக்குள் ஒரு பயணம் - பாரதி புத்தகாலயம் 
4. மார்க்சியமும் கலாச்சாரமும் 
5.சிகரம் சிற்றிதழ் தொகுப்பு
6.புவி முழுமைக்குமான நீதி - சேகுவேராவின் Global Justice- மொழிபெயர்ப்பு - பாரதி புத்தகாலயம்
7.மனிதர்கள் விழிப்படையும் போது.. Athivasis Revolt மொழிபெயர்ப்பு- கோதாவரி பருலேகர்-சவுத் விஷன்
8.மானுட வீதி - கவிஞர் யுக பாரதியின் இயற்கை வெளியீடு.
பிறகு பல்வேறு தொகுப்பு நூல்களில் கட்டுரைகள் நிறைய பிரசுரமாகி உள்ளன. தொடர்ந்து புத்தக அறிமுக கட்டுரைகள்  பல பத்திரிகைகளில் வெளி வந்து கொண்டு இருக்கின்றன.
தீபம், கணையாழி,உயிர்மை,தீரா நதி,கல்கி,குங்குமம்,தாமரை,செம்மலர்,புத்தகம் பேசுது..போன்ற பல இதழ்களில் எழுதி வருகிறேன்.

இன்று முதல..

என்று நாமே ஒரு வலை பூவை ஆரம்பிக்க போகிறோம் என்று இருந்த நேரத்தில் பிரசன்னா கொஞ்ச நேரத்தில் இதை உருவாகிக் கொடுத்தான்.பிள்ளைகள் நம்மை விட நிச்சயம் திறமைசாலிகள் ஆக இருக்கிறார்கள்.அந்த மகிழ்ச்சி நம்மை பெருமை கொள்ளச் செய்கிறது.வாழ்க்கை முழுவதும் எழுதும் படிப்பும் நமக்கு முக்கியம் என்று இருப்பவன் நான்.படிப்பதின் சுகமும் பயனும் எல்லோராலும் உணரப்படும் நாள் என்று வரும் ?இன்று என் மனதில் அலை பாயும் சிந்தனைகள் கடந்த காலம் முதல நிகழ காலம் வரை என் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அசை போட ஆரம்பித்தன.பயணம் தொடர்கிறது...