இந்தப் பகுதியில் இடுகை என்று பதிவு செய்து நீண்ட காலம் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நமது மனப் பரப்பில் எண்ணற்ற சிந்தனைகள் இடம் பெற்று விடுகின்றன.அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயல்கிறோம் எல்லாவற்றையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவது இல்லை.சிலருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடிவதும் இல்லை.எழுத்து என்ற ஊடகம் நமக்குக் கை கொடுக்கிறது.இசை,ஓவியம்,நாடகம்,சினிமா,சின்னத் திரை என்று எத்தனையோ ஊடகங்களின்று. அசோகமித்திரன் எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு "வாழ்விலே ஒரு முறை"என்பது.பிறகு சில காலம் கழித்து "இன்னும் சில நாட்கள்' என்ற அடுத்த தொகுப்பு வந்தது.இன்றுடன் அல்லது வாழ்வில் ஒரு முறை என்று நினைக்கிறோம்.ஆனால் இன்னும் சில நாட்கள் இருக்கவே செய்கின்றன.நேற்று முடிந்து போய் விட்டது;இன்று முடியப் போகிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நாளை வரத்தான் போகிறது என்பது.எனது எழுத்துப் பணிகளில் சில சமயம் சோர்வு ஏற்படும் வேளைகளில் இந்த "வாழ்விலே ஒரு முறை"யும் "இன்னும் சில நாட்கள்" தலைப்புமே நினைவுக்கு வரும்.மீண்டும் எழுதுவேன்.வாழ்க்கை என்னும் மகா நதியில் மிதந்து கொண்டிருக்கிற சிறு படகு நான்.எழுதும் வாசிப்பும் எனது இரு கண்கள் எனலாம்.இவை இல்லாதிருந்திருந்தால் நான் என்னவாகி இருப்பேன்?நினைக்கவே துயரம் தரும் கேள்வி இது.சற்று முன் வாசித்த தோழர் தொழார் கவின்மலரின் பதிவு ஒன்று மறைந்த தோழர் உ.ரா.வரதராஜன் அவர்கள் பற்றிய ஒரு கண்ணீர்ததும்பும் பதிவு மௌனமாக் நம்மை அழச் செய்கிறது.போரூர்ஏரியைக் கடக்கும் போதெல்லாம் அவரின் துயர நினைவு வந்து நெஞ்சைக் கனமாக்கி விடும்.இன்றைய அரசியல் வானில் இப்படி பல துயர நிகழ்வுகள்.அவற்றின் பின்னால் எந்த விதமான "தத்துவ"சண்டைகள் நிகழ்ந்தனவோ?ஆனால் இவற்றின் பின்னுள்ள அவல நிலை நம்மைத் திகைக்கச செய்கிறது.எனினும் நாம் நின்று விட முடிவதில்லை."இருள் என்னும் விருந்தாளி இரவு வரைக்கும் தான்;எவர் தடுத்து இதுவரை விடியல் நின்றிருக்கிறது?"என்று உருதுக் கவிஞர் சாகிர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது இன்னொரு நாள் இதோ நாளை வருகிறது.....நடக்கிறோம்,நடப்போம்.
Showing posts with label பார்வைகள். Show all posts
Showing posts with label பார்வைகள். Show all posts
Thursday, February 23, 2012
Thursday, November 10, 2011
வாசிப்பின் விஸ்வரூபம்
வாசிப்பு முகாம் ஒன்று இந்த மாதம் ஆறு,ஏழு தேதிகளில் ஈரோடில் நடந்தது.இது நான்காவது முகாம்.பிரேசில் நாட்டு கல்வி நிபுணர் எழுதிய எதார்த்தத்தை வாசித்தாலும்,எழுதுதலும் என்ற சிறு நூல் பற்றிய விவாதம்,ஜ்ஹோன் ஹோல்டின் ஆசிரியரின் டயரி என்ற நூல் பற்றிய விவாதம் இவைதான் நிகழ்வுப் பொருள்.பல நண்பர்கள் புதியவர்கள்.எனவே அதற்கு உரித்தான பிரச்னைகளுடன்தான் முகாம் நடந்தது.எனது புத்தகம் "உனக்குப் படிக்கத் தெரியாது" பற்றி அங்கு பலரும் சொன்னது வியப்பைத் தந்தது.பிரைரே எழுதிய நூலை நான் தமிழில் மொழி பெயர்த்திருந்தேன்.அந்த மொழிபெயர்ப்பில் இருந்த புரியாமைகள் பற்றி பலரும் சொன்னார்கள்.அந்த விமர்சனங்களின் அடிப்படையில் மீண்டும் அந்தப் பிரதியை மீளவும் எழுத வேண்டும்.இரண்டாம் நாள் அங்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார்.ரயில் டிக்கெட் மாலை மூன்றரை மணிக்கு என்பதால் அவரின் உரையைக் கேட்காமல் கிளம்ப நேர்ந்தது.ஆனால் ரயில் அன்று இரண்டு மணிநேரத் தாமதமாக வரும் என்பதுமட்டும் முன்பே தெரிந்திருந்தால்....?நண்பர்களுடன் நிறைய உரையாட முடிந்தது ஆறுதல் அளித்தது.இன்று நண்பர் ஜ.மாதவராஜ் அவர்களுக்கு என் புத்தகங்கள் இரண்டை அனுப்பினேன்.அவருடன் பேசவும் முடிந்தது.நேற்று குற்றாலம் பேரா.பிரேமா அவர்களுக்கு 'உனக்குப் படிக்கத் தெரியாது'புத்தகம் கொடுத்தேன்.புத்தகம் பேசுது இதழில் உதய சங்கர் அவர்கள் இந்தப் புத்தகம் பற்றி ஒரு நல்ல அறிமுகக் கட்டுரை எழுதி இருந்தார். மாதவராஜ் என் படைப்புகளில் நீண்ட கால இடைவெளி இருப்பது பற்றிக் கேட்டார்.அந்த யோசனையுடனே வந்து மின்னஞ்சல் பார்த்த பொது எஸ்.வி.வேநுகோபாலன் அவர்கள் சேலம் ஆதவ் டிரஸ்ட் பற்றி எழுதிய குறிப்பு படித்தேன்.தசைச் சிதைவு நோயால் பா திக்கப் பட்ட நிலையிலும் இரு சகோதரிகள் வானவன்மாதேவியும் இயலிசை வல்லபியும் வாசிப்பின் விஸ்வரூப தரிசனம் கண்டிருப்பதுடன் மற்றவர்களுக்கும் அந்த தரிசனத்தைக் காட்டி மகிழும் அற்புதம் மனதை நெகிழச் செய்தது.மனம் வைத்தால் மனிதர்கள் என்னவெல்லாம் சாதிக்கிறார்கள்!
Thursday, February 10, 2011
சரஸ்வதி விஜயபாஸ்கரன் மறைந்தார்.....
வ. விஜயபாஸ்கரன் நேற்றிரவு காலமாகி விட்டார்.வெறும் விஜயபாஸ்கரன் என்றால் தமிழ் இலக்கிய உலகில் யோசிப்பார்கள்.சரஸ்வதி விஜயபாஸ்கரன் என்றால் சட்டென்று புரியும்.தமிழில் வெளி வந்த அற்புதமான ஒரு இடைநிலை இதழ் அது.ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி,ஜி.நாகராஜன் இப்படியான அன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்தவர் அவர்.மிக நல்ல சிறுகதைகளும்,கட்டுரைகளும்,கவிதைகளும் இடம் பெற்ற பத்திரிகை.ஆயிரக்கணக்கில் அன்று விற்பனையான ஒரே இலக்கிய இதழ் என்று கூடச் சொல்லலாம்.அன்று அவர் ஒன்றாக இருந்த பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.கட்சி அன்று இருந்த நிலையில் கலை இலக்கியப் படைப்புகளை எப்படி அணுகுவது என்பதில் அவ்வளவு தெளிவும் பக்குவமும் தலைவர்களில் பலருக்கு இருந்திருக்க வாயிப்புக் குறைவு.எனவே சரஸ்வதியில் வெளியான படைப்புகள் குறித்த புரிதல் இல்லாமல் அவர் கட்சி நிலைப்பாட்டுக்கு விரோதமான படைப்புகளை வெளியிடுவதாக ஒரு கருத்து பரவ ஆரம்பிதிருந்ததுஅதன் விளைவாக "தாமரை"இதழ் அன்றைய கட்சி தலைவர் ஜீவா அவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.சரஸ்வதி நின்று போனதற்கு கட்சிதான் காரணம் என்ற வருத்தம விஜயபாச்கரனுக்கு இருந்தது.இந்த வருத்தத்தை பொதுவுடைமைத் தத்துவத்தின் விரோதிகள் இன்றளவும் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஆனால் விஜயபாஸ்கரன் தொடர்ந்து கட்சியில்தான் இருந்தார்.சோர்வுடன் இருந்தார் என்று சொல்லலாம்."சரஸ்வதி காலம்"தொடரில் தீபத்தில் இந்த அனுபங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.சமீபத்தில் கலைஞன் பதிப்பகம் மூலம் "சரஸ்வதி களஞ்சியம்"என்ற தொகுப்பு நூலாக இரு பகுதிகளாக சரஸ்வதி இதழின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப் பட்டுள்ளன.சரஸ்வதி காலம் தொடரை எழுதியவர் வல்லிக்கண்ணன் அவர்கள்.அது நூலாகவும் வந்துள்ளது.ஆனால் இன்று விஜய பாஸ்கரனுக்கு இரங்கல் குறிப்பு எழுதியிருக்கும் ஜெயமோகன் அந்த நூலை விஜய பாஸ்கரனே எழுதினார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.வல்லிக்கண்ணன்,தி.கே சிவசங்கரன் என்ற பெயர்களின் மேல் ஜெயமோகன் மற்றும் அவரின் நண்பர்கள் வட்டத்திற்கு இருக்கும் அசூயையும்,வெறுப்பும் எள்ளலும் இலக்கிய உலகம் நன்கு அறிந்தவை.அந்த விவகாரம் பற்றித் தனியே எழுத வேண்டுமே தவிர இன்றைய சந்தர்ப்பம் அதற்குஏற்றதல்ல.எது எப்படி இருந்தாலும் ஒரு பொதுவுடைமை வாதிதான் இன்று இவர்கள் கொண்டாடும் சுந்தர ராமசாமியின்,ஜி.நாகராஜனின் படைப்புகளை நல்ல முறையில் முறையில் அன்றைக்கே இனம் கண்டு வெளியிட்டவர் என்பதையாவது மறக்காமல் இருந்தால் சரிதான்.........விஜயபாச்கரனுக்கு நம் அஞ்சலி!
Sunday, February 6, 2011
அன்பின் பகிர்தல்கள்........
பாண்டிச்சேரி போகும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.முனைவர் பரசுராமன் எழுதிய நான்கு புத்தகங்களை அறிமுகம் செய்து பேச வேண்டும் என்று தோழர் எஸ்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.நிகழ்வு நன்றாக அமைந்தது.அது ஒரு புறம்.பாண்டி எப்போதுமே என்னைக் கவர்ந்த ஒர் ஊர்.கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதுமே இயற்கையின் எழில் கொஞ்சும்.போக்குவரத்து நெரிசல்.விடுதிகள்,ஹோட்டல்கள்,வாகனங்கள்..இந்த இடையூறுகள் ஒரு புறம்.ஆனால் இதையெல்லாம் தாண்டி புதுவை சென்று விட்டால் அது ஒரு மகிழ்வூட்டும் அனுபவம்தான்.பாரதி,பாரதிதாசன்,அரவிந்தர்,வ.ரா.,வ.வே சு.அய்யர் இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களும்,விடுதலைப் போராட்ட வீரர்களும் கவிஞ்ர்களும்,வாழ்ந்த மண் அது.அங்கு நேற்று இரவு தங்கிய சமயம் நண்பரின் வாழ்க்கை பற்றி அறிய நேர்ந்தது.ஒரு சிக்கல்,அதில் இருந்து மீண்டு வர அவர் நடத்திய போராட்டம்,குடும்பத்தினரின் மன உளைச்சல்,தோழர்களின் ஆதரவு,இப்போது மீண்டு வந்த பின் சற்று அமைதியான நிலை,அடுத்தது என்ன என்ற கேள்வி..இப்படி நேரம் போவது தெரியாமல் பேசினோம்.ஒவ்வொரு மனிதரிடத்தும் ஒரு நல்ல நாவல் இருக்கிறது என்று சொல்வார்கள்.தஞ்சை மாவட்ட வாழ்வின் ஒரு பகுதி தி.ஜானகிராமன் நாவல்களில் பதிவு ஆகி இருக்கிறது.ஆனால் நண்பர் விவரித்த வாழ்க்கை முற்றிலும் வேறு விதமான உலகம்.அதை எழுதுங்கள் என்று சொன்ன சமயம் அவரும் அது பற்றி யோசித்தார்.செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.அன்பு நிறைந்த வாழ்க்கை இந்த சோதனைகளை எதிர் கொண்டு வெல்லும் என்று மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது........!
Saturday, January 1, 2011
நாஞ்சில் நாடனின் படைப்புலகம்
இந்தப் பதிவுகளில் நாஞ்சில் நாடனின் நேர்காணல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.திரு.பாஸ்கர் என்ற நண்பர் அந்த நேர்காணல் முழுவதையும் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார்.அந்த நேர்காணல் செம்மலர் இதழுக்காக எடுக்கப்பட்டது என்பதால் பொங்கல் மலர் வெளிவரும் முன்பாக அதை இங்கு பதிவு செய்யலாமா என்று தெரியவில்லை.எனினும் பொதுவாக நாஞ்சில் நாடன் படைப்புலகம் சார்ந்து சிலவற்றைப் பதிவு செய்யத் தோன்றுகிறது. கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாக எழுதி வரும் காத்திரமான படைப்பாளி அவர்.நாஞ்சில் நாட்டு வாழ்க்கை தான் அவரின் படைப்புலகின் பெரும்பாலான படைப்புகளின் பாடு பொருள்.எனினும் அவர் மும்பையில் வாழ்ந்த அனுபவங்கள் சார்ந்து "மிதவை"நாவல்,சில சிறுகதைகள் வந்துள்ளன.அவரின் முதல் சிறுகதை,"பிரசாதம்" தீபம் இதழில் வந்தது.நாஞ்சில் நாடன் ஒரு முறை வட இந்தியாவில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொது,அவர் தான் சாப்பிடுவர்க்காக வாங்கிய பார்சலைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வழியில் நின்ற ரயில் நிலையத்தில் ஏறிய ஒரு முதியவர் ,"காமி காணார்" என்று உடல் நடுங்கப் பதட்டத்துடன் சொன்னாராம்.அவருக்குப் பசி என்று முகத்தில் இருந்தே தெரிந்து கொண்ட நாடன்,தன பார்சலில் இருந்த ரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பல நாட்கள் அந்தப் பெரியவரின் பதட்டமும்,பசியும்,ஆனால் "எனக்குப் பசிக்கிறது,கொஞ்சம் ரொட்டி கொடு"என்று யாசிக்கவோ,கெஞ்சவோ இல்லை என்ற ஆச்சரியமும் நாஞ்சில் நாடனின் மனதில் ஊறிக் கொண்டே இருந்திருக்கிறது."நாம் உண்போம்"என்பதுதான் அந்தப் பெரியவரின் "காமி காணார்" என்ற வார்த்தைகளின் பொருள் என்று அறிந்த இவர்,அந்தப் பெரியவருடைய நிலை என்ன,அவருக்கு குடும்பம் என்று ஒன்று இருக்குமா,இருந்தால் அவரின் மகன் அல்லது மகள் யாரும் அவரைக் கவனிக்கவில்லையா,அவர் அவ்வளவு பதத்ததுடன் அந்த ரயிலில் தனியே ஏன் வர வேண்டும் என்று பல விதமாக யோசித்துக் கொண்டே இருந்ததின் விளைவு "விரதம்"சிறுகதை.இப்படி அவரின் ஒவ்வொரு படைப்புமே நாம் அன்றாடம் காண்கிற வாழ்க்கையின் படப்பிடிப்புகல்தாம். கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எழுதிக் கொண்டிருந்தும் தான் தடம் பதித்து விட்டவரா,இல்லை,தடம் தொலைத்து விட்டவரா என்று புரிபடுவது இல்லை என்கிறார் இவர்.நமக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.தடம் ஒன்றை அழுத்தமாகப்பதித்தவர் நாஞ்சில் நாடன் என்பதில்."என் தீவட்டி எப்போதும் என் மனதில்;கரங்களில் அல்ல.அது எரிக்கும்,வெளிச்சம் பாய்ச்சும்,என்னை அற்றுக் கருகிப் புகைந்தும் போகும்" என்பது இவரின் சுய மதிப்பீடு. "எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனை அல்ல;ஆத்மா சோதனையோ சத்திய சோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல;பெரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி;என் சுயத்தைத் தேடும் முயற்சி" என்று கூறும் நாஞ்சில் நாடனுக்கு இலக்கியத்தில் நவீன உத்திகளின் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை.என் படைப்புக்கு அது அவசியம் என்றால் அது தானாகவே என்னிடம் வந்து சேரும் என்கிறார்.வாழ்க்கையைப் படித்தால் போதும் என்பது இவரின் பாதை.ஐந்து நாவல்கள்,எட்டு சிறுகதை தொகுப்புகள்,இரு கவிதைத் தொகுப்புகள்,மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,என்று இவரின் படைப்புக்களத்தில் விளைச்சல் கணிசமான அளவுக்கு நிறைந்து இருக்கிறது.ஆனாலும் இன்னும் இவருக்கு இவரது நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி சொல்லுவதற்கு ஏராளம் உண்டு.இவர் ஆனந்த விகடனில் எழுதிய "தீதும் நன்றும்" கட்டுரைகள் இவரின் சமூகப் பொறுப்புணர்ச்சியின் தீவிர வெளிப்பாடுகள்.குறிப்பாக பெண்கள் படிக்கும் பள்ளிகள்;கல்லூரிகள்,வேலை செய்யும் அலுவலகங்கள்,பயணிக்கும் பேருந்துகள் இவற்றில் எதிர் கொள்ளும் பிரச்னைகள்,கழிவறை இல்லாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் பற்றியெல்லாம் மிகத் தீவிர அக்கறையுடன் எழுதியது மாநிலம் முழுக்க பெரும் எதிர்வினைகளை எழுப்பியது.இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும்,நாஞ்சில் நாடனின் பார்வை எவ்வளவு கூர்மையானது என்பது.இசையில் இவரின் ஆர்வம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் உணவு வகைகள் சார்ந்து இவருக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இவரின் எல்லாப் படைப்புகளிலும் மிகத் துலக்கமாகத் தெரிவதை படிப்பவர்கள் உணர முடியும். இவருக்கு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது எவ்வளவு பொருத்தம் என்று வாசகர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் நாஞ்சில் நாடனுக்கு இந்த அங்கீகாரம் மிகவும் காலம் கடந்து கிடைத்ததே என்ற வலி மிக ஆழமாக இருக்கிறது.அந்த வழியை வெளிப்படுத்துவதில் இவருக்குத் தயக்கம் சிறிதும் இல்லை என்பது இவரின் மற்றுமொரு தனித்தன்மை.வாசிக்க வாசிக்க சுவை தரும் ராக ஆலாபனை ப்ன்றவை இவரின் படைப்புகள்...................!
Tuesday, August 3, 2010
thirunangaiyarin eluthukal......
மூன்றாம் உலகம் என்ற வார்த்தை அரசியல் சார்ந்த ஒரு சொல்லாடல் என்பதே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எனது புரிதலாக இருந்தது. ஆனால் மூன்றாம் பாலினம் ஆக இருக்கும் திருநங்கையர் நடுவே எழுதும் முனைப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அறிந்த பின் இந்தச் சொல்லாடலின் மற்றொரு முனை என் மனதில் பதிந்தது.ப்ரியா பாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலை வாசித்த பொது கூட இந்த உண்மை அவ்வளவு ஆழமாக மனதில் பதியவில்லை.அவர்களில் எழுத்தார்வம் உள்ள சிலரை உற்சாகப் படுத்த வேண்டும் என்றும் எழுதுக்களை சார்ந்த ஒர் உரையாடல் நிகழ்வு நடத்த வேண்டும் என்று ப்ரியா பாபு அழைப்பு விடுத்த போதும் கூட அதன் முழுப் பரிமாணமும் பிடிபடவில்லை.ஆனால் அந்த நிகழ்வின்போது தங்கள் ஏன் எழுத விரும்புகின்றனர்,அவ்வாறு எழுத விடாமல் அவர்களைத் தடுக்கும் சுவர்கள் எவை,எப்படி அந்தச் சுவர்களைத் தகர்ப்பது,எதை எழுதப் போகிறோம்,எப்படி எழுதலாம்,எழுதியவற்றை எப்படி நூலுருவில் கொணர்வது என்றெல்லாம் ஒரு நூறு கேள்விகளுடன் வந்திருந்த அவர்களின் நடுவே பேச முற்பட்ட போதுதான் அந்தப் பொருள் சார்ந்த என் அறியாமைகளை உணர முடிந்தது.எனக்குப் பிடித்த சில படைப்புகள்,அவை சார்ந்த சில உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களால் அதில் பெருமளவு ஈடுபாடு காட்ட முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.அந்த அசிரத்தை ஏன் என்ற கேள்விக்கான விடையை ப்ரியா பாபுவே கடைசியில் சொன்னார்.இலக்கியப் படைப்புகள் என்று எதையும் இன்னும் படிக்காதவர்கள்,படிக்கக் கிடைக்காதவர்கள்,படிக்க நேரமும் உகந்த வாழ்க்கை சுழலும் வாய்க்கaதவர்கள் வாழ்க்கையின் கோரப் பல்சக்கரங்களின் நடுவே அரைபட்டுக் கிடப்பவர்கள் என்ற நிலையில் எப்படி அவர்களால் நமது "உன்னத' இலக்கியங்களில் ஈடுபாடு காட்ட முடியும்?இந்த நிலையில் என்ன எழுதலாம்,எப்படி எழுதத் தொடங்கலாம்,என்னென்ன வடிவங்களைக் கையில் எடுக்கலாம் என்ற பல கேள்விகளும் அதற்கான விடைகளும் அவர்களின் நடுவேதான் இருப்பதாக உணர்ந்தேன்.எனஊடன் வந்திருந்த கருத்தாளர்களும் அதே உணர்வைத் தான் அடைந்திருப்பார்கள்.ஒரு விதை ஊன்றப் பட்டிருக்கக் கூடும்;அவ்வளவுதான்.அது முளைத்துத் துளிர்த்து,பூவும் காயும் கனியும் என்று வளர்ந்தொங்குவது என்று?விடை தெரியாத கேள்வியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.
Friday, July 30, 2010
காலம் என்னும் கவிதை...
காலம் என்ற சொல்லின் அர்த்த அழகு குறித்து யோசிக்கையில் எண்ணங்கள் அலை பாய்கின்றன.'கால நடை'என்று ஒரு சொல்லாடலை பாரதி கையாள்கிறான்.'அவர் ஒருவர் நாம் ஒருவர் என்றான மழைக்காலம்' என்று ஒரு பழம்பாடல் வரி பேசும்.'பால்ய கால சகி'என்ற வைக்கம் மொகம்மது பஷீர் எழுதிய குறுநாவல் காலம் கடந்தும் உயிர்ப்புடன் நிலைத்திருக்கும் பிஞ்சுப்பருவத்து உறவு பற்றிப் பேசுகிறது."நானெல்லாம் அந்தக் காலத்துல இப்படியா இருந்தியன்?"என்று அங்கலாயிக்கிற குரல்கள் எத்தனை?இன்று நாம் இருக்கும் நிலைக்கும் என்றோ ஒரு காலச் சூழலில் நமது நிலைக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறித்துக் குற்ற உணர்வு கொள்ளாதவர்கள் யார்?இந்தக் காலம் என்ற சொல் எல்லாப் படைப்பாளிகளின் படைப்புகளிலும் எஅதோ ஒரு வகையில் என்றும் இறவாத உயிர்ப்புடன் உலவிக் கொண்டேதான் இருக்கிறது.காலம் ஒரு கறாரான நீதிமான்.அதன் எடைக்கல்லில் எந்த ஒரு படைப்பும் அதன் சுய பலத்தினாலும்,அது தன உள்ளுறை கருவாய்க் கொண்டிருக்கும் ஒரு சத்தியமான உண்மையினாலும் மட்டுமே நின்று நிலைக்க முடியும்.யார் எந்தக் காரணம் கருதித் தூக்கிப் பிடித்தாலும் இந்த உள்ளுறை உண்மையின் அழகில் மட்டுமே ஒரு படைப்பு காலம் கடந்து நிற்பதற்கான வேர் ஓடி நிற்கிறது.எம். டி.வாசுதேவன் நாயர் எழுதிய காலம் நாவலை ஆங்கில மொழியில் தந்த கீதா கிருஷ்ணன் குட்டி என்ற மொழி பெயர்ப்பாளரின் அனுபவப் பதிவு இந்தக் காலம் பற்றிய எண்ணங்களை மீளவும் உறுதி செய்வதாக அமைந்தது.'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே' என்ற பாடல் என் சிறு வயது முதலே என் மனப் பரப்பில் பதிந்த ஒன்று."எங்களுக்கும் காலம் வரும்;காலம் வந்தால் வாழ்வு வரும்;வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே"என்று இன்னொரு பாடல் நம் மனதில்நீங்கா இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடல் உழைப்பவர் பாடும் பாடலாக 'பாவ மன்னிப்பு'படத்தில் இடம் பெற்று இருந்தது.உழைக்கும் வர்க்கம் மட்டுமே தனக்கு வாழ்வு வந்ததும் சக மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வு தரும் முனைப்புடன் இருக்கிற ஒரே வர்க்கம் என்ற உண்மை இந்தப் பாடலின் உள்ளுறையும் சத்தியம்.எனவே இது காலம் கடந்து நிற்கிறது;நிற்கும்.
Sunday, June 6, 2010
வாசித்தலின் எல்லைகள்..
எனது சிந்தனைகளைப் பதிவு செய்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது.அன்றாட வேலைகள்;அலைச்சலும் உளைச்சலும் மிக்க வாழ்க்கை;எண்ணங்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நடைமுறை அலுவல்கள்;இப்படியாக நாட்கள் ஓடிவிட்டன.இன்று சிறிது அவகாசம் கிடைத்தது.கடந்த சில நாட்களில் புத்தகம் பேசுது இதழின் நூறு இதழ்களையும் படித்து அது பற்றி எழுதும் ஒரு வேளையில் ஈடுபட நேர்ந்தது.தமிழில் புத்தகங்களுக்கு என்றே வருகிற பத்திரிகை இது ஒன்றுதான்.வாசிப்பு அனுபவம் என்ற ஒன்று விவரிப்புக்கு அப்பாற்பட்டது.சொல்ல முற்படும் போதே சொல்லில் அடங்காமல் நழுவும் அது,பாவண்ணன் அவர்கள் அயோத்திதாசப் பண்டிதர் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று முன்பு வந்திருந்தது,அதை இப்போது படிக்கையில் எல்லையற்ற சிந்தனைகளின் ஊற்றுக் கண்ணை அது குத்தித் திறந்து விட்டாற்போல் இருந்தது,அது போன்றே மாதவராஜ் எழுதிய காற்றுகென்னஎல்லை என்ற கட்டுரைதொடரும் பலப்பல சிந்தனைகலைத் தூண்டியது. வாசிப்பின் எல்லைகள் தாண்டி புனைவின் வெளியில் பயணம் செய்ய உதவும் எழுத்துகள் இவை.விரிவாக இது பற்றி எழுதும் முனைப்புடன் சிறிது இடைவேளை.....!
Tuesday, April 20, 2010
களப்பணியாளர்களும் அங்கீகாரமும்..........!
அங்கன்வாடி என்கிற ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களில் பணியாற்றுகின்ற களப் பணியாளர்களின் பணிகள் நடுவே நடைபெறும் புத்தாக்கப் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,தொடர்ந்து சில தினங்களாக அவர்கள் நடுவே பேசியசந்தர்ப்பத்தில் சில உண்மைகளை அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒப்பீடு அளவில் குறைந்த சம்பளம்;இன்னும் அரசு ஊழியர் என்ற நிரந்தரத் தகுதி பெறாத நிலை;நீண்ட காலமாகக் கோரி வரும் சில சலுகைகள் கிடைக்காத ஏமாற்றம்;இவ்வளவு இருந்தும் தம் பொறுப்பில் இருபத்தைந்து குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டிருகின்றனர் என்பதில் அவர்களுக்கே உரித்தான பெருமிதம்;சமூகம் அங்கீகரிக்க விட்டாலும் தம்மிடம் வளரும் குழந்தைகள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் தம்மை மதித்து வந்து எங்கே கண்டாலும் பேசு கிரார்கள்; என்கிற ஒரு நிறைவை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.அதுதான் அவர்களை இயக்கம் உயிராற்றல்.அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஈடுபாடு ஏற்பட வேண்டும் என்பது பயிற்சியின் நோக்கம்.நாம் வாசிப்பு,பாடல்கள்,கதைகள்,பல்வேறு பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து சில எடுத்க்காட்டுக்கள் என்று அந்த ஈடுபாட்டை ஏற்படுத்தமுயல்கிறோம். அது நிறைவேறவும் செய்கிறது.அதை அவர்களின் முகப் பிரகாசத்திலும்,கண்களின் ஒளியிலும் ஓரளவு பேச்சிலும் நம்மால் உணர முடிகிறது.ஆனால், இந்த மாதிரிக் களப் பணியாளர்களுக்கு என்று,எப்படி,யார் அங்கீகாரம் வழங்கப்போகிறார்கள்?இந்தக் கேள்விதான் கடந்த ஒரு வருடமாகவே என் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது.அறிவொளி இயக்கம் என்கிற எழுத்தறிவுத் திட்டத்தில் வயது வந்தோர் கல்விப் பணியில் இருபது ஆண்டுகள் இடைவெளியே இல்லாமல் பணியாற்றிய அனுபவம்,பட்டறிவு மட்டுமே இப்போது மீந்திருக்கிறது.இந்தப் பணிகளின் வெற்றி,தோல்விகள் ஒரு புறமிருக்க,இப்படி பணி செய்திருக்கிறார்கள் என்பதையாவது இந்தச் சமூகம் தன மனதில் பதிவு செய்திருக்கிறதா?இது மில்லியன் டாலர் கேள்வி.இந்தக் கேள்வியை மனதில் சுமந்து கொண்டேதான் எங்களை போலவே களப்பணி செய்யும் அங்கன்வாடிப் பணியாளர்களை உற்சாகப் படுத்தும் பயிற்சியை நடத்த நாங்கள் போகிறோம்.நல்ல நகைமுரண்தான் இது!
Wednesday, March 24, 2010
இன்றொரு புதிய உலகம்.
இன்றொரு புதிய உலகம்....தினசரி வேலைகளின் அழுத்தம் காரணமாக இந்தப் பதிவுகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை.இன்று எனது துணைவியாரின் "பாடினியார்"வலைப் பக்கங்களில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.ஒரு வாசகன் ஆக என்னை மாற்றிக் கொண்டு படிக்கையில் அவரின் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந்தன.ஒரு பெண்,தாய்,மனைவி,மகள் என்ற பல பரிமாணங்கள் அவரின் பதிவுகளில் வண்ணங்கள் காட்டுகின்றன.பிரசவ வேதனை மிக்க ஒரு நாளில் தன பக்கத்துப் படுக்கையில் சின்னப்பொண்ணு என்று ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பதிவையும் கவனத்தில் வைத்திருந்து இதனை வருடம் சென்ற பிறகும் உயிர்ப்புடன் எழுத்துவடிவம் தர முடிந்தது பெரும் வியப்புத் தரும் விஷயம்.தான் பார்க்கும் படங்கள்,தன இளமைக்கால நினைவுகள்,குடும்பம் என்கிற ஒரு வெளியில் கடந்து செல்லும் இனிமையும் வலியும் மிக்க நேரங்கள், வெளியில் பயணங்களில் காண நேர்ந்த காட்சிகளும் மனிதர்களும் ...என்று பன்முகம் கொண்டவை ஜெயந்தியின் பதிவுகள்.அவருக்குள் ஒரு படைப்பாளி இருப்பதை எப்போதோ உணர்ந்திருக்கிறேன். "அதுவும்...."என்ற தலைப்பில் நான் எழுத்து வடிவம் தந்த சிறுகதை அவர் சொன்ன அவரின் சிறுவயது அனுபவம்தான்.சின்ன வயதில் பாட்டி வீட்டில் அவரின் பிரியத்திற்குரிய பூனை ஒன்று ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகும் அவர் அங்குப் போனதும் ஓடி வந்து மடியில் ஏறி விளையாடும் சிறு நிகழ்வுதான் கதை.அவரே எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.என்றாலும் என் சிறுகதைகளில் மிகச் சிறப்பாக வடிவம் பெற்ற ஒருசில கதைகளில் இதுவும் ஒன்று. தன தனிமை துயரம்,தன கனவுகள்,நடைமுறை வாழ்கையில் தன முயற்சிகள்,இடையூறுகள் பற்றிக் கவலைப்படாமல் தன பாதையில் தளராமல் நடைபோடும் துணிவு என்று அவரின் பண்புகள் மிளிரும் வலைப் பக்கங்கள்.சில நிகழ்வுகள் நானும் உடனிருன்தவை என்றாலும் அவர் எழுத்தில் வாசிக்கும்போது மிகப் புதிய ஒரு காட்சி மனக்கண்ணில் எழுகிறது.ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீடு தன்னுள் ஒரு நடமாடும் உணர்வுக்களஞ்சியம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.அதன் தரிசனம் நம் கண்களில் படாமலே போகும் நிலை பல சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது.இயந்திர மயமான இன்றைய வாழ்கையில் அற்பக் கவலைகளால் மனதில் இருப்பதைக் கூடப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம்.எதிர்பாராமல் தொடர்ந்த பல நாட்கள் மழைக்குப் பின் திடீர் என்று ஒரு நாள் காலைச் சூரியனின் வருகையின் பரவசம் இன்று தெரிந்த உலகில் கிடைக்கிறது.அறிந்த பழைய உலகமே கூடப் புதிய வடிவமும் வண்ணமும் காட்டி நிற்கிறது.நாம் தவற விட்ட உன்னத நிமிடங்கள் குறித்த குற்ற உணர்வும் கூட நம்மை உறுத்துகிறது.ஒரு எளிய மன உலகம்வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்."பாடிநியாரின்"மன உலகம் அதுதான்.........................!
Thursday, March 18, 2010
படைப்புகளின் பின் உறைகிற வலிகள்
படைப்புகளின் பின் உறைகிற வலிகள் பற்றிப் பேச முற்படும் பொது வாசகனின் மனநிலைகள் பலவிதமானவை.கண்காணாத இடங்களில் கரும்புத் தோட்டங்களில் உழைத்து வாடும் கூலிகள் பற்றிப் பாடுகிற பாரதி நம் முன்னோடி.தேயிலைத் தோட்டங்களில் பிழைப்புத் தேடித் போன மனிதர்களின் சோகங்கள் "எரியும் பனிக்காடு"நாவலில் ரத்தமும் சதையுமாய் இடம் பெற்றிருக்கின்றன.மொழிபெயர்த்த இரா.முருகவேளின் தமிழ்நடையில் முன் எப்போதோ கூலிகள் சிந்திய ரத்தவாடை அடிப்பதை படிக்கும் வாசகர் உணர முடியும்.பிஜித் தீவில் கூலிகள் ஆகப் பிழைக்கப் போன நம் தமிழ்ப்பெண்கள் சிந்தும் கண்ணீர் பாரதியை விம்மி விம்மி விம்மி விம்மி அழச் செய்தது.அந்தக் கவிதையின் தாக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் துயரப்படும் பெண்களின் காப்பாளர் ஆகத் தன்னைக் கற்பித்துக் கொள்ளும் சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி பற்றி மைதிலி சிவராமன் எழுத்து வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன. ஆழி சூழ் உலகு நாவல் படிக்கும் ஒருவர் ஆழ்கடலில் கட்டுமரங்கலேறிச் சென்று மீன்கள் பிடிக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மீனவ மக்களின் துயரக் கடலில் மூழ்கிப் போவார்."அந்த தூரத்து மலைகளின் நடுவே யாரோ மெல்ல விசும்பி அழும் குரல் கேட்டு"'உங்கள் மனம் நடுங்கச் செய்வார் நா.பா.நோயால் துடிக்கும் கணவனின் பசிப்பிணியைத் தீர்க்கத் தன கற்பைப் பணயம் வைக்கும் மனைவி புதுமைப்பித்தனின் எழுதுகோலில் உயிரோவியமாய் எழுவாள். "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம்,எம் குன்றும் உடையேம்;இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இல்லாமல்,எம் குன்றும் இல்லாமல் வாடி நிற்கிறோம்"என்று மனம் நோகும் பாரி மகளிரின் சோகம் நம்மணப் பரப்பில் கொண்டு வரும் வெண்ணிலா கண்ணீர் சிந்தி வருவதை அறிவது சிரமமாய் இருக்காது.இப்படிப் படைப்புகளின் பின்னால் உறைந்து கிடக்கிற வலிகள் எண்ணற்றவை.எழுதும் படைப்பாளிகளின் உயிரைத் தின்று வடிவம் கொள்கிரவை. "என் உயிரைக்கொட்டி நான் இசைத்த பாடல் உனக்குக் கேட்காமல் போனது எப்படி?" என்று வியக்கிறது ஜூலிஸ் புசிக்கின் மனம்..........இந்த "நிலம் மறுகும் நாடோடிகளின்" துரப்பாடல்களை இசைக்கும் "கண் தெரியாத இசைஞ்ன்" யார் கண்ணிலும் படாமலே மறைந்து போவதை எப்படி எழுதுவது?...........................!
Friday, January 1, 2010
indru puthaandu piranthathu............!
பிரபஞ்சனின் உலகம் பற்றிய பதிவுக்குப் பின் இன்று மீண்டும் தொடர்கிறேன்.இன்று புத்தாண்டு பிறந்திருக்கிறது.ஒரு புதிய நாளின் பிறப்பு பற்றி எழுதும் வேளையில் "பிரபஞ்சப் பூன்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்திருக்கிறது"என்று நா.பா. எழுதுவார்.பழைய ஆண்டு முடிந்து ஒரு புதிய ஆண்டு பிறந்திருக்கும் இந்த வேளையில் இந்தப் பிறப்பு பற்றி எப்படி சொல்லுவார்?டிசம்பர் மாதம்தான் அவரது பிறந்த நாளும்,மறைந்த நாளும் என இரண்டுமே வருகின்றன.இப்போது அந்த இரு நாட்களும் கடந்து சென்று விட்டன.அவரை பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தில் எனது நினைவுகள் சிலவற்றைப் பதிவு செய்ய ஒருவாய்ப்புக் கிடைத்தது. அவர் வாழ்ந்த அந்த வீட்டில்,அவர் பயன்படுத்திய மாடியறையில்,அவர் சேர்த்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களின் நடுவே அவரின் புகைப்படம் என் துயரத்தைக் கிளறி விட்டது.அழுகை குமுறிக் கொண்டு வந்தது.அந்த மனநிலையில் இருந்து விடுபட்டு என் கருத்துக்களைச் சொல்லும் வரை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அன்பர் திரு.ரங்கராஜ்.நா.பா.வின் மென்மையான படைப்புலகம் இன்றும் ஏராளமான வாசகர்களின் மனப்பரப்பில் அழியாத உயிரோவியமாகவே திகழ்கிறது. "தீபம்" அவரின் இலக்கிய நினைவாலயம்.அவரின் நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் இவை பற்றி விமர்சனக் கருத்துக் கொண்டிருப்பவர்கள் கூட தீபத்தின் பங்களிப்பு பற்றிக் குறை சொல்ல மிகவும் யோசிக்க வேண்டியிருக்கும்.தீபம் இலக்கியக் குடும்பத்தின் எண்ணற்ற உறுப்பினர்கள் என்றும் அழியாத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்......! இன்று ஒரு கணம் யோசித்தால் இந்த நினைவுகள் காலப் பெருவெளியின் மிகச் சிறிய ஒரு துளியாகவே தென்படுகின்றன.இப்போது தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் துயரங்கள் நம் மனப் பரப்பில் பெரும் சுமையாகவே அழுத்துகின்றன.மீள முடியாத சுமை அது.என்றும் பரிகாரம் காண முடியாத பெரும் பாவம்.அதைஎந்த வார்த்தைகளில் சொல்லுவது என்று யோசித்தால்,விடைகானவியலாத ஒரு புதிர்...................!
Sunday, November 22, 2009
iruttu enakkup pidikkum............!
இருட்டு என்றாலே எனக்குப் பயமாயிருக்கும் என்று நம்மில் பலர் பல சமயங்களில் சொல்வதுண்டு.இருள் என்பதை நாம் பயப்படும்படியான் விசயங்களுடனே சேர்த்துப் புரிந்து வைத்திருப்பதின் விளைவு இது.சிறு வயதில் இருந்து நம் வீட்டுப் பெரியவர்களும் இருட்டிய பின் எங்கேயும் தனியாகப் போகக் கூடாது என்று நம்மை பயமுறுத்திக் கொண்டேதான் இருந்திருப்பார்கள்.நாம் கேள்விப்படும் பேய்க்கதைகளும்,கொலை , கொள்ளை போன்ற செய்திகளும் நமது பயத்தை இன்னும் அதிகப்பட்துகின்றன.ஆனால் இருட்டு என்பது நாம் விரும்பக் கூடிய ஒன்று என்று யாராவது சொன்னால் நீங்கள் அதை ஒப்புக் கொள்வீர்களா?இருளின் இனிமைகள் பற்றி யாரேனும் எழுதினாலோ பேசினாலோ அது சற்று வியப்புக்குரிய ஒன்றுதானே?தமிழின் நவீனஎழுத்தாளர்களில்சிறந்த ஒருவரும், ,"பூ' படத்தின் திரைக்கதைக்காக இந்த ஆண்டின் சிறந்த திரைக்கதை ஆசிரியர் விருது பெற்றவருமான ச.தமிழ்ச்செல்வன் "இருட்டு எனக்குப் பிடிக்கும்"என்ற தலைப்பிலே ஒரு புத்தகமே எழுதியிருக்கிறார்."இருள் என்பது குறைந்த velicham "என்று பாரதியின் ஒரு வரி சொல்லும்.ஜெயா மாதவன் என்கிற கவிஞர்,குழந்தை இலக்கிய படைப்பாளி எழுதி இருக்கும் கட்டுரை ஒன்றில் தான் இரவுகளை விரும்புவதாக எழுதி இருக்கிறார்.அவரின் வார்த்தைகளில் சொல்லும் இந்த உணர்வுகளைப் பாருங்கள்:"இருட்டியதும் பறவைகள் தம் கூடுகளில் அடைந்து விடுகின்றன.மாடு,கன்றுகள் வீடு திரும்பி விடுகின்றன.இரவு வானில் நிலவு மெல்ல எட்டிப் பார்க்கும்.அதனுடன் கண் சிமிட்டும் நட்சத்திரங்கள் நம் மனதில் இனம் புரியாத பரவசத்தை நிரப்பி விடுகின்றன. இரவின் ஓசைகள் நம் புலங்களில் ஒரு கூர்மையைக் கொண்டு வந்து விடுகின்றன.பகலில் நாம் தேவையோ தேவை இல்லாதவையோ ஏதானும் வேலைகளைச் செய்து கொண்டேதான் இருப்போம்.நமது உலகில் வெளிச்சத்தின் இயல்பு அது.அது நம்மை இயங்கிக் கொண்டே இருக்கச் செய்யும்.நம் வாழ்க்கைத் தேவைகளுக்காக இந்த மாதிரி இயக்கம் தேவையை இருந்தாலும் இரவின் தனிமையில் நாம் வேறொரு உலகில் சஞ்சாரம் செய்கிறோம் ........" இன்னும் இப்படி நிறைய எழுதுகிறார் அவர். ."இன்ப இரவு " என்பது பாரதிதாசன் எழுதிய கவிதை naadakam.ippadiyaaka pala perum padaippaalikal iravai virumbum azakaip paarunkal.enakkum kooda iruttu pidikkum.unkalukku?
Monday, November 16, 2009
சாதாரண மனிதர்களின் அசாதாரண சேவைகள்...
நேற்று கவிஞர் யுகபாரதியுடன் ஒரு மணி நேரம் உரையாடல் நிகழ்த்த முடிந்தது.அவர் சொன்ன ஒரு செய்தி மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. அவர் நெடுக் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு பற்றியது அது."வெளிச்சம்" என்ற ஒரு சேவை அமைப்பு நடத்திய அந்த நிகழ்வில் ஐம்பது மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.அவர்கள் விளிம்புநிலை மனிதர்கள் என்று நாம் கூறுகிற பிரிவினர். எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் இந்த சேவை அமைப்பின் உதவியை மட்டுமே கொண்டு பட்டம், பட்டயம் போன்று கல்வித் தகுதி பெற்று விட்ட மாணவர்கள். இவர்கள் கல்வி பெற வேண்டும் என்று பாடுபட்டவர் இந்தச் சேவை அமைப்பின் நிறுவனர் ஆக உள்ள ஒரு பெண். அவர் மாணவர்களின் கல்விக்காக அலைந்து திரிகிற வேளையில் தங்க இடம் கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் கூடத் தன் மாணவர்களுடன் தங்கி இருக்க நேர்ந்திருக்கிறது. இந்த வகையில் படித்த அம்மாணவர்கள் இப்போது தங்களைப் போல உள்ள பிற மாணவர்களின் கல்விக்குப் பாடுபடுகிறார்கள். என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அந்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்து இன்னும் இருபது பேருக்கு பீஸ் கட்டுகிற ஒரு மாணவனை பற்றிச் சொன்ன சமயம் கண்கள் குளமாகின. வேதனை என்ன என்றால் இந்த மாணவர்களின் நிலைமை நன்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் படிக்கும் நிறுவனங்கள் இந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒரு பைசா கூடக் குறைத்துக் கொள்வது இல்லை. தனது கல்விக்கு, பூஜை செய்து கிடைக்கும் அர்ச்சனை தட்டுக் காசுகளைக் கொண்டு உதவிய ஒரு பூசாரி பற்றி மனம் நெகிழ்ந்து சொன்னார், யுகபாரதி.தன "நடைவண்டி நாட்கள்" நூலில் இது பற்றி எழுதி இருப்பதாகவும் சொன்னார். கேட்கும் போதே மனம் சுமையாகி கனக்கிறது. "இந்த நாட்டில் மட்டும் தான் படிப்பதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கிறது" என்றார் அவர். இன்று மிக வெற்றிகரமான பாடல் ஆசிரியர் ஆகி விட்டாலும் தன முந்தைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில் தயக்கம் எதுவும் இல்லை அவரிடம். இந்த அனுபவம் எனது எழுத்தறிவுப் பணியில் நான் பெற்ற பல அனுபவங்கள் குறித்து நினைவு கூர்ந்து நெகிழும் வாய்ப்பைத் தந்தது. கிராமப் புற மக்கள் புதிதாக எழுதப் படித்துத் தெரிந்து கொண்டு முதல் முதலாக சில எழுத்துக்களை எழுதிக் காட்டும் வேளையில் அவர்களின் கண்களில் மின்னும் மகிழ்ச்சிப் பிரவாகம் நம்மை மலைக்க வைக்கும். எழுத்தறிவின் அவசியம் பற்றி அவர்கள் நடுவே முதல் முதலாகக் கலை நிகழ்ச்சி நடத்திய கலைக்குழுவிற்கு இரவு உணவை கிராம மக்களே சில சமயம் வழங்குவது உண்டு. அவ்வாறு உணவு போடும் அளவுக்கு அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. மிக எளிய மனிதர்கள் அவர்கள். அந்தக் குடும்பம் முழுவதுமே பரிமாறும்.உணவை முடித்துக் கொண்டு வெளியே வரும் வேளையில் அக்குடும்பத்தினர் கண்களில் தெரியும் பெருமிதம் இருக்கிறதே, அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. கடந்த பத்தொன்பது ஆண்டுகள் இந்தப் பணியில் ஈடுபடுவதற்குக் காரணம் இந்த மாதிரிச் சாதாரணமானவர்கள் செய்ய முன்வரும், செய்து கொண்டே இருக்கும் அசாதரணமான சேவைகளைத் தினமும் நேரடியாகப் பார்க்கும் ஒரு வேலையாக அது இருந்ததே. வேறென்ன சொல்வது?...!
Friday, November 13, 2009
பயணங்கள் முடிவதில்லை...
திங்கள் அன்று எதிர்பாராமல் கோவைக்குப் பயணிக்க நேர்ந்தது.அம்மா கீழே விழுந்து விட்டார்கள்.மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது.பொள்ளாச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் அம்மாவுக்கு இந்த வயதில் இப்படி ஒரு சோதனை. எப்போதுமே எங்கள் ஊருக்குப் போவது என்றால் எனக்கு மிகப் பிடிக்கும்.பூசாரி பட்டியில் இரங்கி நடந்தே போவது இன்னும் அதிகப் பிடித்தம்.சென்ற முறை என் இடுகையில் ஊர் சுற்றிப் புராணம் பற்றி எழுதி இருந்தேன்.அந்தப் புத்தகம் படிக்கும் முன்னரே ஊர் சுற்றுவதில் பெரும் ஆர்வம் உடையவன் என்றாலும் அதன் பிறகு இன்னும் பல மடங்கு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.ஒரு முறை எட்டாம் வகுப்பு படிக்கையில் கோடை விடுமுறை வந்தது. அந்த லீவில் கேரளாவில் இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. கொச்சின் அருகே எர்ணாகுளத்தை அடுத்த குட்டித் தோடு என்ற ஒரு சின்ன ஊரில் பெரியப்பா இருந்தார்.அந்த ஊரின் வெளியே சின்ன ஆறு போல கடல் நீர் ஓடும் காயல் என்ற நீர் ஓடை ஓடிக் கொண்டிருக்கும். படகுகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.அந்த ஊரில் சுமார் ஒன்றரை மாதம் வரை இருந்தேன். இன்னும் பசுமையாக இருக்கிற நினைவுகளை அந்த ஊரில் இருந்து அப்போது அந்தச் சிறு வயதில் சுமந்து கொண்டு திரும்பி இருந்தேன். இருக்கையில் பார்த்த மூன்று மலையாளப் படங்களில் இரண்டு நன்றாக நினைவு இருக்கிறது. ஒன்று எம்.டி.வாசுதேவன் நாயரின் "இருட்டிண்டே ஆத்மாவு".மற்றது "கனக சலங்கை"இந்தப் படம் யாருடையது என்பது நினைவு இல்லை.ஆனால் இருளில் ஆத்மா என்ற படம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.மன நிலை சரி இல்லாத ஒரு இளைஞனின் கதை இது.கனக சலங்கையின் கதை இசையார்வம் மிக்க நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கதை என்று மங்கலாக கொஞ்சம் நினைவு வருகிறது. அங்கு பார்த்த படங்கள், படகுகளில் சரக்குகளையும் மனிதர்களையும் ஏற்றிக் கொண்டுசெல்லும் கேரளா படகோட்டிகள், அந்த ஊருக்கு அருகில் கண்ட ஒரு கோவில் திருவிழா, அலங்கார யானைகளின் முகபடாம்,வான வேடிக்கைகள், தென்னை மரங்கள் இனிமை கொஞ்சும் மலையாள மொழி,குழாய்ப்புட்டு, இப்படியாக நினைவு அடுக்குகளில் பதிந்தவற்றில் பல நினைவுகளை ஊர் திரும்பிய பிறகு "மலை நாட்டுத் தென்றலில்..." என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரையாக எழுதினேன். எந்தப் பத்திரிகையில் என்று கேட்டு விடாதீர்கள்.நான் லீவு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குப் போனதும் அங்கு தினமும் பயிற்சி நோட்டில் ஒரு பக்கம் நல்ல கையெழுத்தில் எழுதிக் கொண்டு வரும்படி ஆசிரியர் சொல்லுவார். அந்த நோட்டில்தான் என் பயணக் கட்டுரைத் தொடர் இடம் பெற்றது. இப்போது உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டுமே?ஆசிரியர் ஒன்றும் சொல்லாமலா இருந்தார் என்ற சந்தேகம் வருவது நியாயம்தானே?ஆனால் தினமும் நான் என் பயண அனுபவங்களை எழுதுவேன். நோட்டு ஆசிரியர் பார்வைக்குப் போகும். சிவப்பு மையில் ஒரு ரைட்போட்டு அவரின் இனிடியலையும் போடுவார் அவர். ஒருக்கால் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படிக்காமலே திருத்தினாரோ? அது சரி, வகுப்பில் இருக்கும் அறுபது மாணவர்கள் தினமும் எழுதும் அவ்வளவு கட்டுரை நோட்டுகளையும் படித்துப் பார்த்துக் கை எழுத்துப் போடுவது நடக்கிற காரியமா?
Saturday, October 24, 2009
இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும்..
தீபாவளிப் பண்டிகையை ஒட்டி என் சிந்தனைகளில் சில யதார்த்த நிலைமைகள் பற்றிய கவலைகளைப் பதிவு செய்திருந்தேன்.உலகம் முழுதும் பசித்தவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருப்பது பற்றி ஒரு செய்தி நம் கவனத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டதை இந்தப் பகுதியில் பதிவு செய்த போது அது சில ஈர மனங்களில் பாதிப்பை உண்டாக்கும் என்று எதிர் பார்க்கவில்லை.அது போலவே இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகர் மன்னா தே பற்றியும் பதிவு செய்து இருந்தேன்.அந்தக் குறிப்பும் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்று தெரிகிறது.மனிதர்களின் வாழ்வில் இசையும் பசியும் அடையும் முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.
இசையாய் தமிழாய் இறைவனைக் காண்கிற மரபு நமது. மாசில் வீணையும் என்று தேவாரம் பாடும்.என் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்கிறார் கண்ணதாசன், ஏழாம் கடலும் வானும் நிலவும் என்உடன் விளையாடும், இசை என்னிடம் உருவாகும் என்று அதே பாடலின் வரிகள் தொடரும். துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்பார் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். என் உணர்வுகளை எல்லாம் கொட்டி நான் பாடியிருந்தும் அதை நீ எப்படிக் கேட்காமல் போனாய் என்று வியந்து போகிறார் தூக்கு மேடைக் குறிப்பில் ஒரு போராளி.இந்த மாதிரி ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் காண முடியும்.
மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் இசை ஆர்வலர்களாக இருப்பது காண முடியும.மோக முள் தந்த தி.ஜானகிராமன், புல்லின் இதழ்கள் எழுதிய கே.பி.நீலமணி, இந்த மாத்ரி தமிழ்ப் படைப்புகள்; கண் தெரியாத இசைஞன் என்ற சோவியத் நாவல் போல பல சான்றுகள் கூறலாம். மன்னா என்கிற வங்க மொழிப் பாடகரின் தொண்ணூறு ஆண்டு கால வாழ்க்கையில் இசைபற்றுதான் அவரை உந்தித் தள்ளுகிற விசையாக இருந்திருக்கிறது என்பதை அவரின் நேர்காணல் சொல்கிறது. இன்றைய இளம் தலைமுறை இசை கலைஞரான யுவன் சங்கர் ராஜாவின்வார்த்தைகளில் சொன்னால் இசையால் நான் அனைவரையும் சென்று அடைய முடியும்;அனைவர் நடுவேயும் மகிழ்ச்சியைப் பரப்ப முடியும் என்பது தான் செய்தி. இது தன அப்பா இளைய ராஜாவிடம் கற்றுக் கொண்டது என்கிறார் யுவன்.சொல்லி வைத்தார்ப் போல் இசைக்கலைஞர்கள் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது, அதில் வியப்புக்கு ஒன்றுமில்லைதானே?
இசையாய் தமிழாய் இறைவனைக் காண்கிற மரபு நமது. மாசில் வீணையும் என்று தேவாரம் பாடும்.என் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்கிறார் கண்ணதாசன், ஏழாம் கடலும் வானும் நிலவும் என்உடன் விளையாடும், இசை என்னிடம் உருவாகும் என்று அதே பாடலின் வரிகள் தொடரும். துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்பார் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். என் உணர்வுகளை எல்லாம் கொட்டி நான் பாடியிருந்தும் அதை நீ எப்படிக் கேட்காமல் போனாய் என்று வியந்து போகிறார் தூக்கு மேடைக் குறிப்பில் ஒரு போராளி.இந்த மாதிரி ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் காண முடியும்.
மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் இசை ஆர்வலர்களாக இருப்பது காண முடியும.மோக முள் தந்த தி.ஜானகிராமன், புல்லின் இதழ்கள் எழுதிய கே.பி.நீலமணி, இந்த மாத்ரி தமிழ்ப் படைப்புகள்; கண் தெரியாத இசைஞன் என்ற சோவியத் நாவல் போல பல சான்றுகள் கூறலாம். மன்னா என்கிற வங்க மொழிப் பாடகரின் தொண்ணூறு ஆண்டு கால வாழ்க்கையில் இசைபற்றுதான் அவரை உந்தித் தள்ளுகிற விசையாக இருந்திருக்கிறது என்பதை அவரின் நேர்காணல் சொல்கிறது. இன்றைய இளம் தலைமுறை இசை கலைஞரான யுவன் சங்கர் ராஜாவின்வார்த்தைகளில் சொன்னால் இசையால் நான் அனைவரையும் சென்று அடைய முடியும்;அனைவர் நடுவேயும் மகிழ்ச்சியைப் பரப்ப முடியும் என்பது தான் செய்தி. இது தன அப்பா இளைய ராஜாவிடம் கற்றுக் கொண்டது என்கிறார் யுவன்.சொல்லி வைத்தார்ப் போல் இசைக்கலைஞர்கள் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது, அதில் வியப்புக்கு ஒன்றுமில்லைதானே?
Subscribe to:
Posts (Atom)

