Wednesday, January 29, 2014

புதிய களங்களும் புதிய முயற்சிகளும்

இந்தப் பதிவில் இடுகை இட்டு நீண்ட நாட்கள் ஆகி விட்டன.புதிய ஆண்டின் முதல் பதிவு இது.புத்தகக் கண்காட்சியில் எனது மொழிபெயர்ப்பு நூல் ஒன்று வந்திருக்கிறது.முனைவர் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய "தமிழகத்தில் தேவதாசிகள்" என்ற புத்தகத்தை நான் மொழிபெயர்த்திருக்கிறேன்.வெண்ணிலா முருகேஷ் ஆகியோரின் அகனிவெளியீடாக வந்திருக்கிறது.தமிழ்நாட்டின் பண்பாடு வரலாற்றில் மிக முக்கியமான ஒரு அம்சம் இந்த தேவதாசிகள் என்ற நிறுவனம்.இது தொடங்கிய போது மிக உயரிய விதத்தில் கலை,இலக்கியம்,நடனம் போன்ற அம்சங்களின் வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளது.கோயில் என்ற நிறுவனம் சார்ந்தே தேவதாசிகள் இயங்க வேண்டி இருந்ததால் அவர்களை சுரண்டி எல்லா விதமான ஊழல்களும் வளர்ந்து பெருகி விட்டன.அன்றைய நிலப்பிரபுத்துவ அமைப்பில் அரசின் வருவாய்க்கு ஒரு முக்கிய ஆதாரமாக இந்த தேவதாசி அமைப்பு விளங்கி வந்திருக்கிறது.அதன் தோற்றம், வளர்ச்சி,பின் காலப்போக்கில் அதன் சரிவு இறுதியில் அதன் முடிவு என்று எல்லா அம்சங்களையும் இந்த நூல் ஆராய்கிறது.ஏராளமான ஆவணங்களின் துணை கொண்டு எளிய முறையில் இந்த நூலை சதாசிவம் எழுதியிருக்கிறார்.