Showing posts with label செய்திகள். Show all posts
Showing posts with label செய்திகள். Show all posts

Thursday, January 27, 2011

ஆண்டன் சேகாவும் நூற்றி ஐம்பது ஆண்டுகளும்...

ரஷியாவின் மூலம் உலகம் பெற்ற நன்மைகள் என்ன என்ன என்று பார்த்தல் அவசியம்.குறிப்பாக இலக்கியம் என்ற வகைப்பாட்டில் அந்த நாட்டின் பங்களிப்பு என்பது மிகப் பெரும் அளவுக்கு மதிப்பிட வேண்டிய ஒன்று.ஆண்டன் செகாவ் என்ற ரஷ்ய இலக்கியப் படைப்பாளியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு பிறந்த தினம் ஜனவரி ௨௯ அன்று வருகிறது.அந்த தினம் கொண்டாடப் பட வேண்டிய ஒரு நாள்.அது தொடர்பாக சென்னை கூட்டாஞ்சோறு அரங்கு,த.மு.எ.ச.வும் சேர்ந்து நடத்திய நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அன்று பேசிய பேச்சு மிக அற்புதமான ஒன்று.ஒன்றரை மணி நேரம் அவர் பேசியதை குறிப்பு எடுத்து எழுத்து வடிவம் கொடுத்துப்பார்த்த வேளையில் அது பதினோரு பக்கக் கட்டுரையாக வந்தது.ராமகிருஷ்ணன் நண்பர்கள் அந்தப் பதிவை வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.கொடுத்தேன்.ஆண்டன் செகாவ் எழுதிய ஆறாம் வார்ட் நாவலையும் பொதுவாக சோவியத் இலக்கியங்களையும் பற்றி நானும் அன்று பேசினேன் என்றாலும் நிகழ்வின் சிகரமாக எஸ்.ரா.வின் பேச்சு அமைந்தது.செகாவின் பச்சோந்தி,அவரின் துயர மயமான வாழ்க்கை,ஆனால் அவருக்கு வாய்த்த அபாரமான நகைச்சுவை உணர்ச்சி,அவரை வதைத காச நோய்,அவர் எழுதிய இருநூட்றுஆறு சிறுகதைகள்,அவர் பார்த்த மருத்துவத் தொழில் மூலம் அவர் செய்த சேவை,டோல்ஸ்டோயும்,அவரும் ஆற்றிய சமூகப் பணிகள்,இறுதி வரை "மூணு ரூபிள்"டாக்டர் ஆகவே அவர் ஏழை மக்களுக்கு ஆற்றிய பணிகள் பற்றியெல்லாம் எஸ்.ரா.விவரித்த விதத்தில் அவையோர் கட்டுண்டு கிடந்தார்கள்.வாசிப்பு ஒரு சுகம் என்றால் வாசித்த உன்னதப் படைப்புகளைப் பற்றி அவற்றின் நயங்கள் ததும்ப எடுத்துச் சொல்லவும் அதைக் கேட்டு இன்புறவும் வைப்பது இன்னொரு சுகம்."மனிதர்களின் துயரங்கள் மொழிகடந்தவை.அவற்றைப் பற்றி எழுதியவர்கள் உன்னதப் படைப்பாளிகள்.ஆண்டன்செகவ் அப்படி ஒரு படைப்பாளி"என்று எஸ்.ரா.முடித்தவிதம் அற்புதம்...........!

Friday, December 31, 2010

நாஞ்சில் நாடனுடன் சில மணி நேரங்கள்

இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.அவரின் நேர்காணலை செம்மலர் இதழுக்காக நான் எடுக்க வேண்டி வந்தது.ச.தமிழ்ச்செல்வன் சொன்னதின் அடிப்படையில் இந்த நேர்காணலை நண்பர் மணி கோவையில் நாஞ்சினாடனின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.டிசம்பர் இருபத்தியாறாம் நாள்இதற்காக கோவை போனேன்.அன்று பல வேலைகள் இங்கு இருந்த போதும் நாஞ்சில் நாடன் என்ற ஆளுமை என்னை ஈர்த்தது.தீபம் இதழில் வந்த அவரின் முதல் சிறுகதையில் இருந்து நான் அவரின் படைப்புகளை வாசித்து வருகிறவன்.மாமிசப் படைப்பு என்ற அவரின் நாவல் தீபத்தில் தொடராக வந்தது.தலை கீழ் விகிதங்கள் என்ற நாவலில் அவர் அடைந்த வெற்றி மிகப் பெரியது.அன்றும் இன்றும் ஒரே சீராக எழுதிக் கொண்டிருக்கும் ஒருசிலரில் இவரும்  ஒருவர்.தீதும் நன்றும் என்ற கட்டுரைத் தொடரின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் வகையில் சமகாலப் பிரச்னைகள் பற்றி இவர் எழுதியது பலரின் கவனதயை ஈர்த்து செயல்ரீதியான பல எதிர்வினைகளை ஏற்ப்படுத்தியது.குறிப்பாக பெண் மாணவிகள் பயிலும் பள்ளியில் கழிப்பறை வசதிகள் எவ்வளவு மோசமான வகையில் இருக்கின்றன என்று இவர் பதிவு செய்தது தமிழ்நாடு முழுக்க எதிரொலிகளை உண்டாக்கியது.தான் வாழும் காலத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையில் எழுதுவது சிலரால்தான் முடிகிறது.அந்த வகையில் நாஞ்சில் நாடன் ஒரு மாபெரும் படைப்பாளி.செம்மலர் பொங்கல் மலரில் அவரின் நேர்காணல் வந்த பிறகு என்ன விதமான எதிர்வினைகள் வருகின்றன என்று பார்க்க வேண்டியுள்ளது.                     இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கு என் சிந்தனைகளைப் பதிவு செய்ய அமர்ந்த வேளையில் இந்த வருடம் முழுக்கவே பதினாறு பதிவுகள் மட்டுமே என்பது சட்று ஆயாசமாக இருக்கிறது.இன்று வருடத்தின் கடைசி நாள்.நாளை புத்தாண்டு பிறக்கிறது.வரு ஆண்டில் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.பார்ப்போம்..............!

Tuesday, November 23, 2010

கனவுகளின் காலம்..........

ஆகஸ்ட் மாதம் இந்தப் பதிவுப் பகுதியில் எனது டெல்லிப் பயணம் பற்றி எழுதிய பின் இன்றுதான் மீண்டும் எழுத முடிந்தது.வேலைகள் ஒரு புறம்,இந்தப் பதிவுகளின் பயன்பாடு பற்றிய கேள்விகள்  குடைந்து கொண்டே இருந்தது இன்னொரு புறம். இளம் பிராயத்தில் என்னை எழுதத் தூண்டிய ஒரு எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் திண்டுக்கல் காரர்.அவருக்கு இந்த ஆண்டில் முதன் முறையாக நிறுவப் பட்ட சாகித்ய அகாடமியின் குழந்தை இலக்கிய விருது வழங்கப் பட்டு உள்ளது.அவர் எழுதிய "அந்தோணியின் ஆட்டுக்குட்டி"என்ற புத்தகம் அப்பரிசைப் பெற்று உள்ளது.இந்த நவம்பர் பதினான்காம் தேதி டெல்லியில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.அவரின் நீண்ட எழுத்துலக வாழ்க்கையில் என் பரிச்சயமும் ஒரு சிறு பகுதியில் இடம் பெற்று இருக்கிறது.தீபம்,பிரசண்ட விகடன்,ஆனந்தபோதினி,அமுதசுரபி,கண்ணன்,கல்கி,கோகுலம்,குமுதம்,குங்குமம் இப்படி எண்ணற்ற பத்திரிகைகளில் அவர் கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாக எழுதி வருகிறார்.கண்ணன் இதழில் அவர் எழுதிய கதைகளைப் படித்துத்தான் அவர் நம்ம ஊர்க்காரர் போல இருக்கே என்று அறிந்து அவரைத் தேடி நான் அறிமுகம் செய்து கொண்டேன்.அதன்பிறகுதான் என் கதைகளைப் பிரசுரம் செய்ய வேண்டும் என்ற ஆவல் என் மனதில் சுடர்விட்டு எரிந்தது.அவர் தீபத்தில் எழுதிய "ஆற்றுச் சமவெளி நாகரிகம்"கதை தமிழ்க் கதைகளில் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று.அவர் ஒரு நல்லாசிரியர்.நாடகங்களை எழுதி இயக்குவதில் அவருக்கு அடங்கா ஆர்வம்.மொழியர் எழுதிய கஞ்சன் நாடகத்தை அவர் திண்டுகளில் அரங்கேற்றினார்.தஞ்சை நாடகப் பேராசிரியர் சே.ராமானுஜம் அன்று தலைமை வகித்தார் என்று நினைவு.இத்தனை ஆண்டுகள் களைத்து அண்ணா கமலவேலன் அவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சிதான்...இது கனவுகள் நனவாகும் காலம்!

Sunday, June 20, 2010

சாதாரண மனிதர்களின் விலைதான் என்ன?

போபாலில் இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷவாயுக் கசிவும் அதைத் தொடர்ந்து பதினாறாயிரம் பேர் ஒரே இரவில் மரணம் அடைந்ததும் இன்று உலகம் அறிந்த செய்திகள்.அந்தக் கொடுமை நிகழக் காரணமான அன்டர்சன் என்ற அமெரிக்கன் உட்பட பல உயர் அதிகாரிகள் இன்று சுதந்திரப் பறவைகள்.இவ்வளவு ஆண்டுக்காலம் நடந்த வழக்கும்,அதன் மீது வந்துள்ள தீர்ப்பும் இன்று மீண்டும் உலகை உலுக்கி இருக்கின்றன.அந்த இரவில் மடிந்து போன பல்லாயிரவர் தவிர இன்றளவும் அதன் பாதிப்பில் துன்புறும் பல லட்சம் பேருக்கு என்ன நிவாரணம் என்ற விவாதங்கள் சூடு பறக்கின்றன.உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் இந்த வழக்கு நீர்த்துப் போனது என்கிறார்கள்.தங்களின் தீர்ப்பு சரியே என்கிறார்கள் மாண்பமை நீதிமான்கள்.அமைச்சர்கள் குழு ஒன்று இப்போது மீளாய்வு நடத்திக் கொண்டு இருக்கிறது.இந்த நாட்டில் மட்டும் இன்றி எந்த நாட்டிலும் சாதாரண மனிதர்களின் உயிர்கள் கேவலம் கிள்ளுக்கீரை போலத்தான் கருதப்படுகின்றன.இந்த விவகாரம் முழுக்கப் படிக்கும் ஒரு சாதாரண மனிதன் எந்த நம்பிக்கையில் உயிர் வாழ்வான்?மனதி ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி இது ஒன்றுதான்.கோடிக்கணக்கான பேரின் கடும் எதிர்ப்புகளுக்கு இந்தப் பிரச்னையைக் கையாண்டவர்கள் சொல்லும் பதில்தான் என்ன?ஆண்டர்சன் என்ற கயவன் இந்தக் கொடும் விபத்துக்குப் பின் மிகப் பத்திரமாகத் தன நாட்டுக்குப் போய்ச் சேர உதவியவர்கள் யார்?இன்று நம் மனதில் தார்மீக நெறி சார்ந்துஎஞ்சி இருக்கும் உணர்வுகள் என்ன?ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வெறும் பிரமையா?கேள்விகள் குடைகின்றன.பதில்தான் கிடைப்பது இல்லை.

Saturday, January 16, 2010

சிவகுமாரும் சூர்யாவும்..........

இன்று திரைக்கலைஞர் சிவகுமார் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.நானும் துணைவியாரும் சென்று அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.ஒரு மணி நேரம் போனது தெரியாமல் ஓடி விட்டது.கம்பன் என் காதலன் என்ற தலைப்பில் அவர் நிகழ்த்தும் உரைகள் இப்போது குறுந்தகடு வடிவில் வந்துள்ளன.மனைவி,தாய் என்ற பாத்திரங்களை வகிக்கிற பெண்களை இந்த சமூகம் எப்படி மதிக்கிறது,எப்படி அணுக வேண்டும் என்று தன வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பேசுகிறார் சிவகுமார்.அந்தக் குறுந்தகடை முந்தைய சந்திப்பில் தந்தார். அதை நாஞ்சில் சம்பத்,சூர்யாவின் தமிழ் ஆசிரியர் மற்றும் நான்,சிவகுமார் ஆகியோர் அவரின் அலுவலகத்தில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது.ஒவ்வொரு மனிதனும் தன மனைவியின் பங்களிப்பு என்ன என்று மனப்பூர்வமாக உணர்வதற்கு அவரின் அனுபவப் பிழிவு உதவும்.இன்றைய உரையாடலின்மையமாக இந்தக் கருத்தே அமைந்தது.நாங்கள் விடைபெறும் வேளையில் சூர்யாவின் அனுபவப்பதிவான "இப்படிக்கு சூர்யா"என்ற புத்தகத்தைத் தந்தார்,திரு சிவகுமார்.வீடு வருமுன் இருபத்தைந்து பக்கங்கள் வரை படிக்க முடிந்தது.இன்று மிகப்பெரும் வெற்றிகளை திரையுலகில் அடைந்து விட்ட சூர்யா,தன சிறு வயதில் எந்த அளவுக்குத் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார் என்று படிக்கும் வேளையில் அது நம்பவே முடியாத ஒரு செய்தியாகவே இருக்கிறது.அனால் அவரே சொல்லும் செய்திகளை நம்பாமல் இருக்க முடியாது அல்லவா?சூர்யாவின் உணர்வுகளை எழுத்து வடிவில் தந்தவர் ஆர்.சி.ஜெயந்தன்.கல்கி இதழில் தொடராக வந்த சமயம்,ஓரிரு பகுதிகளைப் படித்து இருந்தாலும் இப்போது நூல் வடிவில் படிக்கும் போதுதான் அதன் வலிமை புரிகிறது.மிக வித்தியாசமான பதிவு.சிவகுமாரின் புதல்வர் அல்லவா?நூல் முழுவதும் படித்த பின் இன்னும் நிறையப் பதிவுகலைத்  தரக்கூடிய நூல்தான் இது.

Monday, October 5, 2009

வெள்ளமும் வேதனையும்

இன்றைய ஹிந்து படிக்கையில் ஆந்திரம்,கர்நாடக மாநிலங்களில் மழை வெள்ளம் வந்து அதனால் அங்கு மக்கள் படும் துரம் பற்றி செய்திகள், படங்கள் வெளி வந்துள்ளன. ஒவ்வொரு முறையும் இந்த நிலை ஏற்பட்டுக் கொண்டே இருந்தாலும் ஒரு சரியான தீர்வு இதுவரை காணப்படவில்லை.

வானில்  பறந்து வெள்ளப் பாதிப்புக்களை பார்வையிடும் பிரமுகர்கள் பற்றியும் ஒவ்வொரு முறையும் அதே பத்திரிக்கைகளில் செய்திகளும், படங்களும் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தனது சின்னஞ்சிறு குடிசை மழை நீரில் மூழ்கி விட்ட சோகம் நெஞ்சைத் தாக்கி உலுக்க கண்ணீர் வடிக்கும் ஏழைப்பெண் ஒருத்தியின் படம் நம் மனதில் இடி போல இறங்குவதை உணர்கிறோம். என்னதான் தீர்வு? 

Sunday, October 4, 2009

கவிதையும் வாழ்வனுபவமும்..

இன்றைய ஹிந்து-ல் கவனகர் கனிமொழியின் நேர்காணல் வந்திருக்கிறது. தனது கவி உலகம் பற்றி அவர் சொல்லியிருக்கும் அனுபவப் பதிவுகள் முக்கியமானவை. கவிதை என்பது தன் சுயம் உடனான தொடர்ச்சியான உரையாடல் என்கிறார் கனிமொழி. அது என்னைக் கண்டறியும் ஒரு நிகழ்வு என்பது அவரின் பதிவு.

"எனக்குள் மௌனம், அதைக் காண்பது; அதன் மய்யத்தில் நான்  இருப்பது ஒரு அனுபவம். எவ்வளவு அலைச்சல்களுக்கு நடுவிலும் எழுத முடியும். சில் நேரங்களில் உங்களால் அந்தஉலகத்தைக் கண்டு அறிய முடியாமல் போகக் கூடும்".

"சில நேரங்களில் வேறு ஒரு வடிவத்தின் மூலம் அதைக் கண்டறியலாம். அது இசையாக, ஒரு திரைப்படமாக, படிக்கக் கிடைக்கிற ஒரு புத்தகம் இப்படி ஏதேனும் ஒன்றாக அது இருக்கலாம்."

இப்படி கனிமொழியின் கவிதை வாழ்வனுபவம் சொல்லப்பட்டு இருக்கிறது. வேறு பல கவிஞர்களும் இந்த அனுபவத்தைக் கூறி இருக்கிறார்கள். உள்ள உணர்வுகள் வெளிப்படும் தருணம் எப்போது எப்படி அமையும் என்று யார் சொல்ல முடியும்?      

கல்வி உலகம்

இன்றைய ஹிந்து இலக்கிய விமர்சன இணைப்பில் மூன்று கட்டுரைகள் வாசிக்கையில் மிகவும் யோசிக்க வைத்தன. சமீபத்தில் உயர்த்தப்பட்ட கல்லூரி ஆசிரியர்களின் சம்பளம் பற்றி ஒரு கல்லூரி ஆசிரியர் எழுதி இருக்கும் கட்டுரை ஒன்று. வெறும் இரண்டாயிரம் ரூபாய் சம்பளம் வாங்க நேர்ந்த போது அதை நம்ப முடியாத ஒரே அதிசயமாக எதிர் கொண்ட ஒரு இளம் கல்லூரி ஆசிரியர், இருபது வருடங்களில் நாற்பது ஆயிரமும் அதற்கு மேலும் சம்பளம் பெரும் வாய்ப்புக் கிடைத்த போது அதை எதிர் கொள்ளும் விதம் இககட்டுரையில் பதிவாகி இருக்கிறது.

மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்று விரும்பி அதற்கு பாடுபடும் போது, மாணவர்களே அதை விரும்பாத நிலை இருப்பதாக அவர் கூறுகிறார். கல்லூரி நிர்வாகமும் சக ஆசிரியர்களும் கூட இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பு தருவது இல்லை என்கிறார். கடமை உணர்வும், சேவை செய்யும் மனமும் உடைய ஆசிரியர்கள் இப்படி மனச் சோர்வு அடையும் நிலை இருப்பது யார் கவனத்தில் பட வேண்டுமோ அவர்கள் கவனத்தை ஈர்க்குமா?

Sunday, September 27, 2009

மனிதர்கள் மகத்தானவர்கள்

இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் இரண்டு கட்டுரைகள் வெளியாகி உள்ளன. இரண்டு பேரின் மறைவு குறித்து - ஒருவர் இலக்கிய ஆய்வாளர்.  மற்றவர் சமூக சேவகர்.
முதலாமவர் மீனாக்ஷி முகர்ஜி. இவர் ஆங்கில  இலக்கிய உலகில் நம் நாட்டு எழுத்தாளர்கள் பலரின் சாதனைகள் பற்றி பல ஆய்வு நூல்களை எழுதி இருக்கிறார்.இவரின் படைப்புகள் இலக்கிய உலகில் தனது எழுத்துக்கள் மூலம் இந்திய எழுத்தாளர்களின் ஆங்கிலப்படைப்புகள் பற்றிப் பதிவு செய்திருக்கிறார்.
இன்னொருவர் நரேன் என்ற சமூக ஆர்வலர். தனது பணிகள் மூலம் சித்தூர் மாவட்டம் வேங்கடராம புறம் என்ற கிராமத்தில் தலித் மக்கள் வாழ்க்கைப் பிரச்னைகளில் தலையீடு செய்து வந்தார். நிலம் தான் அவர்களின் வாழ நாள் கனவு. அது நனவாக தனது வாழ நாள் முழுவதும் போராடி வந்திருக்கிறார். மிகப்பெரிய நிலவுரிமையாலரின் மகனாக இருந்த போதும், இந்த இலட்சியங்கள் இவரின் வாழ்நாள் செயல்பாடுகளில் முழு இடம் பெற்று வந்திருப்பது ஒரு அபூர்வமான விசயம்தான். மனிதர்கள் மகத்தானவர்கள் ஆக இருப்பது இம்மாதிரி ஆன சமயங்களில்தான்.