வாசிப்பு முகாம் ஒன்று இந்த மாதம் ஆறு,ஏழு தேதிகளில் ஈரோடில் நடந்தது.இது நான்காவது முகாம்.பிரேசில் நாட்டு கல்வி நிபுணர் எழுதிய எதார்த்தத்தை வாசித்தாலும்,எழுதுதலும் என்ற சிறு நூல் பற்றிய விவாதம்,ஜ்ஹோன் ஹோல்டின் ஆசிரியரின் டயரி என்ற நூல் பற்றிய விவாதம் இவைதான் நிகழ்வுப் பொருள்.பல நண்பர்கள் புதியவர்கள்.எனவே அதற்கு உரித்தான பிரச்னைகளுடன்தான் முகாம் நடந்தது.எனது புத்தகம் "உனக்குப் படிக்கத் தெரியாது" பற்றி அங்கு பலரும் சொன்னது வியப்பைத் தந்தது.பிரைரே எழுதிய நூலை நான் தமிழில் மொழி பெயர்த்திருந்தேன்.அந்த மொழிபெயர்ப்பில் இருந்த புரியாமைகள் பற்றி பலரும் சொன்னார்கள்.அந்த விமர்சனங்களின் அடிப்படையில் மீண்டும் அந்தப் பிரதியை மீளவும் எழுத வேண்டும்.இரண்டாம் நாள் அங்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் வந்திருந்தார்.ரயில் டிக்கெட் மாலை மூன்றரை மணிக்கு என்பதால் அவரின் உரையைக் கேட்காமல் கிளம்ப நேர்ந்தது.ஆனால் ரயில் அன்று இரண்டு மணிநேரத் தாமதமாக வரும் என்பதுமட்டும் முன்பே தெரிந்திருந்தால்....?நண்பர்களுடன் நிறைய உரையாட முடிந்தது ஆறுதல் அளித்தது.இன்று நண்பர் ஜ.மாதவராஜ் அவர்களுக்கு என் புத்தகங்கள் இரண்டை அனுப்பினேன்.அவருடன் பேசவும் முடிந்தது.நேற்று குற்றாலம் பேரா.பிரேமா அவர்களுக்கு 'உனக்குப் படிக்கத் தெரியாது'புத்தகம் கொடுத்தேன்.புத்தகம் பேசுது இதழில் உதய சங்கர் அவர்கள் இந்தப் புத்தகம் பற்றி ஒரு நல்ல அறிமுகக் கட்டுரை எழுதி இருந்தார். மாதவராஜ் என் படைப்புகளில் நீண்ட கால இடைவெளி இருப்பது பற்றிக் கேட்டார்.அந்த யோசனையுடனே வந்து மின்னஞ்சல் பார்த்த பொது எஸ்.வி.வேநுகோபாலன் அவர்கள் சேலம் ஆதவ் டிரஸ்ட் பற்றி எழுதிய குறிப்பு படித்தேன்.தசைச் சிதைவு நோயால் பா திக்கப் பட்ட நிலையிலும் இரு சகோதரிகள் வானவன்மாதேவியும் இயலிசை வல்லபியும் வாசிப்பின் விஸ்வரூப தரிசனம் கண்டிருப்பதுடன் மற்றவர்களுக்கும் அந்த தரிசனத்தைக் காட்டி மகிழும் அற்புதம் மனதை நெகிழச் செய்தது.மனம் வைத்தால் மனிதர்கள் என்னவெல்லாம் சாதிக்கிறார்கள்!
No comments:
Post a Comment