உமர்கய்யாமின் ஒரு பாடலை நான் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம்.எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்;அழுது கெஞ்சி நின்றாலும் அதிலொரு எழுத்தேனும் மாற்றிடுமோ என்று வருகிற அந்தப் பாடல் மனித வாழ்வின் விசித்திரங்களைச் சொல்லுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.படைப்பாளியின் கைகள் எழுதிக்கொண்டேதான் செல்லுகின்றன.அவன் படைக்கும் படைப்புகளில் வருகிற மனிதர்களின் வாழ்க்கை இந்த எழுத்தாளனின் கைகளில்.இவன்தான் படைக்கிறான் என்றாலும் தன படைப்பின் போக்கு இவனுக்கு ஓரளவுக்கு மேல் பிடிபடாமல் போகிறது.பாத்திரங்கள் தமது வாழ்க்கையைத் தாமே முடிவு செய்து விடுகின்றன.அவற்றின் போக்கு படைப்பவனுக்கே புதிராக இருக்கிறது.எழுதுபவனின் கைகள் எழுதிகொண்டேதான் இருக்கின்றன.இவனும் இவன் எழுத்தும் என்று அவை தலையில் அடித்துக் கொள்கின்றன.விலகி நின்று கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன.படைப்பாளி திகைத்துப் போகிறான். நான்தானே உன்னைப் படைத்தேன்,நீ இப்படிச் செய்யலாமா என்று இவன் பரிதாபக் குரல் எழுப்பினாலும் அவை இரக்கம் காட்டுவது இல்லை.என்ன ஒரு விசித்திரம்!வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்த கதைதான்!என்றாலும் இந்த எழுத்தாளன் சும்மா இருக்கிறானா?எவ்வளவு பட்டாலும் அறிவு வராத ஒரு ஜென்மம் உண்டு என்றால் அது இந்த எழுத்தாளன் ஒருவன்தான்.என்னவோ இவன் எழுதித்தான் இந்த உலகம் உய்யும் என்று அசட்டு நம்பிக்கை,அவ்வளவுதான்!எனவே அவனுடைய கைகள் எழுதிச் செல்கின்றன! வேறென்ன சொல்ல?
No comments:
Post a Comment