இன்று உதயசங்கர் பேசினார்.வசூரில் இருந்து கவிப்பித்தன் சொன்ன தகவலும் சேர்ந்து சில சிந்தனைகளைக் கிளறின.குழந்தைகள் மீதான கரிசனம் இன்று அதிகம் ஆகியிருப்பது பற்றி உதயசங்கரின் கட்டுரையை மையமாக வைத்து நான் ஒரு இடுகையில் பதிவு செய்திருந்தேன்.அது பற்றி நண்பர் விமலன் ஒரு வரிக்கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்,படைப்பு மனநிலைகள் ஒரு நேரம்போல மறுநேரம் இருப்பது இல்லை.ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை நமக்கு எண்ணற்ற படிப்பினைகளைத் தருகிறது.ஒவ்வொரு நிகழ்வும் படைப்பாளிகளின் மனக்கடலில் பெரும் அலைகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாக இருக்கின்றன எந்த ஒரு நிகழ்வும் இந்த சமூக அமைப்பின் விலைபொருள் என்ற வகையில் இந்த அமைப்பின் அரசியலும் அந்தப் படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன .எனவே ஒரு சமூகப் பொறுப்பு உள்ள எழுத்தாளன் தனது படைப்பில் இந்த மனித வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும் ஒரு கரிசனத் தொடுதான் எழுதியாக வேண்டும்.ஆனால் கலைப்படைப்பின் நுட்பங்கள்,அழகியல் அம்சங்கள் கொண்ட படைப்பாக அது இருக்க வேண்டும்.இது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை.எவ்வளவோ படைப்புகள எழுதிய பிறகும் எழுத உட்காரும் ஒவ்வொரு முறையும் இது பெரிய போராட்டமாகவே இருக்கிறது.படிக்கக் கிடைக்கிற ஒவ்வொரு நல்ல படைப்பும் நமது போதாமையை உணர்த்துவதாக இருக்கிறது.இவ்வளவு நாளாக எழுதியும் நாம் இப்படி ஒரு படைப்பைத் தந்து விட முடியவில்லை என்பது ஒரு சோகம்தானே?வெள்ளம்போலக் கிளம்பி வரும் எண்ணங்களைத் திட்டவட்டமான வடிவில் அழகியலுடன் தர முடியுமா?பாரதி வேண்டிய அந்த "மந்த்ரம் போல் வேண்டுமடா சொல் ஒன்று" என்பது நிறைவேறுமா?அலைமோதுகிற இந்த அகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறும் போதுதான் இந்த அவஸ்தையின் பரிமாணம் பிடிபடுகிறது.ஆனால்..அந்த ஒரு சொல் பிடிபடும் காலம் எப்போது?
No comments:
Post a Comment