Sunday, January 10, 2010
artham iyangum thalam
எந்த ஒரு படைப்புக்கும் அதன் மையமான பொருள் ஒன்று இருக்கவே செய்யும்.இது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று.அர்த்தம் என்று வடமொழியில் சொல்லப்படும் இந்தப் பொருள் எது?சொல்கிறவரின் மனதில் இருந்ததா?சொல்லில் வெளிப்பட்டதா?சொல் கடந்த ஒன்றா?எல்லாம்தான் "சொல்லினால் தொடர்ச்சி நீ,சொல்லப்படும் பொருளும் நீ.....சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ.......சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்......சொல்லினால் சுருங்க நீ நின் குணங்கள் சொல்ல வல்லரே....."என்று நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல் உண்டு.அது படைப்பிலக்கியதிற்கும் பொருந்தும் என்று இன்று கிடைத்த ஒரு நூலின் பதிப்புரையில் படித்தேன்."அர்த்தம் இயங்கும் தளம்"என்பது தலைப்பு.தேவகோட்டை வா.மூர்த்தி,'பாரவி',எஸ்.சுவாமிநாதன் ஆகிய மூன்று எழுத்தாளர்கள் "அர்த்தம்"என்பதன் அர்த்தம் பற்றிச் சிந்திதவற்றின் தொகுப்பு.மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன.இன்று காலையில் பாரவி என்கிற என் நீண்ட நாள் நண்பரைச் சந்திக்க நேர்ந்த பொது அவர் தந்த நூல் இது.பல்லாண்டு காலமாக தொடர்ந்து எழுதி வருகிறவர் பாரவி.குறைவாகவே எழுதி இருந்தாலும் மிக நவீன சொல்முறையில் எழுதுபவர்.இன்னும் இவரின் எழுத்துகள் ஒரு தொகுப்பாக வராமல் இருப்பது பற்றி எனக்கு மிகுந்த ஆதங்கம் உண்டு.இது பற்றி அவரைச் சந்திக்கும் போதெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறேன்.இன்றும் சொன்னேன்.இந்த நூலில் முதல் கட்டுரையின் பதினைந்து பக்கங்கள் வரை படித்ததில் சில முக்கியமான சிந்தனைகள் எழுந்தன.வா. மூர்த்தியும் நீண்ட காலமாகத் தமிழில் எழுதி வருபவர்தான்."தீபம்"இதழ் காலம் தொட்டு இவரின் படைப்புகள் எனக்கு அறிமுகம்.படைப்பாளியின் கருத்து என்ன என்று ஒரு படைப்பில் நமக்குப் புலப்படும் பொருளும்,அவரின் மனதில் இருக்கும் பொருளும் ஒன்றாகவே அமைந்து விட்டால் பிரச்னை இல்லை.அவ்வாறு இல்லாமல்,வேறு வேறு பொருள்கள் எழுந்தால்,என்ன செய்வது.அங்கு,நான் சொல்ல வந்தது இதுதான் என்று படைப்பாளி விளக்கம் அளிக்க நேர்கிறது.இந்த விளக்கம் அளிக்கும் செயலில் பொதுவாகப் படைப்பாளிக்கு ஆர்வம் இருப்பது இல்லை.அது சற்று கலைத்திறன் குறைவான செயல் என்றே கருதப்படுகிறது.இது போன்று பல கருத்துக்கள் இந்த நூலின் வாசிப்பைத் தொடர்ந்து என் மனதில் எழுந்தன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment