Friday, January 1, 2010
indru puthaandu piranthathu............!
பிரபஞ்சனின் உலகம் பற்றிய பதிவுக்குப் பின் இன்று மீண்டும் தொடர்கிறேன்.இன்று புத்தாண்டு பிறந்திருக்கிறது.ஒரு புதிய நாளின் பிறப்பு பற்றி எழுதும் வேளையில் "பிரபஞ்சப் பூன்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்திருக்கிறது"என்று நா.பா. எழுதுவார்.பழைய ஆண்டு முடிந்து ஒரு புதிய ஆண்டு பிறந்திருக்கும் இந்த வேளையில் இந்தப் பிறப்பு பற்றி எப்படி சொல்லுவார்?டிசம்பர் மாதம்தான் அவரது பிறந்த நாளும்,மறைந்த நாளும் என இரண்டுமே வருகின்றன.இப்போது அந்த இரு நாட்களும் கடந்து சென்று விட்டன.அவரை பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தில் எனது நினைவுகள் சிலவற்றைப் பதிவு செய்ய ஒருவாய்ப்புக் கிடைத்தது. அவர் வாழ்ந்த அந்த வீட்டில்,அவர் பயன்படுத்திய மாடியறையில்,அவர் சேர்த்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களின் நடுவே அவரின் புகைப்படம் என் துயரத்தைக் கிளறி விட்டது.அழுகை குமுறிக் கொண்டு வந்தது.அந்த மனநிலையில் இருந்து விடுபட்டு என் கருத்துக்களைச் சொல்லும் வரை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அன்பர் திரு.ரங்கராஜ்.நா.பா.வின் மென்மையான படைப்புலகம் இன்றும் ஏராளமான வாசகர்களின் மனப்பரப்பில் அழியாத உயிரோவியமாகவே திகழ்கிறது. "தீபம்" அவரின் இலக்கிய நினைவாலயம்.அவரின் நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் இவை பற்றி விமர்சனக் கருத்துக் கொண்டிருப்பவர்கள் கூட தீபத்தின் பங்களிப்பு பற்றிக் குறை சொல்ல மிகவும் யோசிக்க வேண்டியிருக்கும்.தீபம் இலக்கியக் குடும்பத்தின் எண்ணற்ற உறுப்பினர்கள் என்றும் அழியாத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்......! இன்று ஒரு கணம் யோசித்தால் இந்த நினைவுகள் காலப் பெருவெளியின் மிகச் சிறிய ஒரு துளியாகவே தென்படுகின்றன.இப்போது தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் துயரங்கள் நம் மனப் பரப்பில் பெரும் சுமையாகவே அழுத்துகின்றன.மீள முடியாத சுமை அது.என்றும் பரிகாரம் காண முடியாத பெரும் பாவம்.அதைஎந்த வார்த்தைகளில் சொல்லுவது என்று யோசித்தால்,விடைகானவியலாத ஒரு புதிர்...................!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment