Tuesday, November 4, 2014

புத்தகங்கள் வாசித்தலும்,அறிமுகமும்

பள்ளிக்கூட நாட்களில் இருந்து படிக்கும் பழக்கம் இருக்கிறது.வாய்த்த ஆசிரியர்களும் பள்ளி நூலகமுமே இதற்கு மிக முக்கியமான காரணம் என்றால்,இன்றுள்ள சூழலில் நம்புவதே கடினம்.ஆனால்,என் மனப் பரப்பில் அலையோடும் நினைவுகள் அந்த உண்மையை என்றென்றும் நினைவு படுத்திக் கொண்டே இருக்கின்றன.வாசிக்கும் ஒவ்வொரு புத்தகமும் எனது அறியாமைகளை எனக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றது.படிப்பதில் உள்ள மகிழ்வுக்கு சற்றும் குறைந்தது அல்ல,அந்தப் புத்தகங்களை மற்றவர்களுக்கு அறிமுகம் செய்வதில் உள்ள மகிழ்ச்சி.எனவேதான் கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் எழதி வரும் கட்டுரைகளில் மிகப் பெரும்பாலானவை நூல் அறிமுகக் கட்டுரைகளாக இருக்கின்றன.அவை விமர்சனங்கள் அல்ல.ஆய்வுரைகளும் அல்ல.அக்கட்டுரைகளை வெளியிடும் இதழ்கள் அவற்றை விமர்சன,மதிப்புரைக்கும் கட்டுரைகள் என்று ஏதேனும் தலைப்பிட்டிருந்த போதிலும்,என்னைப் பொறுத்தவரை அவை அடிப்படையில் ஒரு வாசகனாக நான் உணர்ந்ததை உணர்ந்தபடியே பதிவு செய்யும் முயற்சிகள் மட்டுமே.எந்த ஒரு நூலையும் ஒற்றை வரியில் தண்டம் என்றோ,குப்பை என்றோ தூக்கி எறிவதில் எனக்கு என்றுமே உடன்பாடு இல்லை.எவ்வளவு மோசமாக எழதப்பட்ட ஒரு நூலிலும் ஒரு வரியேனும் நமக்கு ஒர்  உண்மையை,ஒர் அழகை,ஒரு புதிய தகவலை நமக்கு வழங்குவதாக இருக்கும் என்பது என் அனுபவமும் நம்பிக்கையும் ஆகும்.ஆனால்,இந்த அணுகுமுறைதான் சரி என்று நான் வாதிடுவதில்லை.இன்று புகழும் பெரும் பெற்று விட்ட படைப்பாளிகள் சில நேரங்களில் போகிற போக்கில் பெரும்பாலான நூல்கள் ஒன்றுக்கும் உதவாதவை என்பது போல தூக்கி எறிவதைப் படிக்கும் போது வருத்தம் எழுகிறது.இன்றைய அவர்களின் வளர்ச்சி நிலையில் அது சரிதான் என்று அவர்கள் கருதலாம்.ஆனால்,இத்தகைய நிராகரிப்புகளால் காயப்பட்டு,கருகிக் காணாமல் போகும் எழுத்தாளர்கள்தான் எனக்குப் பெரும் மனச்சுமையை உண்டாக்குகிறார்கள்.வெளிவந்து கொண்டிருக்கும் நூல்களை முடிந்தவரை வாசகப் பரப்பின் முன்வைப்பது அவசியம்.அது ஒவ்வொரு வாசகனின் கடமை.எஸ்.ஆர்.ரங்கநாதன்,தமிழ்நாட்டின் நூலகத் தந்தை.அவரின் ஐந்து.கட்டளைகளில் ஒன்று,ஒவ்வொரு புத்தகமும் ஒரு வாசகரைக் கொண்டது என்பது.இந்த அடிப்படையில்,ஒவ்வொரு நூலின் மீதும்  எங்கிருந்தோ யாரோ ஒரு கருத்தைச் சொல்லத் தவித்து,சொல்லியும்,சொல்லாமலும் இருக்க வாய்ப்புண்டு.அப்படி எங்கேனும் சன்னமாக தயக்கத்துடன்,தாழ்வு மனப்பான்மையுடன் ஒலிக்கும் குரல் கேட்கிறதா சற்று செவி கொடுப்போம் 

No comments:

Post a Comment