வெளிச்சத்தின் அடியில் இருட்டு இன்று காஞ்சிபுரம் இலக்கியக் களம் நிகழ்வில் வெளி ரங்கராஜன் எழுதிய "வெளிச்சம் படாத நிகழ் கலைப் படைப்பாளிகள்"என்ற நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது.நானும், பேராசிரியர் இரா . சீனிவாசன் அவர்களும் கலந்து கொண்டு நூல் பற்றி பேசினோம்.ரங்கராஜன் ஏற்புரை நிகழ்த்தினார்.எழுத்தாளர் எக்பர்ட் சச்சிதானந்தம் அமுத கீதன் இருவரும் நடத்தும் இலக்கியக் களத்தின் முப்பத்தி ஏழாவது நிகழ்வு இது.தோழர் சுந்தா வந்திருந்தார்.மழை கொட்டிய கொஞ்ச நேரம்.சில்லென்று குளிர்ந்த சூழல்.நல்ல மனநிலை வாய்த்தது.காந்தி மேரி,பாவலர் ஓம் முத்துமாரி,கும்பகோணம் பாலாமணி,மதுரை எம்.ஆர்.கமல் வேணி போன்ற பல நிகழ் கலைக் காரர்களின் வாழ்க்கை அனுபவங்களும் அவர்களின் கலை வெளிப்பாட்டு உன்னதங்களும் காலத்தின் போக்கில் வடிந்து சுவடுகள் அற்றுப் போகிற சோகம் பற்றி ரங்கராஜனின் மனப் பதிவுகள் இவை."தீரா நதி"இதழில் தொடராக வந்தவை.கலை வெளிச்சம் ததும்ப வாழ்ந்த ஆளுமைகள் தமது சொந்த வாழ்வின் சோகங்களைப் பொருட்படுத்தாமல் கலை தரும் உன்னதத்தில் தங்களை மறந்து வாழ்ந்து மடிந்து போகிற கதைகள் இவை. மகாபாரதப் பிரசங்கியான ஏ.கே.செல்வதுரை நிகழ்வுக்குத் தலைமை தாங்கினார். அவரும் ஒரு கூத்துக் கலைஞர் என்பதை அவரின் உடல்மொழி புரிய வைத்தது.ஒரு நிமிடத்தில் துரியோதனன் வேஷத்தில் தன்னை அறிமுகம் செய்து கொள்ளும் தருவும்,அடவும் அவரிடம் கொஞ்சி விளையாடின.தொழு நோய் கண்ட ஒரு கலைஞர் மேடை ஏறி வேஷம் கட்டியதும் துரியோதனன் ஆகவே மாறி சண்டமாருதம் போல் பொழியும் விந்தையை அவரின் நினைவு அடுக்கில் இருந்து நிகழ்த்திக் காட்டினார்.உலகம் மகிழத் தங்கள் கலைகளை அரங்கேற்றும் இவர்களின் சொந்த வாழ்க்கை இருட்டில் உழல்கிற சோகங்களை வெளி ரங்கராஜன் மிகுந்த உணர்வு மயமான தொனியில் பதிவு செய்து கொண்டு போகிறார்.நமது சமகாலக் கலை ஆளுமைகளின் வாழ்வு இருட்டில் இருக்கும் போது கலை மாமணி விருதுக்கு நமது இயல் இசை நாடக மன்றங்கள் யாரைத் தேர்வு செய்கின்றன என்ற கேள்வி முக்கியமானது.விடைதான் கிடைப்பதில்லை.ரங்கராஜன் தேடி அலைந்த அனுபவங்கள் இவை.வாசித்துத் தீராத சோகங்களின் தொகுப்பு.
அருமை
ReplyDeletehttp://swthiumkavithaium.blogspot.com/