Friday, December 11, 2009
bhaarathi pirantha naal...............!
இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்.தமிழ் மொழிக்குப் புது ரத் தம் பாய்ச்சிய சில பெரியோருள் பாரதி ஒரு சிகரம்.அவரின் பாடல்களை இன்று வானொலியும் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தி கொண்டிருந்தன.அமரத்துவம் வாய்ந்த கவிதை மலர்களைப் பூக்கச் செய்த குறிஞ்சி மலர்ச் செடி அவர்.வசன கவிதையும்,சிறுகதை வடிவ முயற்சிகளும்,கார்ட்டூன்களும் அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த புதிய வடிவங்களில் சில. எத்தனை விதமாய் யோசித்தாலும் அந்தக் கவி உள்ளம் முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை.இன்றைய வாழ்க்கைச் சூழல்களை மனதில் கொண்டு அவரை ஏதாவது ஒரு முத்திரை குத்தி சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எதிலும் அடங்காமல் அந்தக் கவி உள்ளம் நிற்பதிலும்,நடப்பதிலும்,பறப்பதிலும் லயித்துக் கிடந்திருக்கிறது.காற்று சற்று வேகமாய் வீசினால் கூட காற்றே,மெதுவாய் வீசு என்று வேண்டிக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறது. மனிதர்கள் எருமைகளைப் போல் ஈரத்தில் உழன்று கிடக்கிறார்கள் என்று நொந்து கொள்கிற உள்ளம் அந்த உள்ளம்.நமது கரங்களில், கண்களில் சொற்களில் சிந்தனைகளில்,எல்லாவற்றிலும் மின்னல் சொடுக்குக என்று வேண்டிய கவி மின்னல் அது.சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காத மனிதர்களைச் சாடும் சவுக்கு அது.படிக்கும் போதே மனப் பரப்பில் அமுத மழை போல் பொழியும் கவி மழை அது.நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று உணர்த்திய வழிகாட்டி அவர்.இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தும் சீர்மிகு சிந்தனைகளின் களஞ்சியம் அது.வேறென்ன சொல்ல?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment