Thursday, December 24, 2009
sila puthiya velikalum,oru naavalum....!
இன்று புதிய இடங்களையும், வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகளையும் பாடு பொருள் ஆகக் கொண்ட நாவல்கள் பல புதிய எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன.இதுவரை நாம் அறியாத மனிதர்களை, வாழ்க்கைகளை,நகரம் அல்லது கிராமப் பகுதிகளை,அங்கு வாழ்கிற அவர்களின் உணர்வுகளை,அவர்களின் கலாச்சாரங்களை இந்த நாவல்கள் பதிவு செய்கின்றன.இவ்வகையில் நான் போன வாரம் படித்த நாவல் கரன் கார்க்கி எழுதிய ஒரு நாவல். சென்னைநகரின் தென் பகுதி பற்றி ஏராளமான படைப்புகள் வந்துள்ளன.ஆனால் அதன் எதிர் துருவமாய் இருக்கும் பகுதி பற்றி ஓரிரு படைப்புகளே இருக்கின்றன.கரன் கார்கி இப்போது அந்தக் குறையைத் தீர்க்கத் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.சென்னை நகரின் ஒரு பகுதியில் கடும் சூழல்களில் வாழ்கிற உழைப்பாளி மக்களையும்,அவர்கள் நடுவே நிலவும் போட்டி பொறாமைகளையும்,குடி,விபச்சாரம்,சண்டை,துரோகம், நட்பு,இந்த மக்களின் பூர்வீக கிராமங்களில் நடைபெறும் மூதாதைகள் வாழ்க்கைகளையும் அங்கு நிலவும் சாதீயக் கொடுமைகளையும் இப்படி எண்ணற்ற விசயங்களை மையமாகக் கொண்டு ஒரு கனமான நாவலைத் தந்திருக்கிறார். சாராயம் விற்கிற குயிலம்மா,கோபால்.சங்கரன்,சின்னப்பொண்ணு, அஞ்சலை விஜயா,சுலோச்சனா,முனியன் என்று பல பாத்திரங்கள்.குடியின் கொடுமை பற்றி அந்தப் பழக்கத்தால் உயிரையே இழக்கும் முனியன்,கோபால் மூலம் பதிவு செய்கிறார்.குயிலம்மவுக்கும், கோபாலுக்கும் ஏற்ப்படுகிற நட்பு ஒரு புதிய வகைப் பதிவு.நாம் காண விரும்பாத சில பகுதிகளில் இப்படி மிக மென்மையான ஒரு பரிமாணம் மறைந்து கிடப்பதை நாவலின் பல இடங்களில் காண்கிறோம்.மழை வந்து கொட்டும் வேளைகளில் ஏழை மக்கள் படும் அவஸ்தையும்,குடிசைகளில் மழை செய்யும் கொடுமைகளையும் பற்றி நாவலின் முன்பகுதியில் மிக விரிவான ஒரு பதிவு இருக்கிறது.மரணங்கள் தவிர்க்க முடியாதவை,முக்கியமானபல பாத்திரங்கள் நாவலில் மிகவும் கொடூரமான மரணங்களைச் சந்திக்கின்றன.சால்ட் க்வார்ட்டேர்ஸ்,வடசென்னைப் பகுதிகள் பலவற்றைப் பற்றி முதன்முறையாக நாம் இதில் படிக்க முடிகிறது.குற்றங்களும்,வெக்கையும்,சாராயமும்,கொலைகளும் மலிந்த பகுதியாகவே ஊடகங்களில் பதிவு செய்யப்படும் வடசென்னைப் பகுதியின் மானுட ஆன்மாவைப் படம் பிட்ட்டிதுக்க் காட்டும் ஒரு நல்ல படைப்பு.ஆசிரியர் இதில் தானே நேரடியாகப் பேசாமல் சொல்ல நினைப்பதை கதையின் மூலமே சொல்லி இருந்தால் மபக நல்ல கலைப் படைப்பாக இது வந்திருக்கும்.......!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment