Tuesday, November 23, 2010
கனவுகளின் காலம்..........
ஆகஸ்ட் மாதம் இந்தப் பதிவுப் பகுதியில் எனது டெல்லிப் பயணம் பற்றி எழுதிய பின் இன்றுதான் மீண்டும் எழுத முடிந்தது.வேலைகள் ஒரு புறம்,இந்தப் பதிவுகளின் பயன்பாடு பற்றிய கேள்விகள் குடைந்து கொண்டே இருந்தது இன்னொரு புறம். இளம் பிராயத்தில் என்னை எழுதத் தூண்டிய ஒரு எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் திண்டுக்கல் காரர்.அவருக்கு இந்த ஆண்டில் முதன் முறையாக நிறுவப் பட்ட சாகித்ய அகாடமியின் குழந்தை இலக்கிய விருது வழங்கப் பட்டு உள்ளது.அவர் எழுதிய "அந்தோணியின் ஆட்டுக்குட்டி"என்ற புத்தகம் அப்பரிசைப் பெற்று உள்ளது.இந்த நவம்பர் பதினான்காம் தேதி டெல்லியில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.அவரின் நீண்ட எழுத்துலக வாழ்க்கையில் என் பரிச்சயமும் ஒரு சிறு பகுதியில் இடம் பெற்று இருக்கிறது.தீபம்,பிரசண்ட விகடன்,ஆனந்தபோதினி,அமுதசுரபி,கண்ணன்,கல்கி,கோகுலம்,குமுதம்,குங்குமம் இப்படி எண்ணற்ற பத்திரிகைகளில் அவர் கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாக எழுதி வருகிறார்.கண்ணன் இதழில் அவர் எழுதிய கதைகளைப் படித்துத்தான் அவர் நம்ம ஊர்க்காரர் போல இருக்கே என்று அறிந்து அவரைத் தேடி நான் அறிமுகம் செய்து கொண்டேன்.அதன்பிறகுதான் என் கதைகளைப் பிரசுரம் செய்ய வேண்டும் என்ற ஆவல் என் மனதில் சுடர்விட்டு எரிந்தது.அவர் தீபத்தில் எழுதிய "ஆற்றுச் சமவெளி நாகரிகம்"கதை தமிழ்க் கதைகளில் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று.அவர் ஒரு நல்லாசிரியர்.நாடகங்களை எழுதி இயக்குவதில் அவருக்கு அடங்கா ஆர்வம்.மொழியர் எழுதிய கஞ்சன் நாடகத்தை அவர் திண்டுகளில் அரங்கேற்றினார்.தஞ்சை நாடகப் பேராசிரியர் சே.ராமானுஜம் அன்று தலைமை வகித்தார் என்று நினைவு.இத்தனை ஆண்டுகள் களைத்து அண்ணா கமலவேலன் அவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சிதான்...இது கனவுகள் நனவாகும் காலம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment