Monday, November 16, 2009
சாதாரண மனிதர்களின் அசாதாரண சேவைகள்...
நேற்று கவிஞர் யுகபாரதியுடன் ஒரு மணி நேரம் உரையாடல் நிகழ்த்த முடிந்தது.அவர் சொன்ன ஒரு செய்தி மனதை நெகிழ வைப்பதாக இருந்தது. அவர் நெடுக் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு பற்றியது அது."வெளிச்சம்" என்ற ஒரு சேவை அமைப்பு நடத்திய அந்த நிகழ்வில் ஐம்பது மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.அவர்கள் விளிம்புநிலை மனிதர்கள் என்று நாம் கூறுகிற பிரிவினர். எந்தவிதப் பின்னணியும் இல்லாமல் இந்த சேவை அமைப்பின் உதவியை மட்டுமே கொண்டு பட்டம், பட்டயம் போன்று கல்வித் தகுதி பெற்று விட்ட மாணவர்கள். இவர்கள் கல்வி பெற வேண்டும் என்று பாடுபட்டவர் இந்தச் சேவை அமைப்பின் நிறுவனர் ஆக உள்ள ஒரு பெண். அவர் மாணவர்களின் கல்விக்காக அலைந்து திரிகிற வேளையில் தங்க இடம் கூட இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் கூடத் தன் மாணவர்களுடன் தங்கி இருக்க நேர்ந்திருக்கிறது. இந்த வகையில் படித்த அம்மாணவர்கள் இப்போது தங்களைப் போல உள்ள பிற மாணவர்களின் கல்விக்குப் பாடுபடுகிறார்கள். என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அந்த வேலைகளை எல்லாம் செய்து பணம் சேர்த்து இன்னும் இருபது பேருக்கு பீஸ் கட்டுகிற ஒரு மாணவனை பற்றிச் சொன்ன சமயம் கண்கள் குளமாகின. வேதனை என்ன என்றால் இந்த மாணவர்களின் நிலைமை நன்கு தெரிந்திருந்தாலும் அவர்கள் படிக்கும் நிறுவனங்கள் இந்த மாணவர்களின் கல்விக் கட்டணத்தில் ஒரு பைசா கூடக் குறைத்துக் கொள்வது இல்லை. தனது கல்விக்கு, பூஜை செய்து கிடைக்கும் அர்ச்சனை தட்டுக் காசுகளைக் கொண்டு உதவிய ஒரு பூசாரி பற்றி மனம் நெகிழ்ந்து சொன்னார், யுகபாரதி.தன "நடைவண்டி நாட்கள்" நூலில் இது பற்றி எழுதி இருப்பதாகவும் சொன்னார். கேட்கும் போதே மனம் சுமையாகி கனக்கிறது. "இந்த நாட்டில் மட்டும் தான் படிப்பதற்கு இவ்வளவு கஷ்டப் பட வேண்டியிருக்கிறது" என்றார் அவர். இன்று மிக வெற்றிகரமான பாடல் ஆசிரியர் ஆகி விட்டாலும் தன முந்தைய அனுபவங்களை பகிர்ந்து கொள்கையில் தயக்கம் எதுவும் இல்லை அவரிடம். இந்த அனுபவம் எனது எழுத்தறிவுப் பணியில் நான் பெற்ற பல அனுபவங்கள் குறித்து நினைவு கூர்ந்து நெகிழும் வாய்ப்பைத் தந்தது. கிராமப் புற மக்கள் புதிதாக எழுதப் படித்துத் தெரிந்து கொண்டு முதல் முதலாக சில எழுத்துக்களை எழுதிக் காட்டும் வேளையில் அவர்களின் கண்களில் மின்னும் மகிழ்ச்சிப் பிரவாகம் நம்மை மலைக்க வைக்கும். எழுத்தறிவின் அவசியம் பற்றி அவர்கள் நடுவே முதல் முதலாகக் கலை நிகழ்ச்சி நடத்திய கலைக்குழுவிற்கு இரவு உணவை கிராம மக்களே சில சமயம் வழங்குவது உண்டு. அவ்வாறு உணவு போடும் அளவுக்கு அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. மிக எளிய மனிதர்கள் அவர்கள். அந்தக் குடும்பம் முழுவதுமே பரிமாறும்.உணவை முடித்துக் கொண்டு வெளியே வரும் வேளையில் அக்குடும்பத்தினர் கண்களில் தெரியும் பெருமிதம் இருக்கிறதே, அதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. கடந்த பத்தொன்பது ஆண்டுகள் இந்தப் பணியில் ஈடுபடுவதற்குக் காரணம் இந்த மாதிரிச் சாதாரணமானவர்கள் செய்ய முன்வரும், செய்து கொண்டே இருக்கும் அசாதரணமான சேவைகளைத் தினமும் நேரடியாகப் பார்க்கும் ஒரு வேலையாக அது இருந்ததே. வேறென்ன சொல்வது?...!
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பதிவு நண்பரே!
ReplyDeleteஇதுபோல் ஆட்கள் இருப்பதால்தான் நாடு செழிக்குது!
ReplyDeletesenshiavarkalukkum,kalaiarasan avarkalukkum mikka nandri.ithu pol manitharkalaip patri ariyum pothu nam manathil oru puthiya uthvekam pirakkirathu...unkal pinoottathirku meendum nandri...........kamalalayan@gmail.com
ReplyDelete