Friday, November 13, 2009
பயணங்கள் முடிவதில்லை...
திங்கள் அன்று எதிர்பாராமல் கோவைக்குப் பயணிக்க நேர்ந்தது.அம்மா கீழே விழுந்து விட்டார்கள்.மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வந்தது.பொள்ளாச்சி அருகே ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் அம்மாவுக்கு இந்த வயதில் இப்படி ஒரு சோதனை. எப்போதுமே எங்கள் ஊருக்குப் போவது என்றால் எனக்கு மிகப் பிடிக்கும்.பூசாரி பட்டியில் இரங்கி நடந்தே போவது இன்னும் அதிகப் பிடித்தம்.சென்ற முறை என் இடுகையில் ஊர் சுற்றிப் புராணம் பற்றி எழுதி இருந்தேன்.அந்தப் புத்தகம் படிக்கும் முன்னரே ஊர் சுற்றுவதில் பெரும் ஆர்வம் உடையவன் என்றாலும் அதன் பிறகு இன்னும் பல மடங்கு ஆர்வம் ஏற்பட்டு விட்டது.ஒரு முறை எட்டாம் வகுப்பு படிக்கையில் கோடை விடுமுறை வந்தது. அந்த லீவில் கேரளாவில் இருந்த பெரியப்பா வீட்டுக்குப் போகும் வாய்ப்புக் கிடைத்தது. கொச்சின் அருகே எர்ணாகுளத்தை அடுத்த குட்டித் தோடு என்ற ஒரு சின்ன ஊரில் பெரியப்பா இருந்தார்.அந்த ஊரின் வெளியே சின்ன ஆறு போல கடல் நீர் ஓடும் காயல் என்ற நீர் ஓடை ஓடிக் கொண்டிருக்கும். படகுகள் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.அந்த ஊரில் சுமார் ஒன்றரை மாதம் வரை இருந்தேன். இன்னும் பசுமையாக இருக்கிற நினைவுகளை அந்த ஊரில் இருந்து அப்போது அந்தச் சிறு வயதில் சுமந்து கொண்டு திரும்பி இருந்தேன். இருக்கையில் பார்த்த மூன்று மலையாளப் படங்களில் இரண்டு நன்றாக நினைவு இருக்கிறது. ஒன்று எம்.டி.வாசுதேவன் நாயரின் "இருட்டிண்டே ஆத்மாவு".மற்றது "கனக சலங்கை"இந்தப் படம் யாருடையது என்பது நினைவு இல்லை.ஆனால் இருளில் ஆத்மா என்ற படம் மிகவும் பாதிப்பை ஏற்படுத்தியது.மன நிலை சரி இல்லாத ஒரு இளைஞனின் கதை இது.கனக சலங்கையின் கதை இசையார்வம் மிக்க நடனம் ஆடும் ஒரு பெண்ணின் கதை என்று மங்கலாக கொஞ்சம் நினைவு வருகிறது. அங்கு பார்த்த படங்கள், படகுகளில் சரக்குகளையும் மனிதர்களையும் ஏற்றிக் கொண்டுசெல்லும் கேரளா படகோட்டிகள், அந்த ஊருக்கு அருகில் கண்ட ஒரு கோவில் திருவிழா, அலங்கார யானைகளின் முகபடாம்,வான வேடிக்கைகள், தென்னை மரங்கள் இனிமை கொஞ்சும் மலையாள மொழி,குழாய்ப்புட்டு, இப்படியாக நினைவு அடுக்குகளில் பதிந்தவற்றில் பல நினைவுகளை ஊர் திரும்பிய பிறகு "மலை நாட்டுத் தென்றலில்..." என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரையாக எழுதினேன். எந்தப் பத்திரிகையில் என்று கேட்டு விடாதீர்கள்.நான் லீவு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குப் போனதும் அங்கு தினமும் பயிற்சி நோட்டில் ஒரு பக்கம் நல்ல கையெழுத்தில் எழுதிக் கொண்டு வரும்படி ஆசிரியர் சொல்லுவார். அந்த நோட்டில்தான் என் பயணக் கட்டுரைத் தொடர் இடம் பெற்றது. இப்போது உங்கள் மனதில் ஒரு சந்தேகம் வந்திருக்க வேண்டுமே?ஆசிரியர் ஒன்றும் சொல்லாமலா இருந்தார் என்ற சந்தேகம் வருவது நியாயம்தானே?ஆனால் தினமும் நான் என் பயண அனுபவங்களை எழுதுவேன். நோட்டு ஆசிரியர் பார்வைக்குப் போகும். சிவப்பு மையில் ஒரு ரைட்போட்டு அவரின் இனிடியலையும் போடுவார் அவர். ஒருக்கால் நான் என்ன எழுதி இருக்கிறேன் என்று படிக்காமலே திருத்தினாரோ? அது சரி, வகுப்பில் இருக்கும் அறுபது மாணவர்கள் தினமும் எழுதும் அவ்வளவு கட்டுரை நோட்டுகளையும் படித்துப் பார்த்துக் கை எழுத்துப் போடுவது நடக்கிற காரியமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment