Saturday, October 24, 2009

இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும்..

தீபாவளிப் பண்டிகையை ஒட்டி என் சிந்தனைகளில் சில யதார்த்த நிலைமைகள் பற்றிய கவலைகளைப் பதிவு செய்திருந்தேன்.உலகம் முழுதும் பசித்தவர்களின் எண்ணிக்கை மில்லியன் கணக்கில் இருப்பது பற்றி ஒரு செய்தி நம் கவனத்தில் இருக்க வேண்டும் என்று என் மனதில் பட்டதை இந்தப் பகுதியில் பதிவு செய்த போது அது சில ஈர மனங்களில் பாதிப்பை உண்டாக்கும் என்று எதிர் பார்க்கவில்லை.அது போலவே இந்த ஆண்டு தாதா சாகேப் பால்கே விருது பெற்ற பாடகர் மன்னா தே பற்றியும் பதிவு செய்து இருந்தேன்.அந்தக் குறிப்பும் பலரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது என்று தெரிகிறது.மனிதர்களின் வாழ்வில் இசையும் பசியும் அடையும்    முக்கியத்துவம் இதில் இருந்து தெரிகிறது.


                                      

இசையாய் தமிழாய் இறைவனைக் காண்கிற மரபு நமது. மாசில் வீணையும் என்று தேவாரம் பாடும்.என் இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்கிறார் கண்ணதாசன், ஏழாம் கடலும் வானும் நிலவும் என்உடன் விளையாடும், இசை என்னிடம் உருவாகும் என்று அதே பாடலின் வரிகள் தொடரும். துன்பக் கடலைத் தாண்டும் போது தோணியாவது கீதம் என்பார் பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம். என் உணர்வுகளை எல்லாம் கொட்டி நான் பாடியிருந்தும் அதை நீ எப்படிக் கேட்காமல் போனாய் என்று வியந்து போகிறார் தூக்கு மேடைக் குறிப்பில் ஒரு போராளி.இந்த மாதிரி ஆயிரக்கணக்கான சான்றுகளை நாம் உலக இலக்கியங்கள் எல்லாவற்றிலும் காண முடியும்.




மிகச் சிறந்த படைப்பாளிகள் அனைவரும் இசை ஆர்வலர்களாக இருப்பது காண முடியும.மோக முள் தந்த தி.ஜானகிராமன், புல்லின் இதழ்கள் எழுதிய கே.பி.நீலமணி, இந்த மாத்ரி தமிழ்ப் படைப்புகள்; கண் தெரியாத இசைஞன் என்ற சோவியத் நாவல் போல பல சான்றுகள் கூறலாம். மன்னா என்கிற வங்க மொழிப்  பாடகரின் தொண்ணூறு ஆண்டு கால வாழ்க்கையில் இசைபற்றுதான் அவரை உந்தித் தள்ளுகிற விசையாக இருந்திருக்கிறது என்பதை அவரின் நேர்காணல் சொல்கிறது. இன்றைய இளம் தலைமுறை இசை கலைஞரான யுவன் சங்கர் ராஜாவின்வார்த்தைகளில் சொன்னால் இசையால் நான் அனைவரையும் சென்று அடைய முடியும்;அனைவர் நடுவேயும் மகிழ்ச்சியைப் பரப்ப முடியும் என்பது தான் செய்தி. இது தன அப்பா இளைய ராஜாவிடம் கற்றுக் கொண்டது என்கிறார் யுவன்.சொல்லி வைத்தார்ப் போல் இசைக்கலைஞர்கள் அனைவரின் கருத்தும் இதுவாகத்தான் இருக்கிறது, அதில் வியப்புக்கு ஒன்றுமில்லைதானே?

2 comments:

  1. மொழி என்பது மனிதனிடம் மட்டுமே உள்ளது. இசை என்பது ஒவ்வொரு உயிரினத்திடமும் உள்ளது..

    ReplyDelete
  2. நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete