Friday, November 6, 2009

இன்றும் வல்சனின் சிந்தனைகள்...



நவம்பர் இரண்டாம் தேதி அன்று சிற்பி வல்சன் கொலேரியின் சிந்தனைகள் சிலவற்றை இட்டிருந்தேன். பலரின் கவனத்தில் அது பதிந்து இருப்பது மகிழ்ச்சி தருகிறது.அவரது சிந்தனைகள் மிகவும் யோசிக்க வைக்கின்றன ஒரு கலைஞன் சமூகப் பிரஞ்கை உடையவன் ஆக இருந்தால் அவனது கலையில் அது எந்த அளவுக்குச் சமூக நிகழ்வுகள் பிரதிபலிக்கும் என்பது நமக்குப் புரிகிறது அவரின் சிந்தனைகளில் மேலும் சிலவற்றைப் பார்க்கலாம் .: "ஓவியம், சிற்பம் இவை மெத்தப் படித்த, கலையுணர்வு மிக்க மேல் தட்டு மனிதர்களுக்கானவை என்று பொதுவான நினைப்பு இருக்கிறது; அது சரியல்ல.. நம்மெல்லோருக்குள்ளும் இருக்கும் கலைஞனை பலரும் இறுதி வரை உணராமலே ஆகி  விடுவதுதான் பெரிய சோகம்" என்பது இவர் கருத்து ஆர்வமும், ஈடுபாடும் உள்ள எந்த ஒரு மனிதனும் கொஞ்சம் முயற்சி எடுத்தால் அற்புதமான கலைஞனாக முடியும். பார்வையற்ற மனிதர்களால் கூடச் சிற்பங்களை ரசிக்க முடியும் என்று இவர் சொல்லும் போது நமக்கு நம்புவதற்குச் சிரமமாக இருக்கிறது. அவரே சொல்கிறார்: "சிற்பம்-பார்க்கப் படுகிற ஒன்று மட்டும் அல்ல; விசுவல் ஆர்ட் மட்டும் அல்ல அது. எனது கண்காட்சி ஒன்றில் வாய்த்த ஐம்பதுக்கு மேற்பட்ட சிற்பங்களை கண் பார்வை அற்ற இருபது-முப்பது மாணவர்கள் வந்திருந்து "பார்த்தார்கள்". அவர்களாக ஒவ்வொன்றையும்  தொட்டுப்  'பார்த்து' அனுபவித்து விளக்கம் கேட்டுத் தெரிந்து கொண்ட விவகாரங்களை பார்வையுள்ளவர்கள் கூடச் செய்ய முடிந்தது இல்லை. முழு உலகையுமே 'பார்க்க' அவர்களால் முடிகிறது. நமக்குத்தான் பார்வை தீட்சண்யமாக இல்லை. முட்டுச் சந்துகளில் நின்று விடுகிறது நம் பார்வை. ஆனால் பார்வை அற்றவர்களுக்கு அவர்களுக்கு உள்ளேயே ஒருவருக்கொருவர் உணர்த்த முடிகிற மாதிரி ஒரு தகவல் தொடர்பு இருக்கிறது- பறவைக் கூட்டத்தில் ஒரு பறவை தவறி விட்டாலோ அடிபட்டு விழுந்து விட்டாலோ கூட்டம் முழுவதும் உடனே அதை உணர்ந்து சோகத்தில் ஆழ்ந்து விடுகிற மாதிரி...." ....உண்மைதான்! 25 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய நகரங்களிலும், பாரீஸ் உட்பட சர்வதேச நகரங்களிலும் ஏராளமான கண்காட்சிகளை நடத்திப் புகழ் பெற்றவரான வல்சன் கொலேரி, அனுபவப் பூர்வமாக ஆழ்ந்த உறுதிப்பாட்டுடன்  சொல்லுகிற இம்மாதிரி உண்மைகளை எப்படி மறுக்க முடியும்?

No comments:

Post a Comment