Friday, November 20, 2009
valaippoovum vaasakarkalum....................!
வலைப்பூ என்பது இன்று ஒரு சக்தி மிக்க வெளிப்பாட்டு ஊடகம் ஆகி இருக்கிறது.இதில் இடுகைகள் பதிவு செய்யும் நண்பர்கள் தம் மனதில் தோன்றும் எண்ணங்களை வண்ணங்கள் நிறைந்த வானவில் போலத் தெளித்துக் கொண்டிருக்கிறார்கள்.இந்த ஊடகத்தையும் எழுத்துலகத்தையும் ஒப்பிட்டு பதிவர் ஆதிமூல கிருஷ்ணன் எழுதியிருக்கும் இடுகை சுவையான் சில உண்மைகளை நம் முன் வைக்கிறது.ஒரு இடுகையை பலரும் விரும்பிப் படிக்க வைக்க என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்று அவர்சொல்லும் டிப்ஸ் பயனுள்ள ஒன்று.அவரின் நீண்ட அனுபவம் இதில் தெரிகிறது.ஆனால் அச்சு ஊடகத்தில் எழுதும் எழுத்தாளர்கள் தம் எண்ணங்களுக்கு எதிர்வினைகளை உடனே பெற முடிகிறது என்று அவர் கூறுவது விவாதத்திற்குரிய ஒரு கருத்து.என் முப்பத்தைந்து ஆண்டு கால அனுபவத்தில் அச்சில் வரும் நமது படைப்புகள் பற்றி வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று கடைசி வரை தெரியாமலே போகிற நிலைதான் பெரும்பாலும்.இன்றைய சூழலில் திரையுலகம் சார்ந்து இயங்கும் எழுத்தாளர்களுக்கு வேண்டுமானால் பாபுலாரிட்டியின் விளைவாக அவர்களின் படைப்புகள் உடனுக்குடன் நூல் வடிவம் பெறவும்,அவை உடனே வாசகர்கள் கைகளில் சென்று சேரவும்,அவர்கள் அந்தப் படைப்புகள் பற்றி என்ன கருதுகிறார்கள் என்று தெரிந்து கொள்ளவும் வாயிப்பு இருக்கலாம்.ஒரு காலம் இருந்தது.அப்போது அகிலன்,கல்கி,தீபம்.நா.பார்த்தசாரதி,சாண்டில்யன்....இப்படிப் பல எழுத்தாளர்கள் மிகப் பிரபலங்கள் ஆக தமிழ்ச் சூழலில் இருந்தார்கள்.எழுதுபவர்கள் மிகக் குறைவு;வாசகர்கள் அதிகம். இப்போது போல தொலைக்காட்சியோ,இண்டர்நேட்டோ இல்லாத காலம் அது.எனவே மேற்கண்ட எழுத்தாளர்கள் எழுத்து படைப்புகளில் மனம் பறிகொடுத்து நாங்கள் எல்லாம் பைத்தியங்கள் போலத் திரிந்தோம்.தமிழ்வாணன் எழதிய சங்கர்லால் துப்பறியும் கதைகளை வரும் சங்கர்லாளையும்,இந்திராவையும்,கத்தரிக்காயையும் உண்மையான மனிதர்கள் ஆகவே நினைத்துக் கொண்டு கடிதம் எழுதுவோம்.தமிழ்வாணன் தானேதுப்பறியும் நிபுணராக வரும் கதைகள் படித்த பின் அவர் போலவே கற்பனையில் திரிந்து வந்திருந்த காலங்கள் நினைவிலாடுகின்றன.நா.பா.வின் குறிஞ்சி மலரும்,பிறந்த மண்ணும், poன்விலங்கும் இன்னும் பல நாவல்களும் படித்த பின் அவரின் கதாநாயகர்கள் அரவிந்தன்,சத்யமூர்த்தி,நவீனன்,போலவும் பெண்களில் பூரணியையும்,மோகினியையும்,சுரமஞ்சரியையும் போலவும் வாசகர்கள் கற்பனை செய்து கொள்வது மிக சாதாரணம்.இன்று எழுதும் யாருக்கும் அப்படி ஒரு வாசகப் பரப்பு இல்லை.வலைப் பதிவுகள் இன்று வீட்டில் இருந்து கொண்டே யாருடைய தயவும் இன்றி அவரவர் எண்ணங்களை உடனுக்குடன் உலகம் எங்கும் சென்று சேரும் வகையில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்யக் கூடிய ஒருஅற்புதமாக இருக்கின்றன.ஆயிரமாயிரம் வலைப் பூக்கள் மலரட்டும்............!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment