Friday, November 27, 2009
intha mannin vaasanai.....................!
இந்த மண்ணின் வாசனை, இதற்கு ஏது ஈடு இணை? என்றொரு பாடல் உண்டு.நாம் வாழ்கிற மண் குறித்த பெருமிதம் இந்தப் பாடலின் ஜீவனாக அமைந்து இருக்கிறது.தமிழ் மண்ணில் பிறந்த யாரும் இந்தப் பெருமிதத்தில் பங்கேற்காமல் விலகி இருக்க இயலாது.யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று ஒலித்த குரல் நம் தமிழ்க் கவிஞர் ஒருவருடையது.நாடாய் இருந்தால் என்ன,காடாய் இருந்தால் என்ன,எங்கு உன் மேல் நடக்கும் மனிதர்கள் நல்லவர்கள் ஆக இருக்கிறார்களோ அங்கு நீயும் நன்றாக வாழ்கிறாய் என்று மண்ணைப் போற்றிப் பாடுகிறார் ஔவையார். இன்று நாம் வாழும் வாழ்க்கையில் இந்தப் பெருமிதத்திற்கு இடம் இருக்கிறதா? அரசியலின் பண்புகளும் சாதீயத்தின் கூறுகளும் இன்று இப்படிப் பெருமிதங்களுக்கு இடம் இல்லாமல் செய்து விட்டன.மானுட மேன்மை ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு இயங்க வேண்டிய எழுத்தாளர்கள் கூட இன்று சாதியைத் தூக்கிப் பிடித்துக் கொண்டுதான் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகள் தமிழ் இலக்கிய உலகில் உழன்று கொண்டிருக்கும் எனக்கு கடந்த சில ஆண்டுகளாகத் தான் இப்படி சாதி அட்டை மாட்டிக் கொண்டுதிரியும் எழுத்தாளர்களை இனம் காண முடிகிறது.இதனை ஆண்டுகள் நாம் எழதியும்,படித்தும் தெரிந்து கொண்டது உண்மையில் என்ன என்ற கேள்வி குடைகிறது மனதில்.நந்தனின் கதையும்,கீழ வெண்மணியும்,திண்ணியமும்,உத்தப்புரமும் இன்று நம் சமூகத்தின் மனசாட்சியைக் கேள்விக்கு உட்படுத்துகின்றன.எங்கே வேர், எங்கே நீர் என்று தெரியாமல் இந்த அசுர விருக்ஷம் இந்தத் தமிழ்ச் சமூகத்தின் மண்ணில் வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.தந்தை பெரியாரும்,மணியம்மையும்,மூவாலூர் ராமாமிர்தம் அம்மையாரும் இன்னும் எவ்வளவோ பெரியவர்களும் போராடிய இந்த மண்ணில் இன்று சிந்தனையாளர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நண்பர்களின் வெளிப்பாடுகள் நாம் பெருமிதப் படும் வகையில் இல்லை.என்ன செய்யலாம்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment