Sunday, November 8, 2009
oor sutrip puraanam...............
ஊர் சுற்றிப் புராணம் என்ற புத்தகத்தை ராகுல சங்கிருத்தியாயன் எழுதி இருக்கிறார்.இவரின் பல புத்தகங்கள் மிகப் புகழ் பெற்றவை.இந்தப் புத்தகத்தில் ஊர் சுற்றுவது பற்றி அணைத்து அம்சங்களையும் உள்ளடக்கி எழுதி இருக்கிறார்.ஊர் சுற்றி என்றால் பொதுப் புத்தியில் மிகத் தாழ்வான எண்ணமே இருக்கிறது.ஆனால் இந்தப் புத்தகம் படிப்பவர்கள் அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள்.அவ்வளவு வலிமையான வாதங்களை ஊர் சுற்றுவதற்கு ஆதரவாக எடுத்து வைக்கிறார் ராகுல்ஜி. "ஊர் சுற்றிப் புராணம் எழுத வேண்டிய தேவையை நான் நீண்ட காலமாக உணர்ந்து கொண்டிருந்தேன்.என்னை போன்ற மற்ற நண்பர்களும் இதன் தேவையை உணர்ந்து கொண்டிருப்பார்கள் என்று நான் கருதுகிறேன்.வாசகர்களின் மனத்தில் ஊர் சுற்றும் எண்ணத்தைத் தோற்றுவிப்பது இந்நூலின் நோக்கம் அல்ல.அதற்குப் பதிலாக அந்த என்னத்தை வலுப்படுத்த வழி காட்டுவதுதான் இதன் குறிக்கோளாகும்" என்கிறார் இவர்."உலகத்தில் உள்ள தலை சிறந்த பொருள் ஊர் சுற்றுவதுதான் என்பது அடியேனின் தாழ்மையான கருத்தாகும்.ஊர் சுற்றுவதை விட மனிதனுக்கும் சமுதாயத்திற்கும் நன்மை செய்வது போன்ற சிறந்த செயல் வேறெதுவும் இல்லை.உலகம் இன்பத்திலும் துன்பத்திலும் யாரிடமிருந்தாவது உதவி பெறுகிறது என்றால் அது ஊர் சுற்றிகளால் தான்இயற்கையான புராதன மனிதன் மிகவும் ஊர் சுற்றியாகத்தான் இருந்திருக்கிறான்.விவசாயம்,தோப்பு துறவு,வீடு வாசல் எதுவும் இல்லாத அவன் வானத்துப் பறவைகளைப் போல் சுதந்திரமாக நிலத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்......"இப்படித் தொடங்கும் புத்தகம் முழுக்க ஊர் சுற்றும் உயர்ந்த விரதம் வேறு எதுவும் இல்லை என்று நிறுவுகிறது.பகவான் புத்தர்,மகாவீரர்,குரு நானக் போன்று உலகின் பல மகா மனிதர்கள் அனைவரும் ஊர் சுற்றிகள் ஆகத்தான் இருந்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார் ராகுல்ஜி.அவ்வாறு ஊர் சுற்றியதன் மூலமே மனிதஇனம் இன்று அடைந்துள்ள அணைத்து முன்னேற்றங்களையும் அடைந்து உள்ளது என்று பல உதாரணங்களுடன் விவரிக்கிறார்.மிக அற்புதமான நடையில் இந்த நூலை மொழி பெயர்த்து இருப்பவர் ஏ.ஜி.எத்திராஜுலு.என்கிற முன்னோடி மொழி பெயர்ப்பாளர்.ராகுல்ஜியின் நூல்களில் மட்டுமே பன்னிரண்டுக்கு மேற்பட்ட நூல்களை தமிழுக்குத் தந்தவர் இவர்.பயன் கருதாமல் உலகம் சுற்றி வரும் ஊர் சுற்றிகளின் அனுபவங்கள் மனிதர்களின் முன்னேற்றம்,வளர்ச்சி,இலக்கிய-கலாசார உலகில் பெரும் படைப்புகள் தோன்றி வளர உதவி இருப்பது நாம் அறிந்த உண்மை,அல்லவா? தமிழில் இது போன்ற பயண இலக்கியங்கள் ஏராளமாக வந்து இருக்கின்றன.சிலப்பதிகாரக் காப்பியமே ஒரு வகையில் பயணம் சென்று ஒரு தம்பதியர் அடைந்த துன்பங்களின் கதை தானே?நவீன தமிழ் இலக்கியப் பரப்பிலும் பல பயண நூல்கள் ராகுல்ஜியின் கருத்துக்கள் உண்மைதான் என்று நிறுவுகின்றன.தி.ஜானகிராமனின் 'நடந்தாய் வாழி காவேரி','உதய சூரியன்'போன்றவை;'சிட்டி' சிவபாத சுந்தரம் அவர்களின் 'சேக்கிழார் அடிச் சுவட்டில்',புத்தர் அடிச் சுவட்டில்''மாணிக்க வாசகர் அடிச்சுவட்டில்,' இப்படிப் பல புத்தகங்களைச் சொல்லலாம்.ஊர் சுற்றுகிற அனுபவங்களின் அடிப்படையில் இன்றும் எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற பல எழுத்தாளர்கள் மிக நல்ல கட்டுரை இலக்கியப் படைப்புகளை உருவாக்கித் தருவது நாம் அறிந்ததே.கோணங்கி என்கிற நவீன ஊர் சுற்றியின் அனுபவங்களை அவர் விவரிக்கும் சமயத்தில் நேரில் கேட்பவர்கள் அந்த அனுபவங்களை எந்த வார்த்தையில் விளக்க முடியும்? ராக்ல்சி என்கிற ஊர் சுற்றி முன்னோடியின் புராணம்,கட்டுக் கதைகளின் தொகுப்பு அல்ல.ஒரு பயன் கருதா கர்ம யோகியின் சிரத்தை மிக்க கருத்துலகம்...............!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment