இசைந்த வாழ்க்கையும் ஈர மனங்களும் என்று நான் பதிவு செய்த இடுகை பலரின் கவனத்தில் பதிந்திருப்பதில் மகிழ்ச்சி.ஒரு நண்பரின் பின்னூட்டத்தில் இசை என்பது அணைத்து உய்ரினங்களிலும் இருக்கிறது என்று சரியாகவே சொல்லி இருக்கிறார்.இசையால் வசமாகா இதயம் எது என்ற பாடல் வரி நாம் அறிந்த ஒன்றுதானே?
பாட்டு என்கிற அற்புதம் பற்றி எத்தனை விதமாய்ச் சொன்னாலும் தீராது.மகாகவி பாரத்யின் வார்த்தைகளில் சொன்னால் "பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின் மிசை இல்லை"தானே?வானம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமான இசைத் தோற்றங்களைத் தருகிறது.இரவின் அமைதியில் நாம் கேட்க நேரும் ஒவ்வொரு ஓசையும் ஒரு இசைக்கோலம் காட்டுவதை உணராமல் எப்படி இருக்க முடியும்?
மலைகள்,நதிகள், வனங்கள்,நீரோடைகள்,பறவைகள்,மிதிபடும் சருகுகள்,தொலைவில் ஒளிரும் வெடியின் ஒளியும் ஓசையும்,யாரோ ஒரு தாயின் மடியில் பசிக்கு அழும் குழ்ந்தையின் அழுகையில்,பசி தீர்ந்ததும் அது உதிர்க்கும் சொற்களில்,இப்படி எங்கும் நிறை நாத பிரும்மம் நமது நெஞ்சை நிறைக்கிறது.கண் தெரியாத இசைஞன் நாவலில் பார்வை அற்ற இளைஞனின் உலகம் தாயின் கூர்த்த மதியால் இசைப்பெரலைகள் நிறைந்த ஒரு அற்புத உலகமாக மாறும் விந்தையை விளாடிமிர் கொரலென்கோ மிக நுண்ணிய இசைக் குறிப்புகள் நிரம்பி வழியும் எழுத்து வடிவில் தந்திருப்பார்.
எத்தனை முறை படித்தாலும் அந்த நாவலின்இசை வெள்ளம் நம் மனப் பரப்பில் பாயும் போது மூச்சுத் திணறுவது தவிர வேறு என்ன செய்ய முடிகிறது? மனம் எதோ ஒரு உணர்வில் கனத்துப் பிரமை பிடிதார்ப் போல் ஆகி விடுகிறது.இந்த உணர்வுகளை எந்த மொழியில்,எந்த வார்த்தைகளில் சொல்ல முடியும்/பேசா மடந்தையே நாம் என்று ஆகி விடுகிறோம் இல்லையா?
No comments:
Post a Comment