Sunday, October 25, 2009

வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடங்கள்...

வாசிப்பு பற்றி பொன்மணி வைரமுத்துவின் ஒரு கவிதை தினமணி தமிழ்மணியில் வந்துள்ளது.தொடர்ந்த வாசிப்பு என்பது மனிதர்களின் உணர்வுகளில் ஏற்ப்படுத்தும் மாற்றங்கள் பற்றி இக்கவிதை மிக அழகாகச் சொல்கிறது.




"நான் ஒன்றும் நாதஸ்வரம் வாசிக்கவோ புல்லாங்குழல் வாசிக்கவோ பிரியப் படவில்லை. நூல் வாசிக்கும் ஆசை மட்டும் நாள் தோறும் வளர்கிறது.
கதை,கவிதை,கட்டுரை,எதுவாயிருப்பினும் மகிழ்ச்சி!சிறகு கட்டிக் கொள்ளும் மகிழ்ச்சி!    
சற்று முன் தின்ற பசும் புல்லை ஆசுவாசமாய் அசை போடும் பசுவைப்போல் படித்ததை நினைக்க நினைக்க ஆனந்தம் பிறக்கிறது.நூல் ஒரு வினோதம்-
படைத்தவன் சொன்னதைச் சொல்லும்; சொல்லாததையும் சொல்லும்.  வாசிப்பு புறத்தில் மறப்பு.அகத்தில் விழிப்பு!  
வாசிப்பு தனிமைத் தவம் ,
தாய்மடி   வானமழை,  ஆழ்கடல் ஊன்றுகோல்  ஞாந தீபம் தேவ கானம் தலை தொட்டு ஆசீர்வதிக்கும் தும்பிக்கை! 
வாசலுக்கு வெளியே விரியும் நீலவானம்;என் விருப்பத்திற்குரிய வேப்பமரம்;
ஒரு கையில் தேநீர் இன்னொரு கையில் புத்தகம். இதை விடவா ஒரு வாழ்க்கை?! "

இந்தக் கவிதை வாசிப்பையும் வாழ்க்கையையும் ஒரு புள்ளியில் சந்திக்கச் செய்கிறது.  மதுரையை அடுத்த விருதுநகர் மாவட்டம்,கிருஷ்ணாபுரம் கிராமம் .அங்கு ஒரு நூலகம். அகால மரணம் அடைந்த தன மகன் நந்தகுமாரின் நினைவாக திரு நவநீத கிருஷ்ணன், அவரது மனைவி இருவரும் சேர்ந்து உருவாக்கிய நூலகம் இது.ருபாய் பத்து லக்ஷம் மதிப்புள்ள பத்தாயிரம் புத்தகங்களுடன் இந்த நூலகம் இயங்கி வருவதாக நவநீத கிருஷ்ணன் சொல்கிறார். மகன் உயிருடன் இல்லாத சோகத்தில் நிலை குலைந்து போகாமல் இப்படி ஒரு காரியம் செய்ய முன்வந்த இருவரும் வாசிப்பின் மேன்மையை உணராதிருந்தால் இது சாத்தியம் ஆகி இருக்காது.




"நூலகமே என் குழ்ந்தை" என்கிறார் நவநீத கிருஷ்ணன். பொதுவாக் நம்மை விரக்தியில் ஆழ்த்தும் ஒரு மீளாத சோகத்தை வென்று நிற்பதற்கு புத்தகங்களின் மீதான ஒரு பிடிப்பு உதவி இருக்கிறதே!  'நூலகங்களுக்குள் ஒரு பயணம்' என்ற எனது   சிறு நூலில் தமிழ நாட்டு நூலக இயக்கம் தோன்றி வளர்ந்த வரலாற்றை சுருக்கமாகச் சொல்லி இருக்கிறேன்.நூலக இயக்கத் தந்தை என்று போற்றப்படும் ச.ரா ரங்கநாதன் அவர்களின் வாழ்க்கை புத்தகமும் ஒரு பெரும் மேதையின் வாழ்வுமினைகிற விந்தையைச் சொல்கிறது.உலக நூலகங்களின் வரலாறு நம் வாசிப்பின் சாத்தியங்கள் எவ்வளவு பிரமாண்டமானவை என்று சொல்லும்.

வாசிப்பின் எல்லைகள் பற்றி ஒரு போது நினைக்காமல் தொடர்ந்து படிக்கும் ஒருவர் எப்படி இயங்குவார் என்பதற்கு ரங்கநாதன்   ஒரு உதாரணம்.அவரது நூல்கள் மட்டுமின்றி அவர் வாழ்க்கையே நூலகம், நூலகம் என்றே துடித்த ஒரு இதயத்தின் கதையாக  இருக்கிறது.கிராம நூலகம் என்ற ஒரு கருதுகோள் அவரின் சிந்தனையில் எவ்வளவு அழுத்தமாக இடம் பெற்று இருக்கிறது?முறையாகப் பராமரிக்கப் படும் ஒரு கிராம நூலகம் அப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தரத்தை யுஅர்த்துவதில் எல்லையற்ற சக்தி படைத்ததாக இருக்கும் என்பது ரங்கநாதனின் நம்பிக்கை.

இது வாசிப்பும் வாழ்க்கையும் சேருமிடமாக இருக்கிறது... இன்று இந்த விதமான இயங்குதல் சாத்தியம் தானா ,தெரியவில்லை... பதில் தேடும் பயணத்தை வாசிப்பு உலகிற்குள் சென்று தொடருவோம்!  

No comments:

Post a Comment