Friday, October 23, 2009

தமிழில் சில புதிய களங்கள்...

தமிழின் களங்கள் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் வாய்ந்தவை. இன்றைய நவீன வாழ்வின் சில அம்சங்களை இந்த மொழியில் சொல்வதற்கு முயலும் போது இது நமக்கு உகந்த முறையில் வளைந்து கொடுக்குமா என்ற கேள்வி நம் முன் வந்து நிற்கவே செய்யும். இந்த மொழியில் நவீன வாழ்வின் சாத்தியங்கள் அனைத்தையும் கொண்டு வர முடியும் என நிருபிதவர்களில் சுஜாதாவும் ஒருவர். வேறு பலரும் இந்த வகையில் முயன்று பார்த்து உள்ளனர். ஆனால் சுஜாதாவின் வெற்றி மிக வசீகரமான ஒன்று. அவரை நகல் எடுத்த பலரும் தோற்றுப் போனார்கள் என்றே சொல்ல வேண்டும்.



இந்த நவீன அம்சங்களில் அறிவியலின் பல கூறுகள் அடங்கி உள்ளன. முன்பு ஒரு எழுத்தாளர் கூட்டம் இந்த முறையில் முயன்று வந்தது. அவர்களில் பே.நா. அப்புசாம்யும், தி.ஜானகிராமன்,ஸ்ரீனிவாசன், எ.என்.சிவராமன் போன்றவர்கள் வருவர். இன்றைய தலைமுறையில் இரா.முருகன், ராமானுஜம், இரா.நடராசன், வெங்கடேஸ்வரன், ஆதனூர் சோழன் இப்படிப் பலர் இருக்கிறார்கள். இவர்களின் எழுத்துக்கள் பொது மக்கள் திரளை சென்று சேர்ந்ததா என்பது தனிக் கதை.



ஸ்டீபன் காவ்கிங் இன்று தமிழ வாசகர்கள் அறிந்த ஒரு பெயர்.இதற்கு அவரின் 'காலம்-ஒரு சுருக்கமான வரலாறு' என்ற தமிழ் மொழி பெயர்ப்பு நூல் ஒரு காரணம். ராஜாஜி கூட அறிவியல் அம்சங்களைத் தமிழில் தர முயன்றவர்தான். ஆனால் அவரின் நடை இன்று பொருந்தி வரக் கூடிய ஒன்றல்ல. தி.ஜானகிராமனின் நடை இன்றும் வாசிக்க சுகமான நடையாக இருப்பதை காணலாம். இந்த விஷயம் பற்றி மேலும் ஆராய்ந்தால் பல சுவையும், பயனும் மிக்க தகவல்கள் கிடைக்கக் கூடும்.

No comments:

Post a Comment