கடைசியாக என் சிந்தனைகளில் மீனாக்ஷி முகர்ஜியின் மறைவு மற்றும் நரேன் என்ற சமூக சேவகர் பற்றிய கட்டுரைகள் குறித்து எழுதி இருந்தேன். கடந்த சில நாட்களாக ப்ளாக்-இல பதிவு எதுவும் செய்ய முடியாமல் ஆகி விட்டது. நேற்றும் இன்றும் படித்த சில விஷயங்கள் பற்றி இன்று பார்க்கலாம். கூகி வா தியன்கூவின் 'இடையில் ஓடும் நதி' நாவல் படித்தேன். தமிழில் இரா. நடராசன் மொழி பெயர்த்து இருக்கிறார். மிக அருமையான நாவல் இது. ஆப்பிரிக்க நாட்டு இலக்கியங்கள் இப்போது நிறைய தமிழில் வருகின்றன. இந்த நாவலின் களம் மிக வித்தியாசமானது. ஆப்பிரிக்க மக்களின் மரபு ரீதியான சடங்குகள் - வழிபாட்டு முறைகள் பற்றியும், அவர்கள் நடுவே கல்வியின் விதைகள் விழுந்த பிறகு புதிய மனிதர்கள் உருவாகி வரும் விதம் பற்றியும் இது பேசுகிறது. அந்த மக்களின் ஆன்ம பலம் வெள்ளைக்கார மனிதர்களை எதிர் கொண்ட விதம் பற்றி நெஞ்சம் நெகிழும் வகையில் பதிவு செய்துள்ளது.
கு.சின்னப்ப பாரதியின் சுரங்கம் நாவல்படிதேன்.அவரின் முந்தைய நாவல்கள் போலவே இதுவும் வர்க்கப் பார்வை கொண்ட நாவல்தான். கல்கத்தா நிலக்கரிச் சுரங்கங்கள், அவற்றில் பணி செய்யும் தொழிலாளர்கள் வாழ்க்கை அவலம் பற்றிய நாவல். Indian literature இதழில் இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டம் பற்றிய ஒரு கருத்தரங்கின் கட்டுரைகள் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளன. மிக முக்கியமான கோணங்களில் அலசி ஆராய்கிற கட்டுரைகள் இவை. மதம், மொழி இனம் கடந்து அன்று இந்திய மக்கள் போராடிய விதமும் அவர்கள் பட்ட துயரங்களும் நம் நெஞ்சங்களில் இருந்து மறைந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது.
No comments:
Post a Comment