Friday, July 30, 2010

காலம் என்னும் கவிதை...

காலம் என்ற சொல்லின் அர்த்த அழகு குறித்து யோசிக்கையில் எண்ணங்கள் அலை பாய்கின்றன.'கால நடை'என்று ஒரு சொல்லாடலை பாரதி கையாள்கிறான்.'அவர் ஒருவர் நாம் ஒருவர் என்றான மழைக்காலம்' என்று ஒரு பழம்பாடல் வரி பேசும்.'பால்ய கால சகி'என்ற வைக்கம் மொகம்மது பஷீர் எழுதிய குறுநாவல் காலம் கடந்தும் உயிர்ப்புடன் நிலைத்திருக்கும் பிஞ்சுப்பருவத்து உறவு பற்றிப் பேசுகிறது."நானெல்லாம் அந்தக் காலத்துல இப்படியா இருந்தியன்?"என்று அங்கலாயிக்கிற குரல்கள் எத்தனை?இன்று நாம் இருக்கும் நிலைக்கும் என்றோ ஒரு காலச் சூழலில் நமது நிலைக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறித்துக் குற்ற உணர்வு கொள்ளாதவர்கள் யார்?இந்தக் காலம் என்ற சொல் எல்லாப் படைப்பாளிகளின் படைப்புகளிலும் எஅதோ ஒரு வகையில் என்றும் இறவாத உயிர்ப்புடன் உலவிக் கொண்டேதான் இருக்கிறது.காலம் ஒரு கறாரான நீதிமான்.அதன் எடைக்கல்லில் எந்த ஒரு படைப்பும் அதன் சுய பலத்தினாலும்,அது தன உள்ளுறை கருவாய்க் கொண்டிருக்கும் ஒரு சத்தியமான உண்மையினாலும் மட்டுமே நின்று நிலைக்க முடியும்.யார் எந்தக் காரணம் கருதித் தூக்கிப் பிடித்தாலும் இந்த உள்ளுறை உண்மையின் அழகில் மட்டுமே ஒரு படைப்பு காலம் கடந்து நிற்பதற்கான வேர் ஓடி நிற்கிறது.எம். டி.வாசுதேவன் நாயர் எழுதிய காலம் நாவலை ஆங்கில மொழியில் தந்த கீதா கிருஷ்ணன் குட்டி என்ற மொழி பெயர்ப்பாளரின்  அனுபவப் பதிவு இந்தக் காலம் பற்றிய எண்ணங்களை மீளவும் உறுதி செய்வதாக அமைந்தது.'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே' என்ற பாடல் என் சிறு வயது முதலே என் மனப் பரப்பில் பதிந்த ஒன்று."எங்களுக்கும் காலம் வரும்;காலம் வந்தால் வாழ்வு வரும்;வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே"என்று இன்னொரு  பாடல் நம் மனதில்நீங்கா இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடல் உழைப்பவர் பாடும் பாடலாக 'பாவ மன்னிப்பு'படத்தில் இடம் பெற்று இருந்தது.உழைக்கும் வர்க்கம் மட்டுமே தனக்கு வாழ்வு வந்ததும் சக மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வு தரும் முனைப்புடன் இருக்கிற ஒரே வர்க்கம் என்ற உண்மை இந்தப் பாடலின் உள்ளுறையும் சத்தியம்.எனவே இது காலம் கடந்து நிற்கிறது;நிற்கும்.