Tuesday, April 9, 2013

பாடல் எடுத்துப் பாடுக மனமே ....!

பாட்டு என்ற பெரும் ஆச்சரியம் குறித்து எப்போதும் நான் பிரமிப்புடன் அணுகி வந்திருப்பவன்.முறைப்படி இசை பயில வேண்டும் என்ற என் கனவு இன்று வரையிலும் கனவாகவே இருந்துவருகிறது.ஆனால் திண்டுக்கல்   நகரில் பேராசிரியர் மா.வயித்தியலிங்கன் அவர்களின் அன்புமிக்க ஒரு வழிகாட்டுதலின் விளைவாக சில நல்ல தமிழிசைப் பாடல்களை முறைப்படி பாடும் பயிற்சி பள்ளி நாட்களில் கிடைத்தது.பிறகு இயக்கம் சார்ந்த பணிகளின் போதும்,அறிவொளி மற்றும் அறிவியல் இயக்கப் பணிகளின் போதும் பாட் டு இல்லாத நாளே இல்லை   என்று சொல்லும் வண்ணம் தினமும் பாடல்களின் உலகில்தான் வாழ்ந்திருந்தேன்.குறிப்பாக நெல்லை கரிசல் கிருஷ்ணசாமி குழுவுடன் வேலூர் மாவட்டம் முழுக்க சுற்றி வந்த ஒரு காலம் பாட்டுப் பெருங்கடலில் மூழ்கி  மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலம்.அதே போல மதுரை மணவாளன் குழுவுடன் அப்போது ஒன்றுபட்ட வடஆற்காடு மாவட்டம் முழுவதும் சுற்றிய நாட்களும் அவ்வாறே.இப்போது நினைத்தாலும் மறுபடி ஒருபோதும் அடைய முடியாத இழந்த சொர்க்கம் அது.சமீபத்தில் ஒரு கட்டுரை எழுத நேர்ந்த சமயத்தில் மீண்டும் எனது பாட்டுலகில் ஒரு மீள்பயணம் சென்று வரும் நல்வாய்ப்புக் கிடைத்தது.அமரர் ஜீவாஎழுதிய பாடல்கள் பற்றி சு.போ.அகத்தியலிங்கம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.அதற்கு ஒரு அறிமுகக் கட்டுரையாக "பாடல் எடுத்துப் பாடுக மனமே"என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதினேன்.அது இந்த மாதம் முதல் வாரத்தின் "புதிய பார்வை"இதழில் வந்திருக்கிறது.எழுதியவன் பெயர் இல்லாமலே வந்திருப்பினும் எனது கட்டுரயில் ஒரு வரிகூட விடுபடாமல் வந்திருப்பது ஒரு சந்தோசம்தானே!நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரை ஒரே மூச்சில் எழுதப்பட்டது.மிக உணர்வுமயமானது. பரிணாமன் பாடல் வரி ஒன்றும்,வேறு சில பாடல்களும் இந்தக் கட்டுரையின் ஊற்றுக் கண்கள்.இதுபற்றி இன்னொரு முறை விரிவாகப் பதிவிடலாம்...!