Saturday, February 23, 2013

கலைஞர்களின் வெற்றியும் தோல்வியும்

மார்ச் மாத சண்டே இந்தியன் பத்திரிகையில் உதயசங்கரின் நேர்காணல்  வந்துள்ளது.படைப்பாளியின் வெற்றி தோல்வி குறித்த அவரின் சிந்தனைகள் நன்கு வெளிப்பட்டுள்ள இந்த நேர்காணலில் மிக நுட்பமான சில விசயங்கள் இடம் பெற்றுள்ளன.முப்பது ஆண்டுகள்;எட்டு கதைத்தொகுதிகள்;ஐந்து கவிதைத் தொகுப்புகள்;குறுநாவல் தொகுப்பு ஒன்று;ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்கள்  இப்படி உதயசங்கரின் பங்களிப்பு கணிசமானது.மானுடத்தின் இருண்ட பக்கங்களையும்,ஒளிவீசும் நம்பிக்கைகளையும் கலை இலக்கியத்தைத் தவிர வேறு எதனால் சொல்லி விட முடியும் என்று கேட்கிறார் உதயசங்கர்.இலக்கியத்தில் வெற்றி தோல்வி என்று சமகாலத்தில் கணிக்க முடியாது என்று கருதுகிறார் அவர்.அங்கீகாரம் பெரும் போது உற்சாகம் அடைவதுபோல அலட்சியப் படுத்தும் போது அதே தீவிரமான வலியுடன் அடுத்த படைப்பை நோக்கிப் பயணிக்கிறார் அவர்.கோவில்பட்டி என்ற சிறு நகரின் வெம்மையின்,பெருமூச்சின் அழுத்தம் உதயசங்கரின் படைப்புகளில் வெளிப்பட்டுத் தெரிகின்றன.இப்போது அவர் கதை வசனம் எழுதிய நினைவோடு கலந்து விடு திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.இந்த நேர்காணல் அவரின் இன்னொரு பரிணாமம் என்றால் மிகையில்லை.      

Tuesday, February 5, 2013

சொல்வனமும் சொல்லாத சோகங்களும்

உதயசங்கரின் இரண்டு கட்டுரைகளை "சொல் வனம் " என்கிற இணைய இதழில் நேற்றுப் படித்தேன்.ஒன்று,க.நா.சு.பற்றியது;இன்னொன்று கடல்புரத்தில் நாவல் பற்றியது.உதயசங்கரின் எழுத்து என்றுமே என்னை வசீகரிக்கும் சொல் ஓவியங்கள்தாம்.மனித மனதில் எவ்வளவு சங்கடங்கள் மண்டிக் கிடந்தாலும் அவற்றை மீறி மேல் எழுந்து வரும் அன்பு ஒன்று அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விடும் வல்லமை படைத்த ஒன்றாய் இருக்கிறது.தமிழுக்கு க.நா.சு.செய்த பங்களிப்பு பற்றி உதயசங்கர் பேசியிருப்பது மனதை நெகிழச் செய்யும் விதத்தில் இருக்கிறது.அதே போல வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் பற்றி எழுதியிருப்பது. வண்ணநிலவன் கதைகள் படித்து பரவசமாகித் திரிந்த அனுபவங்கள் உதயசங்கரின் கட்டுரையைப் படித்ததும் மளமளவென்று மனப்பரப்பில் வந்து அலைமோதின.சொல்லில் அடங்காத சோகங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் பிலோமி போன்ற மனுஷிகள் தான் வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றார்கள்.யாவர் வீட்டிலும் தொகுப்பு வந்த ஒரு மாதத்தில் க.நா.சு. அதைப்படித்துப் பாராட்டிய செய்தி ஒன்றை நினைவுக்குக் கொண்டு வந்தது:நமது நண்பர்கள்  மௌனம் சாதிக்கும் விதம் பற்றி நிறைய அனுபவங்கள் இருந்தாலும் மீண்டும் அவறை உதயசங்கர் வாரி வெளியே கொண்டுவந்து கொட்டி விட்டார்.படைப்பின் நுட்பங்கள் யாவும் வசப்பட்ட ஒரு எழுத்தாளர் அவர்.அவரின் வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமும் ஒன்றுகலந்து உருவான சொல்வனத்தில் எழில் மரங்களும்,பயன்தரு கொடிகளும்,செடிகளும் செழித்துக் கிடக்கின்றன.எப்போதும்போல நான் அவற்றில் மனம் பறிகொடுத்து நிற்கிறேன்.நடக்கிறேன்.பறக்கிறேன்.இனம்புரியாத ஒரு சோகம் வந்து மனதில் நிறைந்து  தளும்பியது  

Sunday, February 3, 2013

எழுதிச் செல்லும் கைகள்

உமர்கய்யாமின் ஒரு பாடலை நான் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம்.எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்;அழுது கெஞ்சி நின்றாலும் அதிலொரு எழுத்தேனும்  மாற்றிடுமோ என்று வருகிற அந்தப் பாடல் மனித வாழ்வின் விசித்திரங்களைச் சொல்லுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.படைப்பாளியின் கைகள் எழுதிக்கொண்டேதான் செல்லுகின்றன.அவன் படைக்கும் படைப்புகளில் வருகிற மனிதர்களின் வாழ்க்கை இந்த எழுத்தாளனின் கைகளில்.இவன்தான் படைக்கிறான் என்றாலும் தன படைப்பின் போக்கு இவனுக்கு ஓரளவுக்கு மேல் பிடிபடாமல் போகிறது.பாத்திரங்கள் தமது வாழ்க்கையைத் தாமே முடிவு செய்து விடுகின்றன.அவற்றின் போக்கு படைப்பவனுக்கே புதிராக இருக்கிறது.எழுதுபவனின்     கைகள் எழுதிகொண்டேதான் இருக்கின்றன.இவனும் இவன் எழுத்தும் என்று அவை தலையில் அடித்துக் கொள்கின்றன.விலகி நின்று கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன.படைப்பாளி திகைத்துப் போகிறான். நான்தானே உன்னைப் படைத்தேன்,நீ இப்படிச் செய்யலாமா என்று இவன் பரிதாபக் குரல் எழுப்பினாலும் அவை இரக்கம்  காட்டுவது இல்லை.என்ன ஒரு விசித்திரம்!வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்த கதைதான்!என்றாலும் இந்த எழுத்தாளன் சும்மா இருக்கிறானா?எவ்வளவு பட்டாலும் அறிவு வராத ஒரு ஜென்மம் உண்டு என்றால் அது இந்த எழுத்தாளன் ஒருவன்தான்.என்னவோ இவன் எழுதித்தான் இந்த உலகம் உய்யும் என்று அசட்டு நம்பிக்கை,அவ்வளவுதான்!எனவே அவனுடைய கைகள் எழுதிச் செல்கின்றன!   வேறென்ன சொல்ல?