Thursday, March 13, 2014

கனவுகள் சிறகு விரிக்கும் காலம்

இந்த ஆண்டின் இரண்டாவது பதிவு இது.எனது புத்தகம் "தமிழ் நாட்டில் தேவதாசிகள்' வெளியாகி பரவலான கவனம் பெற்றுள்ளது.முனைவர் சதாசிவம் ஆங்கிலத்தில் எழுதிய புத்தகத்தின் மொழியாக்கம் இது.இது தவிர கடந்த ஆண்டு இறுதியில் ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூலையும் எழுதி அதை வையவி பதிப்பகம் மூலம் வெளியிட்டு உள்ளேன். பல புதிய முயற்சிகள் செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறேன்.கனவுகள் சிறகு விரிக்கும் காலம் இது.இந்த மாத "புதிய புத்தகம் பேசுது' மற்றும் "உங்கள் நூலகம் 'இதழ்களில் எனது நூல் அறிமுகக் கட்டுரைகள் வெளியாகி உள்ளன.சதத் ஹசன் மாண்டோ வின் சிறுகதைகளை நண்பர் உதயசங்கர் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.உருது மொழியின் இணையற்ற படைப்பாளியான மாண்ட்டோ கதை உலகம் துயரம் நிரம்பியது.இந்திய பாகிஸ்தான் பிரிவினையின் இரத்தம் தோய்ந்த வாழ்க்கைப் பதிவுகள் அவை.அந்தக் கொந்தளிப்பை,அதன் வலியை ,உக்கிரத்தை வெடிப்புறப் பேசுகிற கதைகள் இவை.படிக்கிற போதே நம் குருதியை உறையச் செய்பவை..மதம் என்னும் பேயின் வெறியாட்டம் எப்படி இருக்கும்,என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என்று அறியவும் உணரவும் இக்கதைகள் தம்முள் எண்ணற்ற வழிகளை திறந்து விடுகின்றன.உள்ளே நுழைந்து நாம் கவனிக்கத் தொடங்கினால் போதும்.நமது மனச்சான்று விழித்துக் கொள்ளும்.அதன் குரல் நம்மைத் தூங்க விடாது.இந்தப் பூமியில் இனி மானுடம் மதத்தின் பேரால் மோதி மடியாத காலம் வருமா என்று நம்மை ஏங்கச் செய்து விடுகிற கதைகள் இவை.நல்ல கனவுகள் நனவாகும் காலம் வருமா