Monday, December 30, 2013

அகக் கடலில் அலைமோதும் எண்ணங்கள்

முக நூலில் போன மாதம் முகங் காட்டினேன்.அதன் பிறகு கடந்த சில நாட்களில் அதில் பல புதிய நண்பர்களின் அறிமுகம் தொடர்கிறது.சற்று முன்  ஜீவசுந்தரி அவர்கள் கொடுத்த குறிப்பைப் பார்த்தேன். எந்த ஊரில் நான் வளர்ந்தேன் என்று ஒரு கேள்வியும் இருந்தது.திண்டுக் கல் என்ற ஊரில் பிறந்து வளர்ந்த நான் படித்து அங்கு டெக்னிக்கல் ட்ரைனிங் படித்தேன். சென்னை,வேலூரில் வாழ்க்கை.பின் மீண்டும் சென்னை.இங்கு கடந்த இருபது ஆண்டுகளாக ஓடும் வாழ்க்கை நதி.எழுத்தும் படிப்பும் இரு கண்களாய் இருக்கின்றன.1970 ம் ஆண்டு என் முதல் சிறுகதை மத்தாப்பு இதழில் வந்தது.பின் தொடர்ந்து கல்கி,குங்குமம், தீபம் செம்மலர்,சிகரம்,தினமணி கதிர் சுபமங்களா குமுதம் தீராநதி புதிய புத்தகம் பேசுது என்று பல இதழ்களில் கதைகளும் கட்டுரைகளும் மொசிபெயர்ப்புகளும் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.என் முதல் சிறுகதைத் தொகுப்பை மறைந்த "அன்னம்' மீரா அவர்கள் வெளியிட்டார்.பாத்து ஆண்டு இடைவெளிக்குப் பின் "நம் எல்லாரிடத்திலும் ஒரு சிற்பி கட்டுரைத்தொகுப்பை ஸ்ரீநிவாசன் வெளியிட்டார். தொடர்ந்து பன்னிரண்டு புத்தகங்கள் வந்து விட்டன. உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வரலாற்று நூலும் மிச்சம் மீதி என்று ஒரு வித்தியாசமான வரலாற்று நூலும் வந்துள்ளன. கடைசியாக வந்திருப்பது ஸ்டீபன் ஹாகிங் வரலாற்று நூல்.எழுத்துக் கலை என்ற ஜீவ நதியின்கரை ஓரம் நின்று நீர் அள்ள முயலும் தாகம் நிறைந்த ஒரு மனிதன் என்பதற்கு மேல் இப்போது வேறு என்ன எழுத?    

Tuesday, December 3, 2013

குயில் பாட்டும் புது மின்னலும்

 இந்தப் பதிவில் எனது இடுகை இடம்பெற்று நீண்ட காலம் ஓடி விட்டது.எண்ணங்கள் என்னவோ அலைமோதிக் கொண்டுதான் இருக்கின்றன.அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல்தான் பொங்குவதேன் என்று பொன்னியின் செல்வன்  வரும் பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன.படிக்கும் ஒவ்வொரு புதிய புத்தகமும் நமது சிந்தனைகளைக் கூர்மை ஆக்குகின்றன.கல்கத்தா சு.கிருஷ்ணாமூர்த்தி எழுதிய என் வாழ்க்கைப் பயணம் புத்தகமும் அவ்வாறே எண்ணற்ற நினைவு அலைகளை எழுப்பியது.தீபம் பத்திரிகை அதில் வந்த பல முக்கியமான படைப்புகள் பற்றிய பதிவுகளை அவர் செய்திருக்கிறார்.வேறு பல புத்தகங்களையும் படித்துக் கொண்டு இருக்கிறேன்.உதயசங்கர் மொழி பெயர்ப்பில் சதாத் ஹசன் மோண்டோ கதைகள் நூலும் அவற்றில் ஒன்று. சிவப்பு மழைக் கொட்டு அணிந்த பெண் என்ற கதை உட்பட அவரின் மிக முக்கியமான கதைகளை உதயசங்கர் மிக உணர்ச்சித் துடிப்புடன் தமிழில் தந்திருக்கிறார்.இன்னும் முழுமையாகப் படித்து முடிக்க முடியவில்லை.இன்று மகாகவி பாரதியின் குயில் பாட்டு நீள் கவிதையை மீண்டும் எடுத்துப் படித்தேன்.புதுமின் என்ற சொற் பிரயோகம் நெஞ்சில் பதிந்தது.இதே பிரயோகத்தை ச.து.சு.யோகி தன பாடல் ஒன்றில் பிரயோகித்ருக்கிறார்.குழ்ந்தை யின் மென்னுடலை புதுமின் போல் வளயுமுடல் என்கிறார்.மின்னல் என்பதே ஒரு புதுப் பாய்ச்சல்தான். அதில் புது என்பதும் செரும்விந்தையை இந்த இரு கவிகளும் வியந்து பாடுகிற அழகை வியக்காமல் இருக்க முடியவில்லை.

Monday, September 16, 2013

புவியரசின் மொழியாக்கம் உதயசங்கரின் தொகுப்பு

இரண்டு நாட்களுக்கு முன்பு புவியரசு எழுதிய ஒரு பிரசுரம் கிடைத்து அதைப் படித்துப் பார்த்தேன்.தச்தய்வேஸ்கி எழுதிய கரமசோவே சகோதரர்கள் நாவல் மொழிபெயர்ப்பு பற்றிய முன்னோட்டம் அது.இந்த நாவல் மற்றும் "குற்றமும் தண்டனையும் " இடியட்" வெண்ணிற இரவுகள் " போன்ற நாவல்கள் குறித்துப் பல கட்டுரைகளை வாசித்திருந்தாலும் இதன் தாக்கம் மிக வலுவானதாக இருக்கிறது.இதே நாட்களில் உதயசங்கரின் "நினைவு என்னும் நீள் நதி" கட்டுரைத் தொகுப்பையும் படித்தேன்.இவை "மீடியா வாய்ஸ்" இதழில் தொடர் ஆக வந்த போதே படித்து இருந்தாலும் இப்போது ஒரே மூச்சில் படித்து முடித்து அசை போடும் அனுபவம் மிக நெகிழ்வூட் டுவதாக் இருந்தது.பாலிய காலம் திரும்ப வராதது.உதயசங்கரின் மொழிநடை மிக இனிமையானது.வெள்ளந்தியான ஒரு சிறு வயது பதிவுகள் மனதை என்னவோ செய்தன.படித்து விட்டு அவரிடம் பேசிய பொது நான் உணர்ந்ததை ஒரு சிறு பகுதியைக் கூட வெளிப் படுத்த முடியவில்லை.மனிதனின் மனம் என்ற புதிரின் விடை தெரிந்தால் நாம் முழுமையாக நமது மன உணர்சிகளை வெளிப்படுத்தி விடலாம்.ஆனால்?  

Tuesday, April 9, 2013

பாடல் எடுத்துப் பாடுக மனமே ....!

பாட்டு என்ற பெரும் ஆச்சரியம் குறித்து எப்போதும் நான் பிரமிப்புடன் அணுகி வந்திருப்பவன்.முறைப்படி இசை பயில வேண்டும் என்ற என் கனவு இன்று வரையிலும் கனவாகவே இருந்துவருகிறது.ஆனால் திண்டுக்கல்   நகரில் பேராசிரியர் மா.வயித்தியலிங்கன் அவர்களின் அன்புமிக்க ஒரு வழிகாட்டுதலின் விளைவாக சில நல்ல தமிழிசைப் பாடல்களை முறைப்படி பாடும் பயிற்சி பள்ளி நாட்களில் கிடைத்தது.பிறகு இயக்கம் சார்ந்த பணிகளின் போதும்,அறிவொளி மற்றும் அறிவியல் இயக்கப் பணிகளின் போதும் பாட் டு இல்லாத நாளே இல்லை   என்று சொல்லும் வண்ணம் தினமும் பாடல்களின் உலகில்தான் வாழ்ந்திருந்தேன்.குறிப்பாக நெல்லை கரிசல் கிருஷ்ணசாமி குழுவுடன் வேலூர் மாவட்டம் முழுக்க சுற்றி வந்த ஒரு காலம் பாட்டுப் பெருங்கடலில் மூழ்கி  மூச்சுத் திணறிக் கொண்டிருந்த காலம்.அதே போல மதுரை மணவாளன் குழுவுடன் அப்போது ஒன்றுபட்ட வடஆற்காடு மாவட்டம் முழுவதும் சுற்றிய நாட்களும் அவ்வாறே.இப்போது நினைத்தாலும் மறுபடி ஒருபோதும் அடைய முடியாத இழந்த சொர்க்கம் அது.சமீபத்தில் ஒரு கட்டுரை எழுத நேர்ந்த சமயத்தில் மீண்டும் எனது பாட்டுலகில் ஒரு மீள்பயணம் சென்று வரும் நல்வாய்ப்புக் கிடைத்தது.அமரர் ஜீவாஎழுதிய பாடல்கள் பற்றி சு.போ.அகத்தியலிங்கம் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார்.அதற்கு ஒரு அறிமுகக் கட்டுரையாக "பாடல் எடுத்துப் பாடுக மனமே"என்ற தலைப்பில் விரிவான கட்டுரை எழுதினேன்.அது இந்த மாதம் முதல் வாரத்தின் "புதிய பார்வை"இதழில் வந்திருக்கிறது.எழுதியவன் பெயர் இல்லாமலே வந்திருப்பினும் எனது கட்டுரயில் ஒரு வரிகூட விடுபடாமல் வந்திருப்பது ஒரு சந்தோசம்தானே!நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தக் கட்டுரை ஒரே மூச்சில் எழுதப்பட்டது.மிக உணர்வுமயமானது. பரிணாமன் பாடல் வரி ஒன்றும்,வேறு சில பாடல்களும் இந்தக் கட்டுரையின் ஊற்றுக் கண்கள்.இதுபற்றி இன்னொரு முறை விரிவாகப் பதிவிடலாம்...!

Friday, March 22, 2013

மணிமேகலை ஏந்திய தீபம்

மணிமேகலை என்ற தமிழ்க்காப்பியம் என்னை மிகவும் கவர்ந்த மரபு இலக்கியங்களில் ஒன்று.சிலம்பின் வழி அதன் தொடர்ச்சியாகவும் சககவிஞன் ஒருவரின் படைப்பாகவும் அமைந்த காவியம் இது.இரட்டைக் காப்பியங்கள் என்று புகழ் பெற்ற இலக்கியங்கள் இந்த இரண்டும்.மாதவி என்ற ஒரு தனிச் சிறப்பு மிக்க பெண்ணின் மகளாகப் பிறந்து மணிபல்லவத் தீவில் தன முற்பிறவி பற்றி அறிகிறாள். இளவரசன் உதயகுமாரன் தன மீது கொண்ட காதலை ஏற்க மறுத்துத் துறவறம் பூண முடிவு செய்கிறாள். அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சமணமும்,பௌத்தமும் மிகுந்த செல்வாக்குடன் இருந்ததால் அந்தத் தத்துவ அடிப்படையில் பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி தீர்க்க அமுதசுரபி ஏந்துகிறாள்.கொலைப்பழிக்கு ஆளாகி சிறைவாசம் செய்ய நேர்கிறது. எந்த இடையூரையும் பொருட்படுத்தாமல் தன இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு போய் க் கொண்டிருப்பாள் மணிமேகலை.நேற்று ஒரு அறிக்கையின் மீது என் கவனத்தை நண்பர் ஒருவர் ஈர்த்தார்.இந்தியாவின் விவசாயிகள் மக்கள் தொகையில் சுமாராக ஐம்பது சதம்பேர் இருக்கலாம் என்றும் அவர்களுக்கு ஜீவாதாரமாக விவசாயம் இருந்தாலும் அதன் இன்றைய உற்பத்தித் திறன் மிகக்குறைவு என்பதால் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்பது போலவும் கருத்து வெளிப்பட்டிருந்தது.இன்று பிரதமரும் ப.சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளும் சொல்லுவது இதைதான்.இவ்வளவு பெரிய விவசாய நாட்டில் மிகப் பிரமாண்டமான மனித ஆற்றலும் எண்ணற்ற இயற்கை வளங்களும் வற்றாத கங்கை,பிரம்மபுத்திரா போன்ற ஜீவ   நதிகளும்        நிறைந்த நாட்டில் இப்படி ஓர் அவல நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.உலக மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் அந்த மக்களைப் பார்த்து விவசாயத்தில் நஷ்டம் வந்தால் அதை விட்டு விட்டு வேறு தொழில் செய்யப் போக வேண்டியதுதானே என்று இந்த நாடு சொல்கிறது.இன்று இந்த இருளின் நடுவே மனிமேகளை போன்று ஓர் இலட்சிய தீபம் ஏந்திய கைகள் எங்கே?ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னும் ஒரு விடியல் வரும் என்கிறார்களே அது உண்மையா?என்று வரும் அந்த விடியல்?

Thursday, March 14, 2013

எண்ணங்கள் ஆயிரம்

இன்று உதயசங்கர் பேசினார்.வசூரில் இருந்து கவிப்பித்தன் சொன்ன தகவலும் சேர்ந்து சில சிந்தனைகளைக் கிளறின.குழந்தைகள் மீதான கரிசனம் இன்று அதிகம் ஆகியிருப்பது பற்றி உதயசங்கரின் கட்டுரையை மையமாக வைத்து நான் ஒரு இடுகையில் பதிவு செய்திருந்தேன்.அது பற்றி நண்பர் விமலன் ஒரு வரிக்கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்,படைப்பு மனநிலைகள் ஒரு நேரம்போல மறுநேரம் இருப்பது இல்லை.ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை நமக்கு எண்ணற்ற படிப்பினைகளைத் தருகிறது.ஒவ்வொரு நிகழ்வும்  படைப்பாளிகளின் மனக்கடலில் பெரும் அலைகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாக இருக்கின்றன எந்த ஒரு நிகழ்வும் இந்த சமூக அமைப்பின் விலைபொருள்  என்ற வகையில் இந்த அமைப்பின் அரசியலும் அந்தப் படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன .எனவே ஒரு சமூகப் பொறுப்பு உள்ள எழுத்தாளன் தனது படைப்பில் இந்த மனித வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும் ஒரு கரிசனத் தொடுதான் எழுதியாக வேண்டும்.ஆனால் கலைப்படைப்பின் நுட்பங்கள்,அழகியல் அம்சங்கள் கொண்ட படைப்பாக அது இருக்க வேண்டும்.இது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை.எவ்வளவோ படைப்புகள எழுதிய பிறகும் எழுத உட்காரும் ஒவ்வொரு முறையும் இது பெரிய போராட்டமாகவே இருக்கிறது.படிக்கக் கிடைக்கிற ஒவ்வொரு நல்ல படைப்பும் நமது போதாமையை உணர்த்துவதாக இருக்கிறது.இவ்வளவு நாளாக எழுதியும் நாம் இப்படி ஒரு படைப்பைத் தந்து விட முடியவில்லை என்பது ஒரு சோகம்தானே?வெள்ளம்போலக் கிளம்பி வரும் எண்ணங்களைத் திட்டவட்டமான வடிவில் அழகியலுடன் தர முடியுமா?பாரதி வேண்டிய அந்த "மந்த்ரம் போல் வேண்டுமடா சொல் ஒன்று" என்பது நிறைவேறுமா?அலைமோதுகிற இந்த அகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறும் போதுதான் இந்த அவஸ்தையின் பரிமாணம் பிடிபடுகிறது.ஆனால்..அந்த ஒரு சொல் பிடிபடும் காலம் எப்போது?      

Monday, March 11, 2013

குழந்தைகளும் நாமும்

குழந்தைகள் சார்ந்த சிந்தனைகள் நிறைந்த நூல்கள் சமீப காலமாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன.சமூகத்தின் கவனம் குழந்தைகளின் மீது கொஞ்சம் திரும்பி இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.இவற்றைப் படிப்பதன் பயன் என்ன   என்றால் நமது வீட்டுக் குழந்தைகளின் மீது நமது கவனம் இன்னும் சற்றுக் கூடுதலாகப் பதிவதுதான்.என் அனுபவத்தில் எங்கள் பேரனுடன் செலவழிக்கும் நேரம் எல்லாம் மிகப் புதிய அனுபவங்களைத் தந்து செல்கிற பொழுதுகளாக இருக்கின்றன.தோழர் உதயசங்கர் இளைஞர் முழக்கம் இதழில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் இந்த வகையில் பல ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டி விடுவதாக இருக்கிறது."குழந்தைகளின் அற்புதஉலகில் "என்ற தலைப்பில் அவர் கடந்த 24 மாதங்களாக எழுதிக் கொண்டு வருகிறார்.இந்த மாதக் கட்டுரை கல்வியின் அரசியல் பற்றிப் பேசுகிறது.இந்த அரசியல் நமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் பாதிப்பதாக இருக்கிறது. தங்களின் பள்ளி ஆசிரியருக்கு "எங்களை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க" என்று கேட்டு மாணவர்கள் எட்டுப் பேர் எழுதும் கடிதம் தான் அதே தலைப்பில் வந்துள்ள குறுநூல்.எழுத்தாளர் சாஜகான் தமிழில் கொண்டு வந்த இந்த நூலை மதுரை "வாசல்"பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.இந்தப் புத்தகம் பற்றிய தன சிந்தனைகளை எப்போதும்    போல  போல் உதயசங்கர் ஆழ்ந்த கேள்விகளை எழுப்பி முன்வைக்கிறார்."ஒருவகையில் இது தோற்றுப் போனவர்களின் முழக்கம்.தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி .கூட்டாகக் கற்பது அரசியல்,தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது"என்று நூலின் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கிறார் உதயசங்கர்.குழந்தைகளுடன் வாழ்வது என்பது எவ்வளவு மகத்தான விஷயம் என்று இப்போதுதான் புரிபடத் தொடங்குகிறது.....தொடர்ந்து யோசிப்போம்.     

Wednesday, March 6, 2013

சாவேஸ் மறைந்தார்....

இன்று காலை ஹுயுகோ சாவேஸ் காலமானார் என்ற செய்தி தெரிந்தது.லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் உதிர்ந்து விட்டது.அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்திற்கு எதிராக லத்தின் அமெரிக்க நாடுகளைத் திரட்டி ஒரு மாற்றுப் பாதை வகுக்க முயன்று அதில் ஓரளவு வெற்றிகளையும் அடைந்த வீரர் அவர்.ஆனால் அவரின் முயற்சிகள் முழுமை அடையும் முன்பே மறைந்து விட்டார்.தொடர்ந்து மார்க்சியம் உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தி என்று நிரூபித்தவர் அவர்.      

Saturday, February 23, 2013

கலைஞர்களின் வெற்றியும் தோல்வியும்

மார்ச் மாத சண்டே இந்தியன் பத்திரிகையில் உதயசங்கரின் நேர்காணல்  வந்துள்ளது.படைப்பாளியின் வெற்றி தோல்வி குறித்த அவரின் சிந்தனைகள் நன்கு வெளிப்பட்டுள்ள இந்த நேர்காணலில் மிக நுட்பமான சில விசயங்கள் இடம் பெற்றுள்ளன.முப்பது ஆண்டுகள்;எட்டு கதைத்தொகுதிகள்;ஐந்து கவிதைத் தொகுப்புகள்;குறுநாவல் தொகுப்பு ஒன்று;ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழியாக்க நூல்கள்  இப்படி உதயசங்கரின் பங்களிப்பு கணிசமானது.மானுடத்தின் இருண்ட பக்கங்களையும்,ஒளிவீசும் நம்பிக்கைகளையும் கலை இலக்கியத்தைத் தவிர வேறு எதனால் சொல்லி விட முடியும் என்று கேட்கிறார் உதயசங்கர்.இலக்கியத்தில் வெற்றி தோல்வி என்று சமகாலத்தில் கணிக்க முடியாது என்று கருதுகிறார் அவர்.அங்கீகாரம் பெரும் போது உற்சாகம் அடைவதுபோல அலட்சியப் படுத்தும் போது அதே தீவிரமான வலியுடன் அடுத்த படைப்பை நோக்கிப் பயணிக்கிறார் அவர்.கோவில்பட்டி என்ற சிறு நகரின் வெம்மையின்,பெருமூச்சின் அழுத்தம் உதயசங்கரின் படைப்புகளில் வெளிப்பட்டுத் தெரிகின்றன.இப்போது அவர் கதை வசனம் எழுதிய நினைவோடு கலந்து விடு திரைப்படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது.இந்த நேர்காணல் அவரின் இன்னொரு பரிணாமம் என்றால் மிகையில்லை.      

Tuesday, February 5, 2013

சொல்வனமும் சொல்லாத சோகங்களும்

உதயசங்கரின் இரண்டு கட்டுரைகளை "சொல் வனம் " என்கிற இணைய இதழில் நேற்றுப் படித்தேன்.ஒன்று,க.நா.சு.பற்றியது;இன்னொன்று கடல்புரத்தில் நாவல் பற்றியது.உதயசங்கரின் எழுத்து என்றுமே என்னை வசீகரிக்கும் சொல் ஓவியங்கள்தாம்.மனித மனதில் எவ்வளவு சங்கடங்கள் மண்டிக் கிடந்தாலும் அவற்றை மீறி மேல் எழுந்து வரும் அன்பு ஒன்று அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விடும் வல்லமை படைத்த ஒன்றாய் இருக்கிறது.தமிழுக்கு க.நா.சு.செய்த பங்களிப்பு பற்றி உதயசங்கர் பேசியிருப்பது மனதை நெகிழச் செய்யும் விதத்தில் இருக்கிறது.அதே போல வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் பற்றி எழுதியிருப்பது. வண்ணநிலவன் கதைகள் படித்து பரவசமாகித் திரிந்த அனுபவங்கள் உதயசங்கரின் கட்டுரையைப் படித்ததும் மளமளவென்று மனப்பரப்பில் வந்து அலைமோதின.சொல்லில் அடங்காத சோகங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் பிலோமி போன்ற மனுஷிகள் தான் வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றார்கள்.யாவர் வீட்டிலும் தொகுப்பு வந்த ஒரு மாதத்தில் க.நா.சு. அதைப்படித்துப் பாராட்டிய செய்தி ஒன்றை நினைவுக்குக் கொண்டு வந்தது:நமது நண்பர்கள்  மௌனம் சாதிக்கும் விதம் பற்றி நிறைய அனுபவங்கள் இருந்தாலும் மீண்டும் அவறை உதயசங்கர் வாரி வெளியே கொண்டுவந்து கொட்டி விட்டார்.படைப்பின் நுட்பங்கள் யாவும் வசப்பட்ட ஒரு எழுத்தாளர் அவர்.அவரின் வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமும் ஒன்றுகலந்து உருவான சொல்வனத்தில் எழில் மரங்களும்,பயன்தரு கொடிகளும்,செடிகளும் செழித்துக் கிடக்கின்றன.எப்போதும்போல நான் அவற்றில் மனம் பறிகொடுத்து நிற்கிறேன்.நடக்கிறேன்.பறக்கிறேன்.இனம்புரியாத ஒரு சோகம் வந்து மனதில் நிறைந்து  தளும்பியது  

Sunday, February 3, 2013

எழுதிச் செல்லும் கைகள்

உமர்கய்யாமின் ஒரு பாடலை நான் அடிக்கடி நினைவு படுத்திக் கொள்வது வழக்கம்.எழுதிச் செல்லும் விதியின் கை எழுதி எழுதி மேற்செல்லும்;அழுது கெஞ்சி நின்றாலும் அதிலொரு எழுத்தேனும்  மாற்றிடுமோ என்று வருகிற அந்தப் பாடல் மனித வாழ்வின் விசித்திரங்களைச் சொல்லுவதாக நான் புரிந்து கொள்கிறேன்.படைப்பாளியின் கைகள் எழுதிக்கொண்டேதான் செல்லுகின்றன.அவன் படைக்கும் படைப்புகளில் வருகிற மனிதர்களின் வாழ்க்கை இந்த எழுத்தாளனின் கைகளில்.இவன்தான் படைக்கிறான் என்றாலும் தன படைப்பின் போக்கு இவனுக்கு ஓரளவுக்கு மேல் பிடிபடாமல் போகிறது.பாத்திரங்கள் தமது வாழ்க்கையைத் தாமே முடிவு செய்து விடுகின்றன.அவற்றின் போக்கு படைப்பவனுக்கே புதிராக இருக்கிறது.எழுதுபவனின்     கைகள் எழுதிகொண்டேதான் இருக்கின்றன.இவனும் இவன் எழுத்தும் என்று அவை தலையில் அடித்துக் கொள்கின்றன.விலகி நின்று கெக்கலி கொட்டிச் சிரிக்கின்றன.படைப்பாளி திகைத்துப் போகிறான். நான்தானே உன்னைப் படைத்தேன்,நீ இப்படிச் செய்யலாமா என்று இவன் பரிதாபக் குரல் எழுப்பினாலும் அவை இரக்கம்  காட்டுவது இல்லை.என்ன ஒரு விசித்திரம்!வரம் கொடுத்தவன் தலையில் கை வைத்த கதைதான்!என்றாலும் இந்த எழுத்தாளன் சும்மா இருக்கிறானா?எவ்வளவு பட்டாலும் அறிவு வராத ஒரு ஜென்மம் உண்டு என்றால் அது இந்த எழுத்தாளன் ஒருவன்தான்.என்னவோ இவன் எழுதித்தான் இந்த உலகம் உய்யும் என்று அசட்டு நம்பிக்கை,அவ்வளவுதான்!எனவே அவனுடைய கைகள் எழுதிச் செல்கின்றன!   வேறென்ன சொல்ல? 

Saturday, January 26, 2013

கண்காட்சி முடிந்தது;வாசிப்பு ?

இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சி முடிந்து விட்டது.பதின்மூன்று நாட்கள் சென்னை நகர பிரதான் சாலையில் மக்கள் வெள்ளம் .அனேகமாக அனைவர் கைகளிலும் புத்தகங்கள்.பூமணியின் "அங்காடி" நாவல் இந்த ஆண்டின் கவனம் பெற்ற நூல்களில் ஒன்று.இந்த முறை நான்கைந்து நாட்கள் அங்கு போனதில் பல விஷயங்கள் கவனத்தில் பதிந்தன.வாசிப்பின் பயனை,சுவையை ஒவ்வொரு வருடமும் கூடுதலான மக்கள் உணர்ந்து வருகிறார்கள்;தீவிர இலக்கிய நூல்கள் வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகம் ஆகி வருகிறது;இளம் வாசகர்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள்.நான் வாசித்த ஒரு புத்தகம் இந்தக் கண்காட்சியில் வெளி வந்த கட்டுரைத் தொகுப்பு.கீரனூர் ஜாகீர் ராஜாவின் "குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை"என்ற அந்தப் புத்தகம்,தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் பற்றி அறிமுகம் செய்கிறது.முதல் சிறுகதை ஆசிரியர் என்று பொதுவாக அறியப்படும் வ.வே.சு.அய்யரின் "குளத்தங்கரை அரசமரம்" கதையில் தொடக்கி,இன்று மிக சமீப காலத்தின் கதை சொல்லிகள் வரை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து மிகுந்த ரசனையுனர்வுடன் எழுதி இருக்கிறார் ஜாகீர்.க.நா.சு.,தஞ்சை பிரகாஷ் ச.தமிழ்ச்செல்வன்,இன்னும் பல படைப்பாளிகளின் கதைகள்,கட்டுரைகள் ,நாவல்கள் பற்றி தன வாசிப்பு அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய கட்டுரை,ச.த .,அன்னா தச்தேவ்ச்கி பற்றிய கட்டுரைகள் மிக நுட்பமானவை.தான் விமர்சகர் அல்ல,ஆனால் சற்றுத் தீவிர வாசகர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்கிறார்.பல படைப்புகளின் அடி நாதம் குறித்து இவர் மிகச் சரியாகவே இனங் காண்கிறார்.தமிழ்ச் செல்வனின் முன்னுரையில் தனது மனதிற்கு நெருக்கமான,தன மனப்பதிவுகளே போன்ற கட்டுரைகள் இவை என்று பாராட்டி   இருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.வேறு பல நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.பூமணியின் நாவலை நான் படிக்க வேண்டும் என்று தொழார் பால்வண்ணம் அவரின் பிரதியைத் தந்தார்.சில பக்கங்கள் படித்தும் பார்த்தேன்.மிக முக்கியமான ஒரு படைப்புதான் என்று உறுதிப்பட்டது.வாசிப்பின் இசையில் எப்போதுமே மனம் பறி கொடுப்பவன் நான்.தீராத ஆச்சரியம் அது.வாழ்க்கையின் பல மேடுபள்ளங்களில் இடறி நான் விழுந்த போதெல்லாம் கைகொடுத்துத் தூக்கி விட்ட கரம் வாசிப்பு அல்லவா?இன்று நான் சரிவில் இருந்து மீளவும் அதுதானே கரம் கொடுத்தது?ஜாகீரின் புத்தகத்தை உதய சங்கருக்கும் மணிமாறனுக்கும் சமர்ப்பணம் செய்த்திருக்கிறார் அவர்.தமிழ்ச் செல்வனின் "வலையில் விழுந்த வார்த்தைகள்" புத்தகமும் வந்திருக்கிறது.அதன் முன்னுரையிலும் உதயசங்கர் பற்றிய வரியொன்று வருகிறது.இவை தவிர வேறுபல புத்தகங்களை அறிமுகம் செய்யும் பொருட்டு படிக்க நேர்ந்தது.பிபன் சந்திராவின் இரண்டு நூல்கள்,வே.ஜீவகுமார் காவிரி பற்றி எழுதியது,அணுவின் ஆற்றல் பற்றி ப.கு.ராஜன் எழுதியது,உணவுப் பாதுகாப்பு பற்றி பிருந்தா காரத் முன்வைக்கும் ஏராளமான வாதங்கள்,அதைத் தமிழில் தந்திருக்கும் பெரியசாமித் தோழர்,மார்க்சிய மூல நூல்களைப் படிப்பதற்கு உதவும் மாரிஸ் கான்போர்தின் கைஏடு இப்படிப் பலவும் படிக்க வேண்டியுள்ளது.வாசிப்புக்கு என்றும் முடிவில்லை,வாழ்க்கையைப் போலவே.....!     

Tuesday, January 15, 2013

மீண்டும் என் மானுட வீதியில்....

எழுதுகிறவன் என்ற முறையில்,தொடர்ந்து கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில் சிறுகதைகள்,கட்டுரைகள்,புத்தக அறிமுகங்கள் இப்படி எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன்.இதுவரை பதினோரு புத்தகங்கள் வந்து விட்டன.அவற்றில் ஏழு மொழிபெயர்ப்பு நூல்கள்.ஆங்கில வழி தமிழில் இலக்கியம்,அரசியல்,சுயசரிதை,தத்துவம் என்று பல பொருள்கள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் அவை.அவற்றில் ஒரு தொகுப்பு நூல் "மானுட வீதி".2007 ஆம் ஆண்டில் கவிஞர் யுகபாரதியின் இயற்கை வெளியீடு மூலம் கொண்டு வரப்பட்டது.எனக்கு மிகப் பிடித்தமான கட்டுரைகள் அவை.கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நூலின் பல பிரதிகள் நண்பர்களுக்கு என்று வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தேன்.கையில் ஒரு பிரதி கூட இல்லாதிருந்தது.இன்று தற்செயலாக நண்பர் கண்ணன் மூலம் அவருக்கு நான் கொடுத்திருந்த பிரதி திரும்பக் கிடைத்தது.அதன் முன்னுரை இன்றும் பொருத்தமான ஒன்றாகவே இருக்கிறது :மொழிபெயர்ப்பு என்பது படைப்பாக்கச் செயலுக்கு சற்றே மாற்றுக் குறைவான ஒன்றென ஒரு கருது நிலவுகிறது.இதை யாரும் வெளிப்படையாக அறிவிப்பது இல்லையே தவிர,மொழி பெயர்ப்பாளர்களுக்குத் தரப்படும் "சமூக மதிப்பு","இடம்"_இந்த நிலத்தடி நீராய்ப் போய்க் கொண்டிருக்கிற மதிப்புக்குச் சான்றுகள் ஆகும்." என்று தொடங்கும் அந்த முன்னுரை,தமிழின் மொழி பெயர்ப்புப் பாரம்பரியம் பற்றி நான் அறிந்த விவரங்களைத் தருகிறது.பிறகு இதில் உள்ள கட்டுரைகள் பற்றியும்,அவை வெளியான இதழ்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.சிற்பி வல்சன் கொலேரியின் "நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி"என்ற அனுபவக் கண்ணோட்டம் இதில் உள்ளது.ஸ்பார்டகஸ் என்ற ரோமானிய அடிமைப் போராளி பற்றிய நூல் அறிமுகம்,மலையாள மொழிப் படைப்பாளிகள் எம்.டி.வாசுதேவன் நாயர் ,பவித்ரன்தீக்குநி  ஆகியோரின் நூல்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளன.ஆனந்த் பட்வரதன் எடுத்த ஆவணப் படங்கள் பற்றியும்,அவற்றை எடுக்கும் பொது அவர் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் அவருடன் நேர்காணல் உள்ளது. ஏ.ஜி.எத்திராஜுலு மொழிபெயர்த்த நூல்கள்,அவரின் அனுபவங்கள் பற்றிய நேர்காணல் ,சஷி தேஷ்பாந்தே யின் கட்டுரை,நாராயன் சுர்வே  எழுப்பிய கலாசாரக் கேள்விகள் கட்டுரைகள் இப்படி எல்லாமே எழுதுகிறவர்களின் அனுபவப் பிழிவுகள் அடங்கியதொகுப்பு "மானுட வீதி".கியூபாவின் புரட்சிகர போராளி ஹோசே மார்த்தி பற்றி அமரந்தா எழுதிய நூல் அறிமுகம் கடைசிக் கட்டுரை."மனிதன் அசிங்கமானவன்;ஆனால் மானுடம் அழகானது "என்கிறார் அவர்.எவ்வளவு அழகான உண்மை!இந்தக் கட்டுரைகளில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற நிறைவு இன்று மீள் வாசிப்பின் இறுதியில் கிடைத்தது.ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று திரும்பிப் பார்க்கும் சமயம் இது."உனது தியாக உள்ளத்தை முட்களால் நிரப்பினேன்.முட்களின்  இடையே மலர்கள் மலரும் என்பதை மறவாதே" என்று தன அம்மாவிற்கு மார்த்தி எழுதும் கடிதம் எவ்வளவு அர்த்தம் நிறைந்தது!இப்படியான பல நல்ல விசயங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தது பற்றி ஒரு நியாயமான பெருமிதம் எழத்தான் செய்கிறது.       

Monday, January 14, 2013

பொங்கல் புத்தாண்டு புத்தகக் கண்காட்சி

இன்று பொங்கல்.புத்தாண்டில் பதினான்கு நாட்கள் ஓடி விட்டன.ஒவ்வொரு புதிய ஆண்டின் போதும் மக்கள் புதிய நம்பிக்கைகளுடன் வாழ்வைத் தொடருகின்றனர்.அவை நிறைவேர்கின்றனவா என்பது வேறு விஷயம்.இன்று நாளை மறுநாள் என்று நம்பிக்கைகளின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே போகின்றன.என்றாவது ஒரு நாள் விடிவு வரும் என்று அவர்களின் பயணம் தொடர்கிறது.இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சி தொடக்கி விட்டது.முன்பு ஒரு போதும் இல்லாத அளவுக்கு ஸ்டால்கள்.லட்சக்கணக்கான புத்தகங்கள். கூட்டம் கூட்டமாக குடுபத்துடன் வந்து செல்லும் மனிதர்கள்.இதுபற்றிய ஒரு விவாதத்தில் பங்கு கொள்ளும் வாய்புக் கிடைத்தது.புதிய தலைமுறை தொலைக் காட்சியில் நானும் காந்தி கன்னதாசனம் சல்மா பாமரன் ஆகியோரும் பங்கு கொண்டோம்.புத்தகங்கள் இன்று  மக்கள் கவனம் செலுத்தும் ஒரு விசயமாக மாறி வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நல்ல நூல்வாசிப்புக்கு இணையான வேறு ஒன்று இல்லை என்பதை உணர்ந்து வருகிறார்கள் என்றே  என்றே தோன்றுகிறது.இந்த விழிப்புணர்வை இன்னும் விரிவாக்க வேண்டும் என்பது நம் முன்புள்ள கடமை.எழுதுகிறேன்,ஆகவே இருக்கிறேன் என்று உதயசங்கர் எழுதியிருக்கிறார்.படிக்கிறேன்,ஆகவே இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம்.படிப்பதால் நாம் வளர்கிறேன்.படிப்பது என் சக மனிதர்களைப் புரிய வைக்கிற வழியாகிறது.வாழ்க்கையாகிறது.நீரோடும் நதியின் கரையில் நின்று இரு கைகளாலும் வாரி வாரிக் குடித்துக் கொண்டிருப்பதும்.படிப்பதும் ஒன்றுதான்.படித்துத் தீரா நதியின் கரை அது.இந்தப் புத்தாண்டில் படிக்கவும்,எழுதவுமான விசயங்கள் மலையெனக் குவிந்து விட்டன.இந்த ஆண்டின் தொடக்கம் நம்பிக்கை அளிப்பதாகத் தான் இருக்கிறது.நம்புகிறேன் ஆகவே படிக்கிறேன் ஆகவே வாழ்கிறேன்