Friday, March 22, 2013

மணிமேகலை ஏந்திய தீபம்

மணிமேகலை என்ற தமிழ்க்காப்பியம் என்னை மிகவும் கவர்ந்த மரபு இலக்கியங்களில் ஒன்று.சிலம்பின் வழி அதன் தொடர்ச்சியாகவும் சககவிஞன் ஒருவரின் படைப்பாகவும் அமைந்த காவியம் இது.இரட்டைக் காப்பியங்கள் என்று புகழ் பெற்ற இலக்கியங்கள் இந்த இரண்டும்.மாதவி என்ற ஒரு தனிச் சிறப்பு மிக்க பெண்ணின் மகளாகப் பிறந்து மணிபல்லவத் தீவில் தன முற்பிறவி பற்றி அறிகிறாள். இளவரசன் உதயகுமாரன் தன மீது கொண்ட காதலை ஏற்க மறுத்துத் துறவறம் பூண முடிவு செய்கிறாள். அன்றைய தமிழ்ச் சமூகத்தில் சமணமும்,பௌத்தமும் மிகுந்த செல்வாக்குடன் இருந்ததால் அந்தத் தத்துவ அடிப்படையில் பௌத்தத் துறவியாகி மக்களின் பசிப்பிணி தீர்க்க அமுதசுரபி ஏந்துகிறாள்.கொலைப்பழிக்கு ஆளாகி சிறைவாசம் செய்ய நேர்கிறது. எந்த இடையூரையும் பொருட்படுத்தாமல் தன இலட்சியப் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு போய் க் கொண்டிருப்பாள் மணிமேகலை.நேற்று ஒரு அறிக்கையின் மீது என் கவனத்தை நண்பர் ஒருவர் ஈர்த்தார்.இந்தியாவின் விவசாயிகள் மக்கள் தொகையில் சுமாராக ஐம்பது சதம்பேர் இருக்கலாம் என்றும் அவர்களுக்கு ஜீவாதாரமாக விவசாயம் இருந்தாலும் அதன் இன்றைய உற்பத்தித் திறன் மிகக்குறைவு என்பதால் அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்பது போலவும் கருத்து வெளிப்பட்டிருந்தது.இன்று பிரதமரும் ப.சிதம்பரம் போன்ற பொருளாதார மேதைகளும் சொல்லுவது இதைதான்.இவ்வளவு பெரிய விவசாய நாட்டில் மிகப் பிரமாண்டமான மனித ஆற்றலும் எண்ணற்ற இயற்கை வளங்களும் வற்றாத கங்கை,பிரம்மபுத்திரா போன்ற ஜீவ   நதிகளும்        நிறைந்த நாட்டில் இப்படி ஓர் அவல நிலையில் விவசாயிகள் இருக்கிறார்கள்.உலக மக்கள் அனைவருக்கும் உணவு வழங்கும் அந்த மக்களைப் பார்த்து விவசாயத்தில் நஷ்டம் வந்தால் அதை விட்டு விட்டு வேறு தொழில் செய்யப் போக வேண்டியதுதானே என்று இந்த நாடு சொல்கிறது.இன்று இந்த இருளின் நடுவே மனிமேகளை போன்று ஓர் இலட்சிய தீபம் ஏந்திய கைகள் எங்கே?ஒவ்வொரு இருட்டுக்குப் பின்னும் ஒரு விடியல் வரும் என்கிறார்களே அது உண்மையா?என்று வரும் அந்த விடியல்?

Thursday, March 14, 2013

எண்ணங்கள் ஆயிரம்

இன்று உதயசங்கர் பேசினார்.வசூரில் இருந்து கவிப்பித்தன் சொன்ன தகவலும் சேர்ந்து சில சிந்தனைகளைக் கிளறின.குழந்தைகள் மீதான கரிசனம் இன்று அதிகம் ஆகியிருப்பது பற்றி உதயசங்கரின் கட்டுரையை மையமாக வைத்து நான் ஒரு இடுகையில் பதிவு செய்திருந்தேன்.அது பற்றி நண்பர் விமலன் ஒரு வரிக்கருத்து ஒன்றைத் தெரிவித்திருந்தார்,படைப்பு மனநிலைகள் ஒரு நேரம்போல மறுநேரம் இருப்பது இல்லை.ஒவ்வொரு நாளும் இந்த வாழ்க்கை நமக்கு எண்ணற்ற படிப்பினைகளைத் தருகிறது.ஒவ்வொரு நிகழ்வும்  படைப்பாளிகளின் மனக்கடலில் பெரும் அலைகளைத் தோற்றுவிக்கக் கூடியவையாக இருக்கின்றன எந்த ஒரு நிகழ்வும் இந்த சமூக அமைப்பின் விலைபொருள்  என்ற வகையில் இந்த அமைப்பின் அரசியலும் அந்தப் படைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் ஒரு பங்கு வகிக்கின்றன .எனவே ஒரு சமூகப் பொறுப்பு உள்ள எழுத்தாளன் தனது படைப்பில் இந்த மனித வாழ்க்கையைப் பாதிக்கும் எந்த ஒரு விசயத்தைப் பற்றியும் ஒரு கரிசனத் தொடுதான் எழுதியாக வேண்டும்.ஆனால் கலைப்படைப்பின் நுட்பங்கள்,அழகியல் அம்சங்கள் கொண்ட படைப்பாக அது இருக்க வேண்டும்.இது ஒன்றும் அவ்வளவு எளிதான விசயமாக இருப்பதில்லை.எவ்வளவோ படைப்புகள எழுதிய பிறகும் எழுத உட்காரும் ஒவ்வொரு முறையும் இது பெரிய போராட்டமாகவே இருக்கிறது.படிக்கக் கிடைக்கிற ஒவ்வொரு நல்ல படைப்பும் நமது போதாமையை உணர்த்துவதாக இருக்கிறது.இவ்வளவு நாளாக எழுதியும் நாம் இப்படி ஒரு படைப்பைத் தந்து விட முடியவில்லை என்பது ஒரு சோகம்தானே?வெள்ளம்போலக் கிளம்பி வரும் எண்ணங்களைத் திட்டவட்டமான வடிவில் அழகியலுடன் தர முடியுமா?பாரதி வேண்டிய அந்த "மந்த்ரம் போல் வேண்டுமடா சொல் ஒன்று" என்பது நிறைவேறுமா?அலைமோதுகிற இந்த அகக் கடலில் மூழ்கி மூச்சுத் திணறும் போதுதான் இந்த அவஸ்தையின் பரிமாணம் பிடிபடுகிறது.ஆனால்..அந்த ஒரு சொல் பிடிபடும் காலம் எப்போது?      

Monday, March 11, 2013

குழந்தைகளும் நாமும்

குழந்தைகள் சார்ந்த சிந்தனைகள் நிறைந்த நூல்கள் சமீப காலமாக நிறைய வந்து கொண்டிருக்கின்றன.சமூகத்தின் கவனம் குழந்தைகளின் மீது கொஞ்சம் திரும்பி இருக்கிறதென்றே சொல்ல வேண்டும்.இவற்றைப் படிப்பதன் பயன் என்ன   என்றால் நமது வீட்டுக் குழந்தைகளின் மீது நமது கவனம் இன்னும் சற்றுக் கூடுதலாகப் பதிவதுதான்.என் அனுபவத்தில் எங்கள் பேரனுடன் செலவழிக்கும் நேரம் எல்லாம் மிகப் புதிய அனுபவங்களைத் தந்து செல்கிற பொழுதுகளாக இருக்கின்றன.தோழர் உதயசங்கர் இளைஞர் முழக்கம் இதழில் தொடர்ந்து எழுதிவரும் கட்டுரைகள் இந்த வகையில் பல ஆழ்ந்த சிந்தனைகளைத் தூண்டி விடுவதாக இருக்கிறது."குழந்தைகளின் அற்புதஉலகில் "என்ற தலைப்பில் அவர் கடந்த 24 மாதங்களாக எழுதிக் கொண்டு வருகிறார்.இந்த மாதக் கட்டுரை கல்வியின் அரசியல் பற்றிப் பேசுகிறது.இந்த அரசியல் நமது வாழ்வின் எல்லா அம்சங்களையும் பாதிப்பதாக இருக்கிறது. தங்களின் பள்ளி ஆசிரியருக்கு "எங்களை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க" என்று கேட்டு மாணவர்கள் எட்டுப் பேர் எழுதும் கடிதம் தான் அதே தலைப்பில் வந்துள்ள குறுநூல்.எழுத்தாளர் சாஜகான் தமிழில் கொண்டு வந்த இந்த நூலை மதுரை "வாசல்"பதிப்பகம் வெளியிட்டு உள்ளது.இந்தப் புத்தகம் பற்றிய தன சிந்தனைகளை எப்போதும்    போல  போல் உதயசங்கர் ஆழ்ந்த கேள்விகளை எழுப்பி முன்வைக்கிறார்."ஒருவகையில் இது தோற்றுப் போனவர்களின் முழக்கம்.தங்களைத் தோற்கடித்த கல்விமுறைக்கு எதிரான பரணி .கூட்டாகக் கற்பது அரசியல்,தனியாகக் கற்பது சுயநலம் என்று எச்சரிக்கிறது"என்று நூலின் கருத்துகளை முன்வைத்து விவாதிக்கிறார் உதயசங்கர்.குழந்தைகளுடன் வாழ்வது என்பது எவ்வளவு மகத்தான விஷயம் என்று இப்போதுதான் புரிபடத் தொடங்குகிறது.....தொடர்ந்து யோசிப்போம்.     

Wednesday, March 6, 2013

சாவேஸ் மறைந்தார்....

இன்று காலை ஹுயுகோ சாவேஸ் காலமானார் என்ற செய்தி தெரிந்தது.லத்தின் அமெரிக்க நாடுகளில் ஒரு நம்பிக்கை நட்சத்திரம் உதிர்ந்து விட்டது.அமெரிக்க வல்லரசின் ஆதிக்கத்திற்கு எதிராக லத்தின் அமெரிக்க நாடுகளைத் திரட்டி ஒரு மாற்றுப் பாதை வகுக்க முயன்று அதில் ஓரளவு வெற்றிகளையும் அடைந்த வீரர் அவர்.ஆனால் அவரின் முயற்சிகள் முழுமை அடையும் முன்பே மறைந்து விட்டார்.தொடர்ந்து மார்க்சியம் உலக அரங்கில் தவிர்க்க முடியாத சக்தி என்று நிரூபித்தவர் அவர்.