Wednesday, March 24, 2010

இன்றொரு புதிய உலகம்.

இன்றொரு புதிய உலகம்....தினசரி வேலைகளின் அழுத்தம் காரணமாக இந்தப் பதிவுகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை.இன்று எனது துணைவியாரின் "பாடினியார்"வலைப் பக்கங்களில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.ஒரு வாசகன் ஆக என்னை மாற்றிக் கொண்டு படிக்கையில் அவரின் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந்தன.ஒரு பெண்,தாய்,மனைவி,மகள் என்ற பல பரிமாணங்கள் அவரின் பதிவுகளில் வண்ணங்கள் காட்டுகின்றன.பிரசவ வேதனை மிக்க ஒரு நாளில் தன பக்கத்துப் படுக்கையில் சின்னப்பொண்ணு என்று ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பதிவையும் கவனத்தில் வைத்திருந்து இதனை வருடம் சென்ற பிறகும் உயிர்ப்புடன் எழுத்துவடிவம் தர முடிந்தது பெரும் வியப்புத் தரும் விஷயம்.தான் பார்க்கும் படங்கள்,தன இளமைக்கால நினைவுகள்,குடும்பம்  என்கிற ஒரு வெளியில் கடந்து செல்லும் இனிமையும் வலியும் மிக்க நேரங்கள்,  வெளியில் பயணங்களில் காண நேர்ந்த காட்சிகளும் மனிதர்களும் ...என்று பன்முகம் கொண்டவை ஜெயந்தியின் பதிவுகள்.அவருக்குள் ஒரு படைப்பாளி இருப்பதை எப்போதோ உணர்ந்திருக்கிறேன். "அதுவும்...."என்ற தலைப்பில் நான் எழுத்து வடிவம் தந்த சிறுகதை அவர் சொன்ன அவரின் சிறுவயது அனுபவம்தான்.சின்ன வயதில் பாட்டி வீட்டில் அவரின் பிரியத்திற்குரிய பூனை ஒன்று ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகும் அவர் அங்குப் போனதும் ஓடி வந்து மடியில் ஏறி விளையாடும் சிறு நிகழ்வுதான் கதை.அவரே எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.என்றாலும் என் சிறுகதைகளில் மிகச் சிறப்பாக வடிவம் பெற்ற ஒருசில கதைகளில் இதுவும் ஒன்று.                                                   தன தனிமை துயரம்,தன கனவுகள்,நடைமுறை வாழ்கையில் தன முயற்சிகள்,இடையூறுகள் பற்றிக் கவலைப்படாமல் தன பாதையில் தளராமல் நடைபோடும் துணிவு என்று அவரின் பண்புகள் மிளிரும் வலைப் பக்கங்கள்.சில நிகழ்வுகள் நானும் உடனிருன்தவை என்றாலும் அவர் எழுத்தில் வாசிக்கும்போது மிகப் புதிய ஒரு காட்சி மனக்கண்ணில் எழுகிறது.ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீடு தன்னுள் ஒரு நடமாடும் உணர்வுக்களஞ்சியம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.அதன் தரிசனம் நம் கண்களில் படாமலே போகும் நிலை பல சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது.இயந்திர மயமான இன்றைய வாழ்கையில் அற்பக் கவலைகளால் மனதில் இருப்பதைக் கூடப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம்.எதிர்பாராமல் தொடர்ந்த பல நாட்கள் மழைக்குப் பின் திடீர் என்று ஒரு நாள் காலைச் சூரியனின் வருகையின் பரவசம் இன்று தெரிந்த உலகில் கிடைக்கிறது.அறிந்த பழைய உலகமே கூடப் புதிய வடிவமும் வண்ணமும் காட்டி நிற்கிறது.நாம் தவற விட்ட உன்னத நிமிடங்கள் குறித்த குற்ற உணர்வும் கூட நம்மை உறுத்துகிறது.ஒரு எளிய மன உலகம்வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்."பாடிநியாரின்"மன உலகம் அதுதான்.........................!

Thursday, March 18, 2010

படைப்புகளின் பின் உறைகிற வலிகள்

படைப்புகளின்  பின்  உறைகிற  வலிகள் பற்றிப் பேச முற்படும் பொது வாசகனின் மனநிலைகள் பலவிதமானவை.கண்காணாத இடங்களில் கரும்புத் தோட்டங்களில் உழைத்து வாடும் கூலிகள் பற்றிப் பாடுகிற பாரதி நம் முன்னோடி.தேயிலைத் தோட்டங்களில் பிழைப்புத் தேடித் போன மனிதர்களின் சோகங்கள் "எரியும் பனிக்காடு"நாவலில் ரத்தமும் சதையுமாய் இடம் பெற்றிருக்கின்றன.மொழிபெயர்த்த இரா.முருகவேளின் தமிழ்நடையில் முன் எப்போதோ கூலிகள் சிந்திய ரத்தவாடை அடிப்பதை படிக்கும் வாசகர் உணர முடியும்.பிஜித் தீவில் கூலிகள் ஆகப் பிழைக்கப் போன நம் தமிழ்ப்பெண்கள் சிந்தும் கண்ணீர் பாரதியை விம்மி விம்மி விம்மி விம்மி அழச் செய்தது.அந்தக் கவிதையின் தாக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் துயரப்படும் பெண்களின் காப்பாளர் ஆகத் தன்னைக் கற்பித்துக் கொள்ளும் சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி பற்றி மைதிலி சிவராமன் எழுத்து வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.                             ஆழி சூழ் உலகு நாவல் படிக்கும் ஒருவர் ஆழ்கடலில் கட்டுமரங்கலேறிச் சென்று மீன்கள் பிடிக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மீனவ மக்களின் துயரக் கடலில் மூழ்கிப் போவார்."அந்த தூரத்து மலைகளின் நடுவே யாரோ மெல்ல விசும்பி அழும் குரல் கேட்டு"'உங்கள் மனம் நடுங்கச் செய்வார் நா.பா.நோயால் துடிக்கும் கணவனின் பசிப்பிணியைத் தீர்க்கத் தன கற்பைப் பணயம் வைக்கும் மனைவி புதுமைப்பித்தனின் எழுதுகோலில் உயிரோவியமாய் எழுவாள்.                                                                                        "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம்,எம் குன்றும் உடையேம்;இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இல்லாமல்,எம் குன்றும் இல்லாமல் வாடி நிற்கிறோம்"என்று மனம் நோகும் பாரி மகளிரின் சோகம் நம்மணப் பரப்பில் கொண்டு வரும் வெண்ணிலா கண்ணீர் சிந்தி வருவதை அறிவது சிரமமாய் இருக்காது.இப்படிப் படைப்புகளின் பின்னால் உறைந்து கிடக்கிற வலிகள் எண்ணற்றவை.எழுதும் படைப்பாளிகளின் உயிரைத் தின்று வடிவம் கொள்கிரவை.           "என் உயிரைக்கொட்டி நான் இசைத்த பாடல் உனக்குக் கேட்காமல் போனது எப்படி?" என்று வியக்கிறது ஜூலிஸ் புசிக்கின் மனம்..........இந்த "நிலம் மறுகும் நாடோடிகளின்" துரப்பாடல்களை இசைக்கும் "கண் தெரியாத இசைஞ்ன்" யார் கண்ணிலும் படாமலே மறைந்து போவதை எப்படி எழுதுவது?...........................!

Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் துகள்கள்.... ஒரு குறும்படமும், நூலும்...

மார்ச் பன்னிரண்டாம் தேதி அன்று மைதிலி சிவராமன் தன பாட்டி எழுதிய டயரி  மற்றும் பல குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய "வாழ்க்கையின் துகள்கள்'என்ற புத்தக வெளியீடு நடை பெற்றது,அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உமா சக்கரவர்த்தி என்ற வரலாற்று ஆய்வாளர் எடுத்த ஒரு குறும்படமும் திரை இடப்பட்டது.சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி தன மன உணர்வுகளை ஒரு இரண்டு வருட காலம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தினமும் எழுதி வந்திருக்கிறார்.தன மகள் பங்கஜத்தை சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற அவரின் கனவு நனவாகவில்லை.ஏற்கனவே தன இரண்டு மகன்களைப் பரி கொடுத்த துயாம் தாங்காமல் அவர் வலிப்பு நோயாளி ஆக இருப்பவர்.அவரின் கணவர் கோபாலக்ருஷ்ணன் பிரிட்டிஷ் அரசின் சால்ட் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்தவர்.எனவே அவர் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத கடற்கரை ஓர ஊர்கள்.பெரிய வீடு.ஆனால் கணவர்,மனைவியும் மகளும் ஆக மூன்றே பேர்தான்.கணவர் வேலை நிமித்தம் நீண்ட தூரப் பயணங்களில் மாதக்கணக்கில் போய் விடும் நேரங்களில் சுப்பலக்ஷ்மி மகளுடன் தனிமையில் உசன்று கொண்டிருப்பார்.மகளின் படிப்புக்காக சென்னை வரும் அவர் எழுதிய குறிப்புகளின் ஊடே ஒரு துயரமிக்க பெண்ணின் கதை உருக்கொள்கிறது.வெண்ணிலாவின் பால் ஒளியில் மனம் பரி கொடுக்கிறார்.பறவைகளின் குரல்களில் ,செடிகொடிகளின் அழகில் இரவு வானின் மாயத் தோற்றங்களில் மனம் தொய்கிறார்.அவரின் ஒரே நண்பர் கிரேஸ் சாமுவேல் எழுதும் கடிதங்கள் மட்டுமே அவருக்கு ஆறுதல்.அப்போது நடந்த விடுதலைப் போராட்டங்களில்,சென்னைக் கடற்கரைக் கூட்டங்களில்,பாரதி கவிதைகளில் அவரின் ஈடுபாடு தன கூண்டில் இருந்து விடுபட்டு வெளியே வர அவராக உருவாகிய வெளியாக இருக்கிறது.அந்த வாழ்க்கையின் துகள்கள்தான் எத்தனை வீறு கொண்டவையை இருக்கின்றன?புத்தக வாசிப்பும் அவரின் மிகப் பெரிய வெளியாக இருந்திருக்கிறது.அன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகர் ஆக இருந்த,பிற்பாடு இந்தியாவின் நூலகத்தந்தையாக விளங்கிய எஸ்.ஆர்.ரங்கநாதன் சுப்பலக்ஷ்மியின் ஆர்வத்தை உணர்ந்து அவரை நூலக உறுப்பினர் ஆக அனுமதிக்கிறார்.இடைவிடாமல் படித்துக் கொண்டே இருந்த சுப்பலக்ஷ்மியின் வாசிப்புப் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கும்.ஆம்,பள்ளிக்கூடம் பக்கமே போக வைக்காத ஒரு பெண்ணின் வாசிப்பு அவ்வளவு ஆழமானது என்றால் யாரால் நம்ப முடியும்?ஆனால் அது உண்மை.அந்த வரலாற்றுப் புத்தகத்தை உடலுடனும் உயிருடனும் பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது குறும்படம்.யுரைந்து போக வாய்த்த நிகழ்வு...................!