Sunday, December 27, 2009

pirapancanin ulakam.............!

பிரபஞ்சன் உயிர்மை இதழில் எழுதிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ளன.சற்று நீண்ட தலைப்பு.குமுதம்இதழில் அவர்  பணியாற்றிய அனுபவங்களும்,வேறு பல விசயங்கள் பற்றிய அவரின் சிந்தனைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.புதுவை அனுபவங்களும் அவரின் முன்னோடிகளும் அவரின் பெற்றோர்களும் வாழ்ந்த விதம் பற்றியும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.அவரின் மொழிநடை மிக வசீகரமான ஒன்று.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.பற்றி இவ்வளவு காலமும் வேறு யாராவது இப்படி எழுதி இருப்பார்களா?சந்தேகம்தான்.இவரின் பார்வை வித்தியாசமானதாக இருக்கிறது.அப்பாவின்,தாத்தாவின் கள்ளுக்கடை வியாபாரம் பற்றி பிரபஞ்சன் எழுதி இருக்கும் விதம் தனித்தன்மையானது.பொதுவில் கள்ளுக்கடை பற்றிய சித்திரம் ஒருவிதமானதாக இருக்கும்.ஆனால்,இவர் தரும் ஓவியம் வேறுவிதம்.ரசிக்கவும்,மகிழவும் முடிகிற விதத்தில் இந்தப் பதிவுகள் உள்ளன.அவரின் தம்பியும்,தங்கையும் அம்மை நோய்க்குப் பலியான நிகழ்வு நெஞ்சை உலுக்கும் விதத்தில் பதிவாகி உள்ளது.கிணற்றடியில் அண்ணனும்,தம்பியும்,தங்கையும் மூவரும் விளையாடுவதாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன்,ஆனால் நான்காவதாக மரணமும் எங்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடியவில்லை;உணர முடிகிற வயது,அனுபவம் எதுவும் கிடையாது அப்போது என்கிறார் பிரபஞ்சன்.பானுவின் புத்தகப்பை ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது;ஆனால் அதைமாட்டிக்கொள்ள பானுதான் உயிருடன் இல்லை.என்ன ஒரு சோகம்.இவரின் அனைத்துக் கதைகளிலும் மூர்த்தி என்ற பெயர் மட்டுமே ஆண் கதாபாதிரங்களுக்குப் பெயராக வருவது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இந்தக் கட்டுரையை வாசிக்கும் வேளையில் கிடைத்தது.புதுவை பிரன்ச் ஆதிக்கத்தில் இருந்த சமயத்தில் வாழ்ந்த இரு பிரஞ்சுப் பெண்கள் பற்றிய கட்டுரையும் மிக வலிமையானது.படிக்கும் வேளையில் மனம் உலைந்து விடுகிறது.பிரபஞ்சனின் இசையார்வம்,வாசிப்பு விரிவும்,ஆழமும்,கூர்மை மிக்க பார்வை எல்லாம் நமக்குப் புலனாகின்றன.மேன்ஷன்களின் வாசனை,அதன் ஓசைகள்,அது நம் மீது திணிக்கிற கலவையான உணர்வுகளின் அழுத்தங்கள்....இப்படி ஒரு கட்டுரை.மென்மையான ஒரு நடையில் வாழ்வின் குரூரங்கள் பலவற்றையும் பதிவு செய்வது பிரபஞ்சனுக்கே உரிய ஒரு தனித்தன்மை.............!

Thursday, December 24, 2009

sila puthiya velikalum,oru naavalum....!

இன்று புதிய இடங்களையும், வெவ்வேறு விதமான வாழ்க்கை  முறைகளையும் பாடு  பொருள் ஆகக் கொண்ட நாவல்கள் பல புதிய எழுத்தாளர்களால் எழுதப்படுகின்றன.இதுவரை நாம் அறியாத மனிதர்களை, வாழ்க்கைகளை,நகரம் அல்லது கிராமப் பகுதிகளை,அங்கு வாழ்கிற அவர்களின் உணர்வுகளை,அவர்களின் கலாச்சாரங்களை இந்த நாவல்கள் பதிவு செய்கின்றன.இவ்வகையில் நான் போன வாரம் படித்த நாவல் கரன் கார்க்கி எழுதிய ஒரு நாவல். சென்னைநகரின் தென் பகுதி பற்றி ஏராளமான படைப்புகள் வந்துள்ளன.ஆனால் அதன் எதிர் துருவமாய் இருக்கும் பகுதி பற்றி ஓரிரு படைப்புகளே இருக்கின்றன.கரன் கார்கி இப்போது அந்தக் குறையைத் தீர்க்கத் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்திருக்கிறார்.சென்னை நகரின் ஒரு பகுதியில் கடும் சூழல்களில் வாழ்கிற உழைப்பாளி மக்களையும்,அவர்கள் நடுவே நிலவும் போட்டி பொறாமைகளையும்,குடி,விபச்சாரம்,சண்டை,துரோகம், நட்பு,இந்த மக்களின் பூர்வீக கிராமங்களில் நடைபெறும் மூதாதைகள் வாழ்க்கைகளையும் அங்கு நிலவும் சாதீயக் கொடுமைகளையும் இப்படி எண்ணற்ற விசயங்களை மையமாகக் கொண்டு ஒரு கனமான நாவலைத் தந்திருக்கிறார். சாராயம் விற்கிற குயிலம்மா,கோபால்.சங்கரன்,சின்னப்பொண்ணு, அஞ்சலை விஜயா,சுலோச்சனா,முனியன் என்று பல பாத்திரங்கள்.குடியின் கொடுமை பற்றி அந்தப் பழக்கத்தால் உயிரையே இழக்கும் முனியன்,கோபால் மூலம் பதிவு செய்கிறார்.குயிலம்மவுக்கும், கோபாலுக்கும் ஏற்ப்படுகிற நட்பு ஒரு புதிய வகைப் பதிவு.நாம் காண விரும்பாத சில பகுதிகளில் இப்படி மிக மென்மையான ஒரு பரிமாணம் மறைந்து கிடப்பதை நாவலின் பல இடங்களில் காண்கிறோம்.மழை வந்து கொட்டும் வேளைகளில் ஏழை மக்கள் படும் அவஸ்தையும்,குடிசைகளில் மழை செய்யும் கொடுமைகளையும் பற்றி நாவலின் முன்பகுதியில் மிக விரிவான ஒரு பதிவு இருக்கிறது.மரணங்கள்  தவிர்க்க முடியாதவை,முக்கியமானபல பாத்திரங்கள் நாவலில் மிகவும் கொடூரமான மரணங்களைச் சந்திக்கின்றன.சால்ட் க்வார்ட்டேர்ஸ்,வடசென்னைப் பகுதிகள் பலவற்றைப் பற்றி முதன்முறையாக நாம் இதில் படிக்க முடிகிறது.குற்றங்களும்,வெக்கையும்,சாராயமும்,கொலைகளும் மலிந்த பகுதியாகவே ஊடகங்களில் பதிவு செய்யப்படும் வடசென்னைப் பகுதியின் மானுட ஆன்மாவைப் படம் பிட்ட்டிதுக்க் காட்டும் ஒரு நல்ல படைப்பு.ஆசிரியர் இதில் தானே நேரடியாகப் பேசாமல் சொல்ல நினைப்பதை கதையின் மூலமே சொல்லி இருந்தால் மபக நல்ல கலைப் படைப்பாக இது வந்திருக்கும்.......!

Friday, December 11, 2009

bhaarathi pirantha naal...............!

இன்று மகாகவி பாரதி பிறந்த நாள்.தமிழ் மொழிக்குப் புது ரத் தம் பாய்ச்சிய சில பெரியோருள் பாரதி ஒரு சிகரம்.அவரின் பாடல்களை இன்று வானொலியும் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தி கொண்டிருந்தன.அமரத்துவம் வாய்ந்த கவிதை மலர்களைப் பூக்கச் செய்த குறிஞ்சி மலர்ச் செடி அவர்.வசன கவிதையும்,சிறுகதை வடிவ முயற்சிகளும்,கார்ட்டூன்களும் அவர் தமிழுக்கு அறிமுகம் செய்த புதிய வடிவங்களில் சில.                                எத்தனை விதமாய் யோசித்தாலும் அந்தக் கவி உள்ளம் முற்றிலும் புரிந்து கொள்ளக் கூடிய ஒன்றாக இல்லை.இன்றைய வாழ்க்கைச் சூழல்களை மனதில் கொண்டு அவரை ஏதாவது ஒரு முத்திரை குத்தி சிமிழுக்குள் அடைக்கப் பார்க்கிறவர்கள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறார்கள்.எதிலும் அடங்காமல் அந்தக் கவி உள்ளம் நிற்பதிலும்,நடப்பதிலும்,பறப்பதிலும் லயித்துக் கிடந்திருக்கிறது.காற்று சற்று வேகமாய் வீசினால் கூட காற்றே,மெதுவாய் வீசு என்று வேண்டிக் கொள்வதை வழக்கமாய்க் கொண்டிருக்கிறது.                                                                                                                                                  மனிதர்கள் எருமைகளைப் போல் ஈரத்தில் உழன்று கிடக்கிறார்கள் என்று நொந்து கொள்கிற உள்ளம் அந்த உள்ளம்.நமது கரங்களில், கண்களில் சொற்களில் சிந்தனைகளில்,எல்லாவற்றிலும் மின்னல் சொடுக்குக என்று வேண்டிய கவி மின்னல் அது.சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இறங்காத மனிதர்களைச் சாடும் சவுக்கு அது.படிக்கும் போதே மனப் பரப்பில் அமுத மழை போல் பொழியும் கவி மழை அது.நாடும் மொழியும் நமதிரு கண்கள் என்று உணர்த்திய வழிகாட்டி அவர்.இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் ஏற்படுத்தும்  சீர்மிகு சிந்தனைகளின் களஞ்சியம் அது.வேறென்ன சொல்ல?

Saturday, December 5, 2009

pirantha mannil oru naal..........!

இந்த வெள்ளிக்கழமை அன்று நான் திண்டுக்கல் போயிருந்தேன்.அங்குதான் நான் பிறந்து வளர்ந்தேன்;படித்தேன்;அங்கிருந்து வெளியேறி இப்போது சுமார் நாற்பது ஆண்டுகள் ஓடி விட்டன.இப்போது பார்க்கையில் ஊரே அடையாளம்  தெரியாமல் மாறி இருப்பதை உணர முடிந்தது.நெடுஞ்சாலைகள் பெரிய பாலங்களின் இணைப்பில் பிரமாண்டமாய் ஆகி  விட்டிருந்தன.அங்கு ஒரு நிகழ்வில் கிராம நூலகங்களின் பயன்பாடு பற்றி ஒரு வகுப்பு நடத்த வேண்டியிருந்தது.நன்றாக அமைந்தது.அதல்ல என் மனம் சொல்ல விரும்புவது.எனது மூத்த சகோதரர் ஆக நான் மதிக்கும் எழுத்தாளர்,நல்லாசிரியர் விருது பெற்று இப்போது பணி ஒய்வு பெற்றுள்ள அண்ணா திரு கமலவேலன் அவர்களைக் கண்டு பேச முடிந்ததும்,அவரும் நிகழ்வில் என்னோடு பண்கேற்றதும்தான்.அவரை நான் சந்தித்ததே ஒரு விந்தையான முறையில்தான்.அப்போது நான் பள்ளி மாணவன்."கண்ணன்"என்ற அக்கால சிறுவர் இதழில் கமலவேலன் எழுதிய ஒரு சிறுகதையைப் படித்தேன்.அதில் டிண்டுகல்லின் கடைவீதியும்,பழனி ரோடும் இன்னும் சில இடங்களும் இடம் பெற்று இருந்தன.அடடே,நம் ஊரில் இப்படி ஒரு எழுத்தாளர் இருக்கிறாரா என்ற வியப்புடன் அவரைப் பற்றி அந்த ஊர்ப் பத்திரிகை விற்பனைக் கடைகளில் எல்லாம் விசாரித்து ஒரு வழியாகக் கண்டு பிடித்தேன்.அவரை ஒருமழை   நாளில் பதிரிகைக்கடை எதிரில் சந்தித்தேன்.அன்று தொடங்கிய நட்புமஅன்பும் இன்றளவும் நீடித்து இருக்கிறது.நடுவே சில காலம் தொடர்பு அறுந்து இருப்பினும் ஏதாவது ஒரு வகையில் மீண்டும் தொடர்பு கிடைத்து விடுகிறது.அவர் ஏராளமான நூல்களின் ஆசிரியர்.அந்தக்கால பிரசண்ட விகடன்,ஆனந்தபோதினி,மற்று கல்கி,குமுதம் விகடன் உட்படப் பிரபல,சிற்றிதழ்கள் எல்லாவற்றிலும் எழதி இருப்பவர்.ஆனால்போதிய அளவு இன்னும் அறியப்படாமல் குடத்துள் இட்ட விளக்குப் போல் இருப்பவர்.அவர் தீபம் இதழில் எழுதிய "ஆற்றுச் சமவெளி நாகரிகம்"சிறுகதை மறக்க முடியாத சிறுகதைகளில் ஒன்று.சிறந்த நாடக் ஆசிரியரும் கூட.பல மேடை நாடகங்களை அவர் தன சொந்த முயற்சியில் அரங்கேற்றியவர்.குறிப்பாக பிரஞ்சு நாடக ஆசிரியர் மொழியர் எழுதிய "கஞ்சன்"நாடக அரங்கேற்றத்தின் போது சே.ராமானுஜம் வந்து பார்த்துப் பாராட்டினார்.அந்த நினைவுகளும் அவருடன் சேர்ந்து திண்டுக்கல் மலைக்கோட்டை மேல் ,மலை அடிவார வள்ளலார் கோவிலில்,அபிராமி ஆலயத்தில் இப்படிப் பல இடங்களில்  பேசிக் கொண்டே திரிந்த நாட்களின் நினைவுகளும் அலை மோதிக்கொண்டு இருந்தன.வாழ்க்கை நம் முன் நிறுத்துகிற மனிதர்களின் பெருமைகள் முழுவதையும் நாம் உணர்ந்து முடிப்பதற்குள் நமது வாழ்க்கை முடிந்து விடுமோ? யாரறிவார்!

Wednesday, December 2, 2009

ithu varaiyilaana pathivukal.............!

எனது சிந்தனைகளை இப்படி வலைப்பூவில் பதிவு செய்யத் தொடங்கி மூன்று மாதங்களுக்கு மேல் ஆகி விட்டன.நான் படித்த விசயங்களை,என் படைப்புகளில் இருந்து சில பதிவுகளை,என் கவனத்திற்கு வந்த நிகழ்வுகள் மீதான என் கருத்துக்களை,பிற படைப்பாளிகளின் புத்தகங்கள் பற்றி,இப்படி அவ்வப்போது தோன்றிய கருத்துக்களை நான் இங்கு பதிவு செய்து வருகிறேன்.அவற்றில் ஒரு நான்கு பதிவுகள் தமிளிஷ் மூலம் பிரபலமான இடுகைகள் ஆக தேர்வாகவும் செய்தன.எங்கெங்கோ இருந்து இப்பதிவுகளைப் படிக்கவும்,பாராட்டவும்,புறக்கணிக்கவும்,பார்த்து விட்டு எந்தப் பிரதிபலிப்பும் காட்டாமல் இருந்து விடவுமாக நாட்கள் ஓடுகின்றன.மற்ற ஊடகங்களை விட இங்கு உடனே எதிர்வினைகள் என்ன என்று தெரிந்து விடுகின்றன.                                                                         தூங்கும் நினைவுகள் என்ற நா.பா.வின் குறுநாவல் இப்போது என் மனப் பரப்பில் ஓடுகிறது. அவரின் எழுத்துக்களில் எனக்குப் பிடித்த சிலவற்றில் இதுவும் ஒன்று.ஒரு மலைகாடு சார்ந்த கிராமம் ஒன்றில் ஆசிரியர் பணி செய்யும் கதை சொல்லி,தன அடிமனதில்  மறைந்து கிடந்த சோகக்கதை ஒன்றை மலரும் நினைவுகளாகப் பகிர்ந்து கொள்கிறார்.நா.பாவுக்கே உரிய மேன்மை கொஞ்சும் தமிழில் இந்தக் குறுநாவல் எழுதப் பட்டிருக்கும்.நினைவுகளின் சுமையைப் போல் கனமான வேறொன்று கிடையாது.இதை படிக்கும் அனைவர் மனதிலும் அந்த சுமை பாறாங்கல் போல் இறங்கும்.நமது பதிவுகளின் சுமையை நாமே சுமக்க முடியாமல் திணறிப் போவோம்.............!