Thursday, February 10, 2011

சரஸ்வதி விஜயபாஸ்கரன் மறைந்தார்.....

வ. விஜயபாஸ்கரன் நேற்றிரவு காலமாகி விட்டார்.வெறும் விஜயபாஸ்கரன் என்றால் தமிழ் இலக்கிய உலகில் யோசிப்பார்கள்.சரஸ்வதி விஜயபாஸ்கரன் என்றால் சட்டென்று புரியும்.தமிழில் வெளி வந்த அற்புதமான ஒரு இடைநிலை இதழ் அது.ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி,ஜி.நாகராஜன் இப்படியான அன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்தவர் அவர்.மிக நல்ல சிறுகதைகளும்,கட்டுரைகளும்,கவிதைகளும் இடம் பெற்ற பத்திரிகை.ஆயிரக்கணக்கில்     அன்று விற்பனையான ஒரே இலக்கிய இதழ்  என்று கூடச் சொல்லலாம்.அன்று அவர் ஒன்றாக இருந்த பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.கட்சி அன்று இருந்த நிலையில் கலை இலக்கியப் படைப்புகளை எப்படி அணுகுவது என்பதில் அவ்வளவு தெளிவும் பக்குவமும் தலைவர்களில் பலருக்கு இருந்திருக்க வாயிப்புக் குறைவு.எனவே சரஸ்வதியில் வெளியான படைப்புகள் குறித்த புரிதல் இல்லாமல் அவர் கட்சி நிலைப்பாட்டுக்கு விரோதமான படைப்புகளை வெளியிடுவதாக ஒரு கருத்து பரவ ஆரம்பிதிருந்ததுஅதன் விளைவாக "தாமரை"இதழ் அன்றைய கட்சி தலைவர் ஜீவா அவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.சரஸ்வதி நின்று போனதற்கு கட்சிதான் காரணம் என்ற வருத்தம விஜயபாச்கரனுக்கு இருந்தது.இந்த வருத்தத்தை பொதுவுடைமைத் தத்துவத்தின் விரோதிகள் இன்றளவும் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஆனால் விஜயபாஸ்கரன் தொடர்ந்து கட்சியில்தான் இருந்தார்.சோர்வுடன் இருந்தார் என்று சொல்லலாம்."சரஸ்வதி காலம்"தொடரில் தீபத்தில் இந்த அனுபங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.சமீபத்தில் கலைஞன் பதிப்பகம் மூலம் "சரஸ்வதி களஞ்சியம்"என்ற தொகுப்பு நூலாக இரு பகுதிகளாக சரஸ்வதி இதழின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப் பட்டுள்ளன.சரஸ்வதி காலம் தொடரை எழுதியவர் வல்லிக்கண்ணன் அவர்கள்.அது நூலாகவும் வந்துள்ளது.ஆனால் இன்று விஜய பாஸ்கரனுக்கு இரங்கல் குறிப்பு எழுதியிருக்கும் ஜெயமோகன் அந்த நூலை விஜய பாஸ்கரனே எழுதினார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.வல்லிக்கண்ணன்,தி.கே சிவசங்கரன் என்ற பெயர்களின் மேல் ஜெயமோகன் மற்றும் அவரின் நண்பர்கள் வட்டத்திற்கு இருக்கும் அசூயையும்,வெறுப்பும் எள்ளலும் இலக்கிய உலகம் நன்கு அறிந்தவை.அந்த விவகாரம் பற்றித் தனியே எழுத வேண்டுமே தவிர இன்றைய சந்தர்ப்பம் அதற்குஏற்றதல்ல.எது எப்படி இருந்தாலும் ஒரு பொதுவுடைமை வாதிதான் இன்று இவர்கள் கொண்டாடும் சுந்தர ராமசாமியின்,ஜி.நாகராஜனின் படைப்புகளை நல்ல முறையில் முறையில் அன்றைக்கே இனம் கண்டு வெளியிட்டவர் என்பதையாவது மறக்காமல் இருந்தால் சரிதான்.........விஜயபாச்கரனுக்கு நம் அஞ்சலி! 

Tuesday, February 8, 2011

படைப்பு நெறிகள்....பின்பற்ற வேண்டாமா?

படைப்புத் தொழில் மட்டும் இன்றி எந்த ஒரு பணிக்கும் சில நெறிகள் உண்டு.ஆனால் படைப்பாளிகளிடம் இந்த நெறிகளை எல்லோரும் எதிர்பார்ப்பார்கள்.காரணம் உலகின் நெறிகெட்ட செயல்களை எல்லாம் சாடுகிரவர்கள் படைப்பாளிகள் என்பதுதான்.இன்று வாசிக்க நேர்ந்த ஒரு கட்டுரை,ஒரே ஒரு எழுத்துக் கூட மற்றம் இன்றி ஒரே நேரத்தில் இரண்டு இதழ்களில் வந்துள்ளது.எழுதியவர் ஒன்றும் சாதாரணமான ஊர் பெயர் தெரியாத எழுத்தாளரும் அல்ல.இன்று சமகாலத் தில் எழுத்தாளர்கள் நன்கு அறிந்த ஒருவர்.ந.முருகேச பாண்டியன் தமிழ்க் கவிதைத் தொகுப்புகள் பற்றி எழுதிய கட்டுரை அது.உயிர் எழுத்து பத்திரிகையிலும் புதிய புத்தகம் பேசுது வெளியிட்டுள்ள தமிழ் தொகுப்பு நூல் வரலாறு சிறப்பு மலரிலும் ஜனவரி இதழ்களில் அந்தக் கட்டுரை ஒரே சமயத்தில் வெளி வந்துள்ளது.இது எப்படி நேர்ந்திருக்கும்?ஒரு இதழுக்கு அனுப்பிய கட்டுரை வெளி வருகிறதா இல்லையா என்று காத்திருந்து பார்க்கும் பொறுமை இல்லை என்றால் முதலில் அனுப்பிய இதழுக்கு ஒரு கடிதம் மூலம் தெரிவித்து விட்டு வேறு இதழுக்கு அதே கட்டுரையை அனுப்பலாம்.அது எழுதியவரின் உரிமை.ஆனால் இப்படி இரண்டிலும் ஒரே கட்டுரை ஒரே நேரத்தில் வெளிவரும் வகையில் முருகேச பாண்டியன் செயல் அமைந்து இருப்பது வருத்தம் தரும்விதத்தில் இருக்கிறது.                                                            இது எந்த வகையில் படைப்பு நெறி சார்ந்த செயல் என்று எழுதியவர்தான் சொல்ல வேண்டும்.....!

Sunday, February 6, 2011

அன்பின் பகிர்தல்கள்........

பாண்டிச்சேரி போகும் வாய்ப்பு எதிர்பாராமல் கிடைத்தது.முனைவர் பரசுராமன் எழுதிய நான்கு புத்தகங்களை அறிமுகம் செய்து பேச வேண்டும் என்று தோழர் எஸ்.ராமச்சந்திரன் கேட்டுக் கொண்டார்.நிகழ்வு நன்றாக அமைந்தது.அது ஒரு புறம்.பாண்டி எப்போதுமே என்னைக் கவர்ந்த ஒர் ஊர்.கிழக்குக் கடற்கரைச் சாலை முழுவதுமே இயற்கையின் எழில் கொஞ்சும்.போக்குவரத்து நெரிசல்.விடுதிகள்,ஹோட்டல்கள்,வாகனங்கள்..இந்த இடையூறுகள் ஒரு புறம்.ஆனால் இதையெல்லாம் தாண்டி புதுவை சென்று விட்டால் அது ஒரு மகிழ்வூட்டும் அனுபவம்தான்.பாரதி,பாரதிதாசன்,அரவிந்தர்,வ.ரா.,வ.வே சு.அய்யர் இப்படி எண்ணற்ற சிந்தனையாளர்களும்,விடுதலைப் போராட்ட வீரர்களும் கவிஞ்ர்களும்,வாழ்ந்த மண் அது.அங்கு நேற்று இரவு தங்கிய சமயம் நண்பரின் வாழ்க்கை பற்றி அறிய நேர்ந்தது.ஒரு சிக்கல்,அதில் இருந்து மீண்டு வர அவர் நடத்திய போராட்டம்,குடும்பத்தினரின் மன உளைச்சல்,தோழர்களின் ஆதரவு,இப்போது மீண்டு வந்த பின் சற்று அமைதியான நிலை,அடுத்தது என்ன என்ற கேள்வி..இப்படி நேரம் போவது தெரியாமல் பேசினோம்.ஒவ்வொரு மனிதரிடத்தும் ஒரு நல்ல நாவல் இருக்கிறது என்று சொல்வார்கள்.தஞ்சை மாவட்ட வாழ்வின் ஒரு பகுதி தி.ஜானகிராமன் நாவல்களில் பதிவு ஆகி இருக்கிறது.ஆனால் நண்பர் விவரித்த வாழ்க்கை முற்றிலும் வேறு விதமான உலகம்.அதை எழுதுங்கள் என்று சொன்ன சமயம் அவரும் அது பற்றி யோசித்தார்.செய்வார் என்று எதிர்பார்க்கலாம்.அன்பு நிறைந்த வாழ்க்கை இந்த சோதனைகளை எதிர் கொண்டு வெல்லும் என்று மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது........!