Saturday, May 21, 2011

பாப் மார்லேயும் தமிழ் வாசகப் பரப்பும்...!

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை பாரதி புத்தகாலயம் போயிருந்தேன்.பாப் மர்லின் வரலாறு ரவிக்குமாரால் எழுதப்பட்டு உயிர்மை பதிப்பகத்தால் வெளியிடப் பட்டிருக்கிறது.அதை அன்று இரவில் முழுமையாகப் படிக்கும் வேளையில் பெரும் வியப்பு ஆட கொண்டது.சமைக்க என்பது கரிபியன் கடற்பபரப்பில் உள்ள ஒரு சிறிய நாடு.அங்கு ஒரு சிறு கிராமத்தில் பிறந்து முப்பத்தி ஆறு வயதுக்குள் இசைத்துறையில் மாபெரும் ஆளுமையாக உருவெடுத்தவர் பாப் மார்லி.ஆப்பிரிக்க பழங்குடிப் பெண்ணுக்கும் வெள்ளை இனக் கேப்டன் ஒருவருக்கும் பிறந்த அவர் தந்தையால் கைவிடப் படுகிறார்.சேரிப் பகுதி ஒன்றில் வசித்து பல விதமான வேலைகள் செய்து தீராத் தாகத்துடன் இசை மேதை ஆகிறார்.அமெரிக்காவுக்கும் லண்டன் நகருக்கும் சென்று விடா முயற்சி மேற்கொண்டு இசைத் தொகுப்புகள் வெளியிடுகிறார்.புகழின்  உச்சத்தில் இருக்கும் வேளையில் புற்று நோயால் மரணம் அடைகிறார். மூன்றாம் உலகமே பெரியது என்பதும்,உலகில் உள்ள எல்லோரும் சுதந்திரம் அடையாமல் எந்தமனிதரும் சுதந்திரமாக இருக்க முடியாது என்பது அவர் தரும் செய்தி.சிலருக்கு நம்பிக்கையும்,கனவும்...சிலருக்கு மட்டும் வாய்ப்பும்,வழியும் என்பது போன்ற மிகக் கருத்தாழமிக்க பாடல்கள்,காதல் பாடல்கள்,கறுப்பர் இன விடுதலை சார்ந்த அரசியல் பாடல்கள் என்று பல ரகமான பாடல்களை எழுதி இசையமைத்துப் பாடுகிறார்.செல்லும் இடம் எல்லாம் பெருங்கூட்டம்.அவருக்குக் கிடைக்கும் புகழை தங்கள் அரசியல் லாபங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அந்த நாட்டின் அரசியல்வாதிகள் ,அமெரிக்க சி.ஐ.ஏ.இவர்களின் சூழ்ச்சியால் பாப் சுடப் படுகிறார்.அதில் தப்பி விட்டாலும் வெகு விரைவில் புற்று நோய் அவரின் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைத்து விடுகிறது.இந்த வரலாறு மிகவும் புனைவுத் தன்மையுடன் இந்த நூலில் எழுதப் பட்டு இருக்கிறது.உயிர்மை இதழில் சாஜி அவர்களால் எழுதப்பட்ட கட்டுரை ஒன்றும் இந்த நூலின் முன்னுரை ஆக இடம் பெற்றுள்ளது.தமிழில் இசைப்பாடல்கள் குறிப்பாக திரைஇசைப் பாடல்கள் பற்றி சாஜியின் கட்டுரைகள் இரு தொகுப்புகள் ஆக வந்துள்ளன.நேற்று எம்.எம்.டி.ஏ.த.மு.எ.க.ச.கிளை சார்பில் பாப் மார்லி ஒரு இசைபோராளி நூல் அறிமுகக் கூட்டம் நடந்தது.அஜயன் பாலா,சாஜி பேசினார்கள்.நான் தலைமை.வாசகர்கள்,தமிழில் இந்த மாதரியான ஆளுமைகள் பற்றி அறிந்து கொள்ள வாய்ப்புகள் குறைவு.இந்த நிலையில் இது போன்ற புத்தகங்கள் பெரும் பங்களிப்பு ஆகும்.சாஜியிடம் கூட்டம் முடிந்த பிறகு இதைக்கூறினேன்.  

Tuesday, May 10, 2011

vaasakan oruvan pesukiren

வாசகன் ஒருவன் பேசுகிறேன்,,,,,,,,,,இப்படி ஒரு குரல் என்னில் ஒலிக்கும் பொது அந்தக் குரல் எழுப்பும் நினைவு அலைகள் ஏராளம்.நல்ல படைப்புகளைப் படிக்கும் ஒவ்வொரு தருணமும் பொன்னானது.இன்று எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "வாசகபருவம்"படித்த சமயம் இந்தக் குரல் பெரும் முழக்கம் போல ஒலித்தது.பல முன்னோடி எழுத்தாளர்கள் பற்றிய தன வாசக அனுபவத்தைக் கலை நுணுக்கமும் படைப்பாளியின் ஆளுமையும் கலந்த ஒரு நடையில் எஸ்ரா எழுதி இருக்கிறார்,வைக்கம் முகம்மது பஷீர் கி.ராஜநாராயணன்,ப.சிங்காரம்,எ.கே.ராமானுஜன்,சி.சு.செல்லப்பா,அசோகமித்திரன்,பிரபஞ்சன்,கோணங்கி,வண்ண நிலவன்,இப்படி பெரும் ஆளுமைகள் பற்றி தனக்கே உரிய பாணியில் எஸ்ரா எழுதியிருக்கிறார்.படைப்பு மனநிலை என்பது மிக ஆழமானது.சக மனிதர்கள் படும் அவஸ்தைகள் ஒரு நுண்ணிய மனதில் உண்டாக்கும் தாக்கம் மிக வலியது.இந்தப் பதிவுகள் அந்தத் தாக்கம் முழுவதையும் நம் மனதில் எளிதில் கடத்திபோல் கொண்டு வந்து நிரப்புகின்றன..வலி மிகுந்த தருணங்கள் ஒவ்வொரு படைப்பாளிக்கும் ஒவ்வொரு விதமான உத்வேகத்தைத் தருகின்றன.மீரா பற்றி அவர் எழுதி இருக்கும் பதிவு என் சொந்த அனுபவத்தில் பதிந்துள்ள மீரா நினைவுகள் போன்றே விரிந்து செல்கின்றன.என் முதல் தொகுப்பை "பார்வைகள் மாறும்"என்ற தலைப்பில் மீராதான் வெளியிட்டார்.அதன் அட்டைப்படத் தேர்வு கோணங்கியினுடையது.திருவண்ணாமலையில் கலை இரவின் பொது நிகழ்வில் வெளியிடப்பட்டது.மீரா தான் சுமந்து வந்த கட்டைப் பிரித்து முதல் பிரதியைத் தந்த அந்த நிமிடம் எந்த எழுத்தால் பதிவு செய்யப் படக் கூடும்?என்றும் மறையாத அந்த நிகழ்வும் அது போன்ற பல சமயங்களில் சிவகங்கையிலும் சேலம்,சென்னை உள்பட பல இடங்களிலும் மீராவுடன் பேசித் திரிந்த பொழுதுகளும் இன்று முழுக்க அலை புரண்டன.எஸ்ராவின் எழுத்து குறித்து இன்று மீளவும் பிரமிக்க நேர்ந்த தருணம் மலரின் விகசிப்புப் போன்று என் மனமெங்கும் வியாபித்திருக்கிறது.................!