Friday, April 4, 2014

தி. க .சியின் மறைவும் தமிழ் இலக்கிய உலகமும்

தி. க .சியின்  மறைவும் தமிழ் இலக்கிய உலகமும் பற்றி யோசிக்கையில் பெரும் துக்கம் வந்து மனதில் நிரம்பி விடுகிறது.தி. க. சி. அவர்கள் மறைந்த செய்தி கேட்டதுமே உடனே இறுதி அஞ்சலி செலுத்தப் போவது என்ற முடிவை எடுத்து விட்டேன்.பஸ்ஸில் கிளம்பி மதுரை போனதும் அருண்மணி சாரின் யோசனைப்படி அங்கு பையைப் போட்டு விட்டு திருநெல்வேலி போய்ச் சேர்ந்தேன்.அந்த நகரம் பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகி இருந்ததை உணர முடிந்தது.சுடலை மாடன் தெருவில் நுழைந்தபோது கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் கசிந்தது.தி. க.சியின் உடலுக்கு மாலை அணிவித்து விட்டு வண்ணதாசனின் கையைப் பற்றிக் கொண்டு மௌனமாயிருந்தேன்.வேறு என்ன செய்ய?அவரும் மிகத் தளர்ந்து போயிருந்தது நன்கு புலப்பட்டது.கமலவேலன்,நெல்லை.சு.முத்து ,ச.தமிழ்ச்செல்வன்,சு.வெங்கடேசன்,சிகரம் செந்தில்நாதன்,பிரின்ஸ் கஜேந்திர பாபு ,எஸ்.ஏ.பெருமாள்,இளையபாரதி,தோப்பில் முகம்மது மீரான்,ஜனநேசன்,என்று பல எழுத்தாளர்கள் வந்து அஞ்சலி செலுத்தி விட்டு தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டிருந்தனர்.மூத்த தலைவர்கள் பழ.நெடுமாறனும்,நல்லகண்ணுவும் வந்து இறுதி ஊர்வலம் தொடங்கும் வரை காத்திருந்தனர்.மிக எளிய விதத்தில் அந்த ஊர்வலம் தொடங்கியது.அவரின் பயணம் முடிந்ததைக் குறிக்கும் ஒரு பயணம் தொடங்கியது ஒரு துயர முரண்.தி.க.சி.ஒரு பாரம்பரியத்தின் இறுதிக் கட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்  தியவரோ என்றுதான் தோன்றுகிறது.அவர் முன்னெடுத்த ஒரு அணுகுமுறையை இன்றைய நவீன  எழுத்து முறைக்காரர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.கேலிக்குரிய ஒன்றாக அவர் போஸ்ட் கார்டு பயன்படுத்துவதைக் கிண்டல் செய்த மாபெரும் இலக்கிய எழுத்து வேந்தர்கள்இங்கு அதிகம்.தன்னையும் தனது எழுத்து முயசிகளையும் தவிர வேறு எந்த எழுத்தாளரின் படைப்புகளையும் படிக்கக் கூட நேரம் இல்லாதவர்கள் இவர்கள்.இவர்களால் வேறு ஒரே ஒரு ஆளைக் கூட உத்வேகப்படுத்த முடியாது. மாறாக இடுப்பொடித்து எழுத விடாமல் முடமாக்கதான் முடியும்.ஆனால் தி.க.சியின் போஸ்ட் கார்டுகள் என்னையும் கமலவேலனையும் போல எண்ணற்ற பலரை உத்வேகப் படுத்தியவை.வண்ண நிலவன் கல்கியில் எழுதிய கட்டுரையை அவர்கள் மாச்சரியம் இல்லாமல் திறந்த மனதுடன் படித்தால் போதும்.அவர்களின் மனச் சான்றின் குரலுக்கு செவி சாய்த்தால் போதும். ஆனால்?