Monday, January 31, 2011

மாற்று வெளியும் மானுடமும்........

பழகிய தடம் பயணம் செய்ய ஏற்றது.அதில் ஆபத்து மிகக் குறைவு.பிரச்னைகளும் கம்மி.ஆனால் மாற்று வெளியில் பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் ஏதேனும் ஒரு தடை வந்து கொண்டே இருக்கும்.யாரும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.புரிந்து கொள்ள முயல் பவர்களும் முழுமையாகப் புரிந்து கொண்டு அனுசரணையாக இருப்பார்கள் என்று சொல்ல முடியாது.இந்தப் பிரச்னைகள் எல்லாம் இருந்த போதும் மாற்று வழியில் பயணம் செய்ய எப்போது சிலர் முயன்று கொண்டேதான் இருக்கிறார்கள்.அவர்கள்தான் இந்த உலகில் புதியது புனைகிரவர்கள்.அந்தப் புதிய புனைவுகள்தான் இந்த உலகின் எல்லா முன்னேற்றங்களுக்கும் காரணம்.இன்று இலக்கிய வெளியில் மாற்று வெளி என்ற ஆய்வு இதழின் மூலம் வெளி வரும் படைப்புகளும் அப்படி புதிய சிந்தனைகளை நம் முன் வைக்கின்றன.இதுவரை வந்துள்ள ஆறு இதழ்களும் அவ்வாறே ஒவ்வொரு இதழிலும் ஒரு குறிப்பிட்ட பொருண்மை சார்ந்து ஆய்வுக் கட்டுரைகளை முன் வைக்கின்றன.கால்டுவெல் குறித்த கட்டுரைகள்;பொருளாதாரம்,கல்வி, ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்,நாவல்படைப்புகள் குறித்த பதிவுகள்,மாற்றுப் பாலியல் .....இப்படி ஆறு பொருண்மைகள்.தமிழில் வந்துள்ள இவை வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டியவை. 

Thursday, January 27, 2011

ஆண்டன் சேகாவும் நூற்றி ஐம்பது ஆண்டுகளும்...

ரஷியாவின் மூலம் உலகம் பெற்ற நன்மைகள் என்ன என்ன என்று பார்த்தல் அவசியம்.குறிப்பாக இலக்கியம் என்ற வகைப்பாட்டில் அந்த நாட்டின் பங்களிப்பு என்பது மிகப் பெரும் அளவுக்கு மதிப்பிட வேண்டிய ஒன்று.ஆண்டன் செகாவ் என்ற ரஷ்ய இலக்கியப் படைப்பாளியின் நூற்றி ஐம்பதாவது ஆண்டு பிறந்த தினம் ஜனவரி ௨௯ அன்று வருகிறது.அந்த தினம் கொண்டாடப் பட வேண்டிய ஒரு நாள்.அது தொடர்பாக சென்னை கூட்டாஞ்சோறு அரங்கு,த.மு.எ.ச.வும் சேர்ந்து நடத்திய நிகழ்வில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அன்று பேசிய பேச்சு மிக அற்புதமான ஒன்று.ஒன்றரை மணி நேரம் அவர் பேசியதை குறிப்பு எடுத்து எழுத்து வடிவம் கொடுத்துப்பார்த்த வேளையில் அது பதினோரு பக்கக் கட்டுரையாக வந்தது.ராமகிருஷ்ணன் நண்பர்கள் அந்தப் பதிவை வலைத்தளம் ஒன்றில் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டார்கள்.கொடுத்தேன்.ஆண்டன் செகாவ் எழுதிய ஆறாம் வார்ட் நாவலையும் பொதுவாக சோவியத் இலக்கியங்களையும் பற்றி நானும் அன்று பேசினேன் என்றாலும் நிகழ்வின் சிகரமாக எஸ்.ரா.வின் பேச்சு அமைந்தது.செகாவின் பச்சோந்தி,அவரின் துயர மயமான வாழ்க்கை,ஆனால் அவருக்கு வாய்த்த அபாரமான நகைச்சுவை உணர்ச்சி,அவரை வதைத காச நோய்,அவர் எழுதிய இருநூட்றுஆறு சிறுகதைகள்,அவர் பார்த்த மருத்துவத் தொழில் மூலம் அவர் செய்த சேவை,டோல்ஸ்டோயும்,அவரும் ஆற்றிய சமூகப் பணிகள்,இறுதி வரை "மூணு ரூபிள்"டாக்டர் ஆகவே அவர் ஏழை மக்களுக்கு ஆற்றிய பணிகள் பற்றியெல்லாம் எஸ்.ரா.விவரித்த விதத்தில் அவையோர் கட்டுண்டு கிடந்தார்கள்.வாசிப்பு ஒரு சுகம் என்றால் வாசித்த உன்னதப் படைப்புகளைப் பற்றி அவற்றின் நயங்கள் ததும்ப எடுத்துச் சொல்லவும் அதைக் கேட்டு இன்புறவும் வைப்பது இன்னொரு சுகம்."மனிதர்களின் துயரங்கள் மொழிகடந்தவை.அவற்றைப் பற்றி எழுதியவர்கள் உன்னதப் படைப்பாளிகள்.ஆண்டன்செகவ் அப்படி ஒரு படைப்பாளி"என்று எஸ்.ரா.முடித்தவிதம் அற்புதம்...........!

Tuesday, January 18, 2011

வாசித்தாலும் தீராத வாழ்க்கை...!

 'கதையோ கவிதையோ எதுவுமே சமூகத்தின் விலைபொருள் என்ற வகையில்,வெறும் கூடு அல்ல.அதற்குள் ஒரு உயிர் ஒளிந்து கிடக்கிறது.அதை,அதன் உயிர்த் துடிப்பை வெளியே கொண்டு வருவதில்தான் கலைஞனின் கிரியேட்டிவிட்டி இருக்கிறது..." என்று சொல்கிறார் நாஞ்சில் நாடன்.எழுதுகிறவர்கள் சக மக்களின் வாழ்க்கையைப் படித்தால் போதும்,படைப்பு தானே வசமாகும் என்பதுவும் அவரின் அனுபவ உரைதான்.கடந்த முப்பத்தைந்து ஆண்டுக் கால எழுத்து மற்றும் வாசிப்பு அனுபவத்தில் இந்தக் கூற்று எவ்வளவு உண்மை என்பதை நானும் உணர்கிறேன்.ஆரம்பப் பள்ளிக்கூட நாட்களிலேயே வாசிப்பு என்பது எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டு விட்டது.ஆசிரியர்கள்,அண்டை வீட்டார்,பிற்பாடு கமலவேலன் போன்ற மூத்த எழுத்தாளர்கள் எனப் பலரும் இந்த வாசிப்புச் சுகத்தை எனக்கு உணர்த்தியவர்கள்.ஆரம்ப நாட்களில் தினமணி நாளிதழை என் அப்பாவே தினமும் டீக்கடையில் வாங்கிப் போடுவதன் மூலம் அந்த நாளிதழில் வரும் செய்திகளை மட்டும் இன்றி ஏ.என்.சிவராமன் எழுதும் கட்டுரைகள்,தினமணி சுடர்  வார இணைப்பில் பல்வேறு எழுத்தாளர்கள் எழுதும் கதைகள்,கவிதைகள்,தொடர் கட்டுரைகள் என்று ஏராளமான விசயங்களை வாசிக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தந்தார்.வாசிப்பில் இருந்து நான் எழுதுவது என்ற அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்கு கமலவேலன்,அவினாசி முருகேசன் போன்ற எழுத்தாளர்கள் உதவினார்கள்.உயர்நிலைப் பள்ளி நாட்களிலேயே தீபம் மஞ்சரி கலைமகள் செந்தமிழ் என்று பலரகமான இலக்கிய இதழ்களைப் படிக்கும் வாய்ப்பை பள்ளி நூலகமே ஏற்படுத்தித் தந்தது.கண்ணன் இதழும் அன்று என் போன்ற இளம் மாணவர்களைப் படிக்கவும்,எழுதவும் தூண்டிய பத்திரிகை.அன்று மத்தாப்பு இதழையும்,கிண்டல்,வீரசுதந்திரம் போன்ற இதழ்களையும் நடத்தியவரான 'விசிட்டர்'ஆனந்த் எனது முதல் சிறுகதையை எழுபதாம் ஆண்டு மே மாதம் மத்தாப்பில் வெளியிட்டார்.பின் அரும்பு,கண்ணன்,மின்னல்கொடி,தினமணி கதிர்,தீபம்,வான்மதி,கோமகள்,மாலை முரசு,தினமலர்,கணையாழி,கல்கி,என்று பல்வேறு இதழ்களிலும் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது.பின் செம்மலரும் சிகரமும் என் எழுத்துப் பயணத்தின் படிக்கட்டுகள்.வாழ்க்கையின் சுவடுகளையும்,புத்தகங்களின் பக்கங்களையும் ஒன்றுக்கொன்று இணையாகவே வாசித்துக் கொண்டே நான் வளர்ந்தேன்....வளர்வேன்.!

Saturday, January 15, 2011

படைப்பும் பயணமும்

மனித வாழ்க்கையில் ஒரு புதிய உயிர் ஜனிப்பது என்பது எத்தனை அற்புதமான விஷயம் என்பது அருகில் இருந்து பார்க்கும் போதுதான் தெரிகிறது.கருவில் இருந்து வெளியில் வரும் வரை அந்த உயிரைச் சுமக்கும் தாயின் வேதனை என்ன,அது எப்படி ஒரு சுமையாய் அந்தப் பெண்ணின் உடலில் பத்து மாதங்கள் வரை தங்கி இருந்து பிரசவம் ஆகும்வரை படுத்தி எடுக்கிறது என்பதெல்லாம் கற்பனைக்கு எட்டாத விஷயங்கள்.மானுடப் படைப்பின் இந்த அதிசயம்,வாழ்க்கை பயணத்தில் ஒரு காவியத் தன்மை வாய்ந்த ஒன்றுதான்.பயணம் தொடரும்...........!

Saturday, January 1, 2011

நாஞ்சில் நாடனின் படைப்புலகம்

இந்தப் பதிவுகளில் நாஞ்சில் நாடனின் நேர்காணல் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன்.திரு.பாஸ்கர் என்ற நண்பர் அந்த நேர்காணல் முழுவதையும் பகிர்ந்து கொள்ள முடியுமா என்று கேட்டிருந்தார்.அந்த நேர்காணல் செம்மலர் இதழுக்காக எடுக்கப்பட்டது என்பதால் பொங்கல் மலர் வெளிவரும் முன்பாக அதை இங்கு பதிவு செய்யலாமா என்று தெரியவில்லை.எனினும் பொதுவாக நாஞ்சில் நாடன் படைப்புலகம் சார்ந்து சிலவற்றைப் பதிவு செய்யத் தோன்றுகிறது.    கடந்த முப்பத்தி எட்டு ஆண்டுகளாக எழுதி வரும் காத்திரமான படைப்பாளி அவர்.நாஞ்சில் நாட்டு வாழ்க்கை தான் அவரின் படைப்புலகின் பெரும்பாலான படைப்புகளின் பாடு பொருள்.எனினும் அவர் மும்பையில் வாழ்ந்த அனுபவங்கள் சார்ந்து "மிதவை"நாவல்,சில சிறுகதைகள் வந்துள்ளன.அவரின் முதல் சிறுகதை,"பிரசாதம்" தீபம் இதழில் வந்தது.நாஞ்சில் நாடன் ஒரு முறை வட இந்தியாவில் பயணம் செய்து கொண்டிருக்கும் பொது,அவர் தான் சாப்பிடுவர்க்காக வாங்கிய பார்சலைப் பிரித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் வேளையில் வழியில் நின்ற ரயில் நிலையத்தில் ஏறிய ஒரு முதியவர் ,"காமி காணார்" என்று உடல் நடுங்கப் பதட்டத்துடன் சொன்னாராம்.அவருக்குப் பசி என்று முகத்தில் இருந்தே தெரிந்து கொண்ட நாடன்,தன பார்சலில் இருந்த ரொட்டிகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.பல நாட்கள் அந்தப் பெரியவரின் பதட்டமும்,பசியும்,ஆனால் "எனக்குப் பசிக்கிறது,கொஞ்சம் ரொட்டி கொடு"என்று யாசிக்கவோ,கெஞ்சவோ இல்லை என்ற ஆச்சரியமும் நாஞ்சில் நாடனின் மனதில் ஊறிக் கொண்டே இருந்திருக்கிறது."நாம் உண்போம்"என்பதுதான் அந்தப் பெரியவரின் "காமி காணார்" என்ற வார்த்தைகளின் பொருள் என்று அறிந்த இவர்,அந்தப் பெரியவருடைய நிலை என்ன,அவருக்கு குடும்பம் என்று ஒன்று இருக்குமா,இருந்தால் அவரின் மகன் அல்லது மகள் யாரும் அவரைக் கவனிக்கவில்லையா,அவர் அவ்வளவு பதத்ததுடன் அந்த ரயிலில் தனியே ஏன் வர வேண்டும் என்று பல விதமாக யோசித்துக் கொண்டே இருந்ததின் விளைவு "விரதம்"சிறுகதை.இப்படி அவரின் ஒவ்வொரு படைப்புமே நாம் அன்றாடம் காண்கிற வாழ்க்கையின் படப்பிடிப்புகல்தாம்.                                                                          கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக எழுதிக் கொண்டிருந்தும் தான் தடம் பதித்து விட்டவரா,இல்லை,தடம் தொலைத்து விட்டவரா என்று புரிபடுவது இல்லை என்கிறார் இவர்.நமக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை.தடம் ஒன்றை அழுத்தமாகப்பதித்தவர்   நாஞ்சில் நாடன் என்பதில்."என் தீவட்டி எப்போதும் என் மனதில்;கரங்களில் அல்ல.அது எரிக்கும்,வெளிச்சம் பாய்ச்சும்,என்னை அற்றுக் கருகிப் புகைந்தும் போகும்"                     என்பது இவரின் சுய மதிப்பீடு.                                                                "எழுத்து என்பது எனக்குத் தவம் அல்ல;வேள்வி அல்ல;பிரசவ வேதனை அல்ல;ஆத்மா சோதனையோ சத்திய சோதனையோ அல்ல;பணம் சம்பாதிக்கும் முயற்சி அல்ல;பெரும் புகழும் தேடும் மார்க்கம் அல்ல;வாழ்க்கையைப் புரிந்து கொள்ளும் முயற்சி;என் சுயத்தைத் தேடும் முயற்சி" என்று கூறும் நாஞ்சில் நாடனுக்கு இலக்கியத்தில் நவீன உத்திகளின் மீது பெரிய அளவுக்கு நம்பிக்கை இல்லை.என் படைப்புக்கு அது அவசியம் என்றால் அது தானாகவே என்னிடம் வந்து சேரும் என்கிறார்.வாழ்க்கையைப் படித்தால் போதும் என்பது இவரின் பாதை.ஐந்து நாவல்கள்,எட்டு சிறுகதை தொகுப்புகள்,இரு கவிதைத் தொகுப்புகள்,மூன்று கட்டுரைத் தொகுப்புகள்,என்று இவரின் படைப்புக்களத்தில் விளைச்சல் கணிசமான அளவுக்கு நிறைந்து இருக்கிறது.ஆனாலும் இன்னும் இவருக்கு இவரது நாஞ்சில் நாட்டு மக்களின் வாழ்க்கை பற்றி சொல்லுவதற்கு ஏராளம் உண்டு.இவர் ஆனந்த விகடனில் எழுதிய "தீதும் நன்றும்" கட்டுரைகள் இவரின் சமூகப் பொறுப்புணர்ச்சியின் தீவிர வெளிப்பாடுகள்.குறிப்பாக பெண்கள் படிக்கும் பள்ளிகள்;கல்லூரிகள்,வேலை செய்யும் அலுவலகங்கள்,பயணிக்கும் பேருந்துகள் இவற்றில் எதிர் கொள்ளும் பிரச்னைகள்,கழிவறை இல்லாமல் அவர்கள் படும் அவஸ்தைகள் பற்றியெல்லாம் மிகத் தீவிர அக்கறையுடன் எழுதியது மாநிலம் முழுக்க பெரும் எதிர்வினைகளை எழுப்பியது.இந்தக் கட்டுரைகளைத் தொடர்ந்து வாசித்தவர்களுக்குத் தெரியும்,நாஞ்சில் நாடனின் பார்வை எவ்வளவு கூர்மையானது என்பது.இசையில் இவரின் ஆர்வம் வெளிப்படையாகத் தெரியாவிட்டாலும் உணவு வகைகள் சார்ந்து இவருக்கு இருக்கும் ஆழ்ந்த அறிவும் அனுபவமும் இவரின் எல்லாப் படைப்புகளிலும் மிகத் துலக்கமாகத் தெரிவதை படிப்பவர்கள் உணர முடியும்.                                      இவருக்கு சாகித்ய அகாடமியின் விருது கிடைத்தது எவ்வளவு பொருத்தம் என்று வாசகர்கள் மகிழ்கிறார்கள். ஆனால் நாஞ்சில் நாடனுக்கு இந்த அங்கீகாரம் மிகவும் காலம் கடந்து கிடைத்ததே என்ற வலி மிக ஆழமாக இருக்கிறது.அந்த வழியை வெளிப்படுத்துவதில் இவருக்குத் தயக்கம் சிறிதும் இல்லை என்பது இவரின் மற்றுமொரு தனித்தன்மை.வாசிக்க வாசிக்க சுவை தரும் ராக ஆலாபனை ப்ன்றவை இவரின் படைப்புகள்...................!