Thursday, August 30, 2018

நீண்ட இடைவெளிக்குப்பின்...   
இந்தப்பகுதியில் என் சிந்தனைகளைப் பதிவு செய்து எவ்வளவோ நாட்கள் ஓடிவிட்டன. கடந்த ஆறு நாட்களாகப் பிரயாணங்களில் இருந்தேன். எழுத்தாள நண்பர் உதயசங்கரின் மகள் உ.நவீனா திருமணம் கோவில் பட்டி நகரில் ஆகஸ்ட் இருபத்தைந்து அன்று நடந்தது. நான் முந்தைய நாளன்றே அங்கு போய்த் தங்கினேன். கோணங்கி, கவிப்பித்தன் ஆகியோருடனும், நாடகக்கலைஞர் முருகபூபதியுடனும் அன்று நீண்டநேரம் உரையாட முடிந்தது. திருமண நாளன்று ஏராளமான எழுத்தாளர்கள், கலைஞர்கள் அங்கு வந்திருந்தனர். வண்ணதாசன், தேவதச்சன், ச.தமிழ்ச்செல்வன்,  ஆதவன் தீட்சண்யா ,  ஷாஜகான் , சு.வெங்கடேசன், நாறும்பூநாதன், கலாப்பிரியா, போப்பு, அப்பணசாமி, சாரதி , வாத்தியார் க்ரிஷி, மாரீஸ் ... இந்தப்பட்டியல் வெகு நீளம். திருமண நிகழ்ச்சிகளை மிக வித்தியாசமான முறையில் உதயசங்கர் திட்டமிட்டிருந்தார். மாப்பிள்ளை கண்ணன் ஒரு புகைப்படக்கலைஞர். அவர் எடுத்திருந்த இருபத்தைந்து புகைப்படங்களையும், நவீனா வரைந்த அதே எண்ணிக்கையிலான  ஒவியங்களையும் தேர்ந்தெடுத்து ஒரு கண்காட்சியாக அமைத்திருந்தனர். நூல்வனம் மணிகண்டனின் புதிய புத்தகங்களின் காட்சியும் விற்பனையும் இருந்தது. கரிசல்குயில் கிருஷ்ணசாமியின் அமுதகானம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் பின் தலைவர்களின் உரைகள் என்று நிகழ்வு முழுவதுமே கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தாய் அமைந்தன. புகைப்படங்களிலும், ஓவியங்களிலும் நெடுநேரம் சிந்தையைப் பறிகொடுத்துப் பார்த்துக்கொண்டிருந்தேன். கரிசலின் புதிய பாடல்கள் நெஞ்சை நிறைத்தன. அவரே எழுதி இசையமைத்த ஒரு பாடல் அற்புதம் ஆனால், விருந்தினர்கள் ஒருவரோடு ஒருவர் உரையாடல்கள் நிகழ்த்திக் கொண்டிருந்ததால் பாடல்களின் ஆழம் ,இசையின் இனிமை இவற்றை முற்றுமுழுதாக அனுபவித்து உள்வாங்க முடியாமற்போனது. வாசல் ரத்தினவிஜயன்  திருமணம் முடிந்தபின், இரவு பன்னிரண்டு மணிக்கு கோவில்பட்டி ரயில்நிலையத்தில் காத்திருந்து என்னை வழியனுப்பியது நெகிழ்வாக இருந்தது. அங்கிருந்து பொள்ளாச்சி பயணம். . அம்மா, அக்கா உள்ளிட்ட உறவினர்கள் அனைவரையும் விஜயன் திருமண நிகழ்வில் சந்திக்க முடிந்தது. பொள்ளாச்சியில் பரம்பிக்குளம் ஆழியார் கால்வாய்களில் எல்லாம் சமீபத்திய மழைநீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்த காட்சி மகிழ்ச்சியளித்தது. விபத்துக்குப்பின், சற்றே சிரமங்களுடன் வெற்றிகரமாகப் பயணங்களை முடித்துக்கொண்டு நேற்று அதிகாலை ஐந்து மணியளவில் பெங்களுரு திரும்பினேன்.  

Wednesday, January 31, 2018

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இங்கு நான் ஒரு பதிவிட்டிருக்கிறேன்,அதன் பிறகு இன்றுதான் மீண்டும் எழுதுகிறேன்.கடந்த பதினான்காம் நாளன்று மோசமான  ஒரு சாலை விபத்தில் வலது கால் எலும்பு முறிவுகளை அடைய நேர்ந்தது.இரண்டு அறுவைசிகிச்சைகளையடுத்து படுக்கையிலேயே கழிகிறது காலம். முடிந்தவரை படுத்துக்கொண்டே வாசிப்பது,யூடியூபில் எஸ்.ராமகிருஷ்ணன்,ஜெயமோகன் போன்றோரின் சொற்பொழிவுகளைக் கேட்பது என நாட்கள் நகர்கின்றன.
          இந்த நாட்களில் நான் வாசித்த ஒரு முக்கியமான புத்தகம், இஸ்மத் சுக்தாயின் " வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை " என்பது. உருது இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற, சர்ச்சைக்குரிய ஓர்  எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் பல கதைகள் பெரும் எதிர்ப்பையும்,வழ்க்கு களையும் சம்பாதித்திருக்கின்றன, அவரின் சொந்த வாழ்க்கை எப்படிப்பட்ட ஒரு போராட்டமாயிருந்து வந்திருக்கிறது என்று இப்புத்தகம் முலம் அறிய முடிகிறது.சதத் ஹசன் மாண்டோவைப் போலவே ஐவரும் கடைசிவரை உருது இலக்கியக் கலகக்காரியாகவே இருந்திருக்கிறார் என்பதை அறிய முடிந்தது.     

Monday, September 4, 2017

எழுதிக்கொண்டிருக்கும் காலம்

இந்தப்பகுதியில் நான் என் சிந்தனைகளைப் பகிர்ந்துகொண்டு எவ்வளவோ காலம் ஆகிவிட்டது.2015--ஆம் ஆண்டில் இரண்டுமுறை பதிவு செய்ததற்குப்பின் இன்றுதான் மீண்டும் பகிர முனைந்துள்ளேன்.இதற்குப் பல காரணங்கள்.பணிகள், குடும்பத்தில் இடமாற்றம் போன்று எத்தனையோ.மீண்டும் இந்தப்பகுதியில் எழுதுவது என இன்று தோன்றியது.
         இந்த இடைக்காலத்தில் நான் மொழி பெயர்த்த இரண்டு முக்கியமான புத்தகங்கள் கடந்த ஜனவரியில் புத்தகக் கண்காட்சியின்போது வெளியாகின. ஒன்று ரொமிலா தாபரின் "சோமநாதர்-வரலாற்றின் பல குரல்கள்" என்ற நூல்.இரண்டாவது அமெரிக்காவில் ஜான் ஹாப்ஹின்ஸ் பல்கலையில் மானுடவியல் பேராசிரியராகப் பணியாற்றும் முனைவர் ஆனந்த்பாண்டியன் எழுதிய 'திரையகம் ' என்ற புத்தகம்.இரண்டுமே தலா  ஐநூறுக்கு மேற்பட்ட   பக்கங்கள் கொண்டவை. இவைதவிர 2016-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் "தட்டுப்படாத காலடிகள்' என்ற சிறுகதைத்தொகுதியும் வெளியானது.இது மலேசியத்தலைநகரான கோலாலம்பூரில் வெளியிடப்பட்டது.கலைஞன் பதிப்பகத்தின் அறுபது ஆண்டு விழாவை ஒட்டி அங்கு நான் உட்பட அறுபது எழுத்தாளர்கள் சென்றிருந்தோம்.எழுத்தாளர் உதயசங்கரின் 'தூரம் அதிக  மில்லை" என்ற தொகுப்பு உட்பட அறுபது புத்தகங்கள் அங்கு வெளியாகின.
           இந்த மாதம் முதல்தேதியன்று என் "அமைதிக்கு ஒரு சிற்றேடு" என்ற மொழிபெயர்ப்பு நூல்வெளியாகிஉள்ளது.பாரதி புத்தகாலயம் இதை மிக நல்ல முறையில் வெளியிட்டுள்ளது.இதை மொழிபெயர்த்து ஏழு,எட்டு ஆண்டுகள் ஆகியிருப்பினும் இப்போதுதான் பாரதியில் இது நூல்வடிவம் பெற முடிந்துள்ளது.அந்தப் புத்தகம் மதுரை புத்தகக் கண்காட்சியில் பாரதி புத்தகாலயம் வெளியிட்ட ஐம்பது புதிய புத்தகங்களுள் ஒன்று.
       எழுதுகிறேன்;காலமும் எழுதிக்கொண்டிருக்கிறது...!    

Sunday, March 1, 2015

இலக்கியம் என்ன செய்யும்

இலக்கியத்தின் பயன் என்ன என்பது குறித்து எப்போதும் ஏராளமான கருத்துகள் காலம் காலமாக இலக்கிய வாதிகளாலும் விமர்சகர்களாலும் கூறப் பட்டு வருகின்றன.முதல் நாவல் ஆசிரியர் மாயவரம் முன்சீப் வேதநாயகரின் கருத்துப்படி "சுவையும்,பயனும் அளிப்பது எதுவோ அதுதான் இலக்கியம் ".ஆனால் இன்று நவீன இலக்கியவாதிகள் இக்கருத்தில் பெரும்பாலும் உடன்படுவதில்லை.எழுத்து இந்த சமூகத்தின் எந்த அம்சத்தையும் எந்த விதத்திலும் மாற்றியமைக்கப் போவதில்லை என்பது அவர்கள் கருத்து.இலக்கியம் நேரடியாக எந்த மாற்றத்தையும் கொண்டு வரச் சக்தியற்றதாக இருக்கலாம்.ஆனால்,சமூக மாற்றம் வேண்டிப் போராடும் போராளிகளுக்கு உத்வேகம் அளிப்பது,உந்து சக்தியாக இருப்பது இலக்கியமே.உலகெங்கிலும் பெரும் புரட்சியாளர்கள் தங்கள் பணிகளுக்கு உத்வேகம் அளித்த சக்திகளில் முதல் இடத்தைப் புத்தகங்களுக்கு குறிப்பாக மாபெரும் இலக்கியப் படைப்புகளுக்கே அளித்து வந்திருப்பதை நாம் பார்க்க முடியு.ம் .அங்கிள் டாம் இன் காபின் என்ற நாவல் அமெரிக்க கறுப்பின அடிமைகளின் விடுதலைக்கு வித்திட்டது.கார்க்கியின் "தாய்"நாவல் சோவியத் ரஷ்யாவின் புரட்சியில் ஆற்றிய பங்கு உலகறிந்த ஒன்று.வால்டேரும் ரூச்சோவும் பிரெஞ்சுப் புரட்சியின் பெரு நெருப்பில் எண்ணெய் வார்த்த இலக்கியவாதிகள்.இப்படி உலகம் முழுவதும் இலக்கியம் ஆற்றிய பங்கு குறித்த எடுதுக்காட்டுகளைப் பார்க்க முடியும்.பார்க்க வேண்டும்.   

Wednesday, February 4, 2015

புதிய ஆண்டு....புதிய காலங்கள்..

புதிய ஆண்டில்,இன்றுதான் எனது முதல் பதிவை இடுவதற்கு முனைகிறேன்.இன்றைய சூழல் புதிய நம்பிக்கைகளைத் தருவதாக ஒரு
 புறம் தோற்றம் தருகிறது.மறுபுறம் மத அடிப்படை வாதிகள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக பல தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டிருக்கின்றனர்.அரசின் எல்லையற்ற அதிகார பலமும்,மக்களின் மத உணர்வுகளும்,கார்ப்பொரேட் ஊடகங்களின் ஆரவாரமிக்க பிரசாரங்களும் இந்த நாட்டின் நீண்ட காலப் பாரம்பரியம் ஒன்றை அழித்துக் கொண்டிருக்கின்றன."யாதும்  ஊரே யாவரும் கேளிர்" என்ற நல்லிணக்க உணர்வுதான் இந்த மண்ணின் சுயம்.சாதி,மதம்,இனம் இப்படியான வேற்றுமைகளின் தீ பரவிக் கொண்டிருக்கிறது.பொதுவாக எழுத்தாளர்களும்,கலைஞர்களும் இப்படியான நிலைமைகளை எதிர்த்து வலுமிக்க குரலை எழுப்புவதுதான் வழக்கம். ஆனால்,அபூர்வமாக பெருமாள் முருகன் விசயத்தில் விதிவிலக்காக ஒன்றுபட்டு நின்ற எழுத்தாளர்கள், தொடர்ந்து அப்படி இருப்பார்களா என்ற கேள்வி எழுகிறது.கலையும்,இலக்கியமும் மனிதர்களை ஒன்றுபடுத்தி மேன்மையுறச் செய்ய வேண்டும்.ஆனால், துரதிர்ஷ்டவசமாக பிளவுபடுத்தி பகைமை வளர்க்க உதவுவதாக ஆகி வருவது அதிகம் ஆகி வருகிற காலம் இது.என்ன செய்யப் போகிறோம்?கேள்வி எழுகிறது.பதில்?       

Sunday, December 28, 2014

மாதொரு பாகன் நாவலும் பண்பாட்டுக் காவலர்களும்

பெருமாள் முருகன் எழுதிய ஒரு நாவல்,"மாதொரு பாகன்" என்பது.அந்த நாவல் வந்து நான்கு வருடங்கள் ஓடி விட்டன.இப்போது அந்த நாவல் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு காலச் சுவடு வெளியீடாக வந்திருக்கிறது.அதில் ஈரோடு மாவட்டம் திருச்செங்கோடு ஊரில் உள்ள இறைவன் மாதேஸ்வரனை இழிவு படுத்தியும்,குறிப்பிட்ட ஒரு சாதியினரின் பண்பாடு குறித்து தவறான சித்தரிப்புகளைச் செய்தும் பெருமாள் முருகன் எழுதி இருப்பதாக ஹிந்துத்வா அமைப்புகள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றன.நூலின் ஆசிரியர்,  பதிப்பாளர் கண்ணன் இருவரையும் கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் இப்போது குரல் எழுப்பி இருக்கிறார்கள்.இவ்வளவு நாட்கள் கழித்து இந்தப் பிரச்னை முன்னுக்கு வந்திருப்பது மிக ஆச்சரியம் அளிக்கிறது.திட்டமிட்டு இப்படி கலைஞ்ர்களையும் ஓவியர்களையும்,படைப்பாளிகளையும் ஹிந்துத்வ அமைப்புகள் குறி வைத்துத் தாக்குவது சமீப நாட்களில் அதிகரித்துக் கொண்டே போகிறது.இன்று காலை புதிய தலைமுறை தொலைக்காட்சியில் ச.தமிழ்ச்செல்வனும் அர்ஜுன் சம்பத்தும் இந்தப் பிரச்னை குறித்து விவாதித்தார்கள்.நூலை படித்தீர்களா என்று தமிழ் கேட்ட போது  படிக்கவில்லை என்கிறார் அர்ஜுன் சம்பத்.ஒரு புத்தகத்தைப் படிக்காமல் அது தடை செய்யப்பட வேண்டிய நாவல் என்று சொல்லுகிற இவர்களை என்னவென்று சொல்லுவது? இப்படியான அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ்ப் படைப்புலகம் ஒன்று திரள வேண்டும்,ஓங்கிக் குரல் எழுப்ப வேண்டும்.பெரும் புகழ் பெற்ற படைப்பாளிகள் இந்த விஷயம் பற்றி  எதிர்வினை ஆற்றப் போகிறார்கள்?   

Thursday, December 18, 2014

தீபம் நா.பார்த்தசாரதி பிறந்த நாள்

அமரர் தீபம் நா.பா. அவர்கள் பிறந்த நாள் இன்று.அவர் இருந்த போது ஒவ்வொரு ஆண்டும் அவருக்குப் பிறந்த நாள் வாழ்த்து அனுப்புவது என் நீண்ட கால வழக்கம்.அவரும் உடனே பதில் எழுதுவார்.அந்த மணி மணியான கைஎழுத்துகள் கண்களில் ஒற்றிக் கொள்ளலாம் போன்று அவ்வளவு அழகாயிருக்கும்.இன்று தமிழ் இந்து நாளிதழில் அவரைப் பற்றிய விரிவான கட்டுரை வந்திருந்தது எனக்கு வியப்பாய் இருந்தது.நா.பா.வின் தீபம் இதழ் பல எழுத்தாளர்களைப் புகழ் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது.பலர் தீபம் மூலம்தான் தமிழ் எழுத்துலகில் ஒரு நிலையான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.ஆனால் நா.பா.மறைந்த சில வருடங்களுக்குள்  அவரின் நினைவு கூட அவர்களுக்கு இல்லை என்று தோன்றுகிறது.இதுதான் உலகம்.அது ஒரு புறம் கிடக்கட்டும்.
                     நா. பா.என்றொரு படைப்பாளியின் நாவல்களில் இருந்துதான் எனக்கு ஒரு இலட்சிய வாழ்க்கை பற்றிய கனவுகள் கிளைத்தன .குறிஞ்சி மலரின் அரவிந்தன்,பொன்விலங்கின் சத்யமூர்த்தி,மலைச்சிகரத்தின் நவீனன் என்று ஒவ்வொரு நாவலின் நாயகனும் நான்தான் என்ற மனப் பதிவில் திரிந்த காலம் அது.தீபம் இதழை ஒவ்வொரு மாதமும் காத்திருந்து வாங்குவது,வரி விடாமல் படிப்பது,படிதததுமது பற்றி கடிதம் எழுதுவது என்று தான் எனது அலுவல் அட்டவணை இருக்கும்.வாசகர் கடிதப் பகுதியில் அனேகமாக ஒவ்வொரு இதழிலும் எனது கடிதத்தின் சில வரிகள் பிரசுரம் ஆகியிருக்கும்.அதைப் படித்துப் பரவசம் அடைந்த காலம் அதுஇன்று அவர் இல்லை.தீபமும் இல்லை."அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்"என்ற பாரி மகளிர் சோகம் பற்றிய கபிலர் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.அவர் எழுதிய "நானூறில் நல்ல காட்சிகள்' என்ற நூலில் புற நானூற்றுப் பாடல்கள் சிலவற்றை எளிய விளக்கங்களுடன் தந்திருப்பார்.ஒவ்வொன்றும் ஒரு சிறுகதையின் புனைவுத் தன்மையுடன் இருக்கும்.அதில் ஒரு கட்டுரையின் தலைப்பு,"முல்லையும் பூத்தியோ ' என்பது.புலவர் ஒருவரின் நண்பரின் நினைவு அலை மோதும் உள்ளத்துடன்  அவர் என் நண்பன் இல்லாத இந்தச் சமயத்தில் நீ ஏன் பூக்கிறாய் எதற்காகப் பூக்கிறாய் என்று புலம்பும் காட்சியை நா.பா. சோகம் ததும்ப சித்தரித்திருப்பார்.இப்போது நா.பா.இல்லை.ஆனால் அவரின் எழுத்துகள்  சாகா வரம் பெற்றவையாய் நெஞ்சில் நிலைத்திருக்கின்றன...............தீபத்தின் சுடர் அது.என்றும் அணையாச்சுடர் அது!