Friday, December 31, 2010

நாஞ்சில் நாடனுடன் சில மணி நேரங்கள்

இந்த ஆண்டின் சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் நாஞ்சில் நாடன் தமிழின் ஆகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர்.அவரின் நேர்காணலை செம்மலர் இதழுக்காக நான் எடுக்க வேண்டி வந்தது.ச.தமிழ்ச்செல்வன் சொன்னதின் அடிப்படையில் இந்த நேர்காணலை நண்பர் மணி கோவையில் நாஞ்சினாடனின் வீட்டில் ஏற்பாடு செய்திருந்தார்.டிசம்பர் இருபத்தியாறாம் நாள்இதற்காக கோவை போனேன்.அன்று பல வேலைகள் இங்கு இருந்த போதும் நாஞ்சில் நாடன் என்ற ஆளுமை என்னை ஈர்த்தது.தீபம் இதழில் வந்த அவரின் முதல் சிறுகதையில் இருந்து நான் அவரின் படைப்புகளை வாசித்து வருகிறவன்.மாமிசப் படைப்பு என்ற அவரின் நாவல் தீபத்தில் தொடராக வந்தது.தலை கீழ் விகிதங்கள் என்ற நாவலில் அவர் அடைந்த வெற்றி மிகப் பெரியது.அன்றும் இன்றும் ஒரே சீராக எழுதிக் கொண்டிருக்கும் ஒருசிலரில் இவரும்  ஒருவர்.தீதும் நன்றும் என்ற கட்டுரைத் தொடரின் மூலம் தமிழ்ச் சமூகத்தின் மனசாட்சியை தட்டி எழுப்பும் வகையில் சமகாலப் பிரச்னைகள் பற்றி இவர் எழுதியது பலரின் கவனதயை ஈர்த்து செயல்ரீதியான பல எதிர்வினைகளை ஏற்ப்படுத்தியது.குறிப்பாக பெண் மாணவிகள் பயிலும் பள்ளியில் கழிப்பறை வசதிகள் எவ்வளவு மோசமான வகையில் இருக்கின்றன என்று இவர் பதிவு செய்தது தமிழ்நாடு முழுக்க எதிரொலிகளை உண்டாக்கியது.தான் வாழும் காலத்தின் மனசாட்சியை உலுக்கும் வகையில் எழுதுவது சிலரால்தான் முடிகிறது.அந்த வகையில் நாஞ்சில் நாடன் ஒரு மாபெரும் படைப்பாளி.செம்மலர் பொங்கல் மலரில் அவரின் நேர்காணல் வந்த பிறகு என்ன விதமான எதிர்வினைகள் வருகின்றன என்று பார்க்க வேண்டியுள்ளது.                     இன்று நீண்ட இடைவெளிக்குப் பிறகு இங்கு என் சிந்தனைகளைப் பதிவு செய்ய அமர்ந்த வேளையில் இந்த வருடம் முழுக்கவே பதினாறு பதிவுகள் மட்டுமே என்பது சட்று ஆயாசமாக இருக்கிறது.இன்று வருடத்தின் கடைசி நாள்.நாளை புத்தாண்டு பிறக்கிறது.வரு ஆண்டில் செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன.பார்ப்போம்..............!

Tuesday, November 23, 2010

கனவுகளின் காலம்..........

ஆகஸ்ட் மாதம் இந்தப் பதிவுப் பகுதியில் எனது டெல்லிப் பயணம் பற்றி எழுதிய பின் இன்றுதான் மீண்டும் எழுத முடிந்தது.வேலைகள் ஒரு புறம்,இந்தப் பதிவுகளின் பயன்பாடு பற்றிய கேள்விகள்  குடைந்து கொண்டே இருந்தது இன்னொரு புறம். இளம் பிராயத்தில் என்னை எழுதத் தூண்டிய ஒரு எழுத்தாளர் கமலவேலன் அவர்கள் திண்டுக்கல் காரர்.அவருக்கு இந்த ஆண்டில் முதன் முறையாக நிறுவப் பட்ட சாகித்ய அகாடமியின் குழந்தை இலக்கிய விருது வழங்கப் பட்டு உள்ளது.அவர் எழுதிய "அந்தோணியின் ஆட்டுக்குட்டி"என்ற புத்தகம் அப்பரிசைப் பெற்று உள்ளது.இந்த நவம்பர் பதினான்காம் தேதி டெல்லியில் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.அவரின் நீண்ட எழுத்துலக வாழ்க்கையில் என் பரிச்சயமும் ஒரு சிறு பகுதியில் இடம் பெற்று இருக்கிறது.தீபம்,பிரசண்ட விகடன்,ஆனந்தபோதினி,அமுதசுரபி,கண்ணன்,கல்கி,கோகுலம்,குமுதம்,குங்குமம் இப்படி எண்ணற்ற பத்திரிகைகளில் அவர் கடந்த ஐம்பது ஆண்டுக்காலமாக எழுதி வருகிறார்.கண்ணன் இதழில் அவர் எழுதிய கதைகளைப் படித்துத்தான் அவர் நம்ம ஊர்க்காரர் போல இருக்கே என்று அறிந்து அவரைத் தேடி நான் அறிமுகம் செய்து கொண்டேன்.அதன்பிறகுதான் என் கதைகளைப் பிரசுரம் செய்ய வேண்டும் என்ற ஆவல் என் மனதில் சுடர்விட்டு எரிந்தது.அவர் தீபத்தில் எழுதிய "ஆற்றுச் சமவெளி நாகரிகம்"கதை தமிழ்க் கதைகளில் குறிப்பிடத்தக்க கதைகளில் ஒன்று.அவர் ஒரு நல்லாசிரியர்.நாடகங்களை எழுதி இயக்குவதில் அவருக்கு அடங்கா ஆர்வம்.மொழியர் எழுதிய கஞ்சன் நாடகத்தை அவர் திண்டுகளில் அரங்கேற்றினார்.தஞ்சை நாடகப் பேராசிரியர் சே.ராமானுஜம் அன்று தலைமை வகித்தார் என்று நினைவு.இத்தனை ஆண்டுகள் களைத்து அண்ணா கமலவேலன் அவர்களுக்கு இந்த அங்கீகாரம் கிடைத்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சிதான்...இது கனவுகள் நனவாகும் காலம்!

Wednesday, August 25, 2010

தலைநகரில் சில தினங்கள்..........!

இந்த மாதம் பதினேழாம் தேதி டெல்லி செல்ல நேர்ந்தது.இருபதாம் தேதி அங்கு அலுவலக முறையிலான கூட்டம் ஒன்று இருந்தது.அதை முடித்த பின் திரும்பும் தேதி இருபத்தி இரண்டு என்று அமைந்தது.டிக்கெட் கிடைப்பதில் ஏற்பட்ட நன்மை அல்லது தீமை என்று சொல்லலாம்.நன்மை---அங்கு ஓரிரண்டு தினங்கள் இருக்க முடிந்தது.தீமை?அதைப் பிறகு பார்ப்போம்.இதற்கு முன்பும் நான்கு முறை டெல்லி போய் இருக்கிறேன்.ஒவ்வொரு முறையும் அந்த நகரம் எனக்கு வியப்பையும்,மகிழ்ச்சியையும்,துயரத்தையும்,ஆர்வத்தையும் இன்ன பிற உணர்வுகளையும் தருவது ஆகவே இருந்து வருகிறது.நேரில் டெல்லி அறிமுகம் ஆவதற்கு மிகவும் முன்னதாகவே அந்த நகரின் சில பதிவுகளை ஆதவனின் "காகித மலர்கள்",இந்திரா பார்த்தசாரதியின் "தந்திர பூமி","சுதந்திர பூமி"போன்ற நாவல்கள் வாயிலாக அறிந்து வைத்திருந்தேன்.ஆனால் நேரில் பார்ப்பது,அறிவது என்பது முற்றிலும் வேறு.யமுனை என்னும் நதியின் அழகும்'தாஜ்மகாலின் சௌந்தர்யமும்,செங்கோட்டையின் கம்பீரமும்'ஆக்ரா கோட்டையின் துயரம் பொதிந்த மௌனமும்,லோதி கார்தேனின் பசுமைதொய்ந்த உயிர்த் தாவரங்களும் பார்லிமென்ட், ராஷ்ட்ரபதி பவன் போன்ற பிரம்மாண்டங்களின் அச்சுறுத்தும அதிகாரத் தொனியும் எல்லாமும் ஒரு சாதாரண மனிதனின் மனதில்  தாழ்வு மனப்பான்மையையும், இழப்புணர்வையும்,ஏக்கத்தையுமே  தரக் கூடியவை.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்நடத்துவதற்கான ஏற்பாடுகள் என்ற பெயரில் அங்கு நடைபெறும் பணிகளும்,அவட்ருக்கானசெலவுகளும் பற்றிய அவலக் கதைகளை ஊடகம்களின் வாயிலாக தினமும் படித்துக் கொண்டிருக்கிறோம்.நேரில் பார்கையில் அதன் அவலம் நெஞ்சை பிளந்தது.நவீன,புதிய தாராளமயம்,உலகமயம்,தனியார்மயம் என்ற தாரக மந்திரங்களின் அக்டோபஸ் பிடியில் இன்று நம்மை ஆளுகிறவர்கள் இருக்கிறார்கள்.ஆகவே,நாமும்!                யமுனை நதியைப் பற்றிய என் கற்பனைகள் முதல் முறை டெல்லி போனசமயம் சுக்கு நூறாகி இருந்தன.அந்த நதியின் ஒரு ஓரம் சாக்கடை ஒன்று ஓடுவதுதான் அன்று நான் கண்ட யமுனை.ஆனால் இந்த ஒரு வாரமும் ஏன்,அதற்கு முன்பிருந்தே பெய்து கொண்டிருக்கும் வரலாறு காணாத மழையின் விளைவாக அங்கு இப்போது அதன் இரு கரைகளும் கொள்ளாமல்,அபாய அளவையும் தாண்டி வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.அங்கு மட்டும் இன்றி வரும் வழிஎல்லாம் அணைத்து மாநிலங்களிலும் மழை கொட்டித் தீர்த்துக் கொண்டே இருக்கிறது.அறுவடைக்குத் தயாராக இருந்த பயிர்கள் இப்போது நீரில் மூழ்கி கிடக்கின்றன.பெய்தும் கெடுக்கும்,காய்ந்தும் கெடுக்கும் என்று மக்கள் நோகிற சொலவடை எவ்வளவு உண்மை?                          எண்ணங்களின் வெள்ளமும் அதே அளவுக்குப் பிரவாகம் எடுத்துப் பெருகித்தான் பாய்ந்தது.ஆனால் அவற்றை அப்படியே எழுத்தில் கொண்டு வரத்தான் முடியவில்லை...................!

Wednesday, August 11, 2010

kaatru varum paruvam

"காற்று  வரும் பருவம்" என்ற நாவலைச் சமீபத்தில் படித்தேன்.பாரதி பாலன் எழுதியது.இந்த மண்ணில் வீசும் காற்றில் கூடச் சாதீயம் தன விசக்கிருமிகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கிறது.இதன் கொடுமைகள் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமாக எழுதிக் கொண்டேதான் இருக்கிறார்கள்.தந்தை பெரியாரும்,அண்ணல் அம்பேத்கரும் இன்னுமிவர்கள் போன்ற பலரும் எவ்வளவோ காலம் இந்தக் கொடுமைக்கு எதிரான பல போராட்டங்களை நடத்தி வந்திருக்கின்றனர்.ஆனாலும் இதன் விஷம் பரவிக் கொண்டேதான் இருக்கிறது.அதன் oru parimaanathai இந்த naaval ambalap paduthukirathu.   

Tuesday, August 3, 2010

thirunangaiyarin eluthukal......

மூன்றாம் உலகம் என்ற வார்த்தை அரசியல் சார்ந்த ஒரு சொல்லாடல் என்பதே கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை எனது புரிதலாக இருந்தது. ஆனால் மூன்றாம் பாலினம் ஆக இருக்கும் திருநங்கையர் நடுவே எழுதும் முனைப்பு எந்த அளவுக்கு இருக்கிறது என்று அறிந்த பின் இந்தச் சொல்லாடலின் மற்றொரு முனை என் மனதில் பதிந்தது.ப்ரியா பாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்ற நாவலை வாசித்த பொது கூட இந்த உண்மை அவ்வளவு ஆழமாக மனதில் பதியவில்லை.அவர்களில் எழுத்தார்வம் உள்ள சிலரை உற்சாகப் படுத்த வேண்டும் என்றும் எழுதுக்களை சார்ந்த ஒர் உரையாடல் நிகழ்வு நடத்த வேண்டும் என்று ப்ரியா பாபு அழைப்பு விடுத்த போதும் கூட அதன் முழுப் பரிமாணமும் பிடிபடவில்லை.ஆனால் அந்த நிகழ்வின்போது தங்கள் ஏன் எழுத விரும்புகின்றனர்,அவ்வாறு எழுத விடாமல் அவர்களைத் தடுக்கும் சுவர்கள் எவை,எப்படி அந்தச் சுவர்களைத் தகர்ப்பது,எதை எழுதப் போகிறோம்,எப்படி எழுதலாம்,எழுதியவற்றை எப்படி நூலுருவில் கொணர்வது என்றெல்லாம் ஒரு நூறு கேள்விகளுடன் வந்திருந்த அவர்களின் நடுவே பேச முற்பட்ட போதுதான் அந்தப் பொருள் சார்ந்த என் அறியாமைகளை உணர முடிந்தது.எனக்குப் பிடித்த சில படைப்புகள்,அவை சார்ந்த சில உணர்வுகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களால் அதில் பெருமளவு ஈடுபாடு காட்ட முடியவில்லை என்பதை உணர்ந்தேன்.அந்த அசிரத்தை ஏன் என்ற கேள்விக்கான விடையை ப்ரியா பாபுவே கடைசியில் சொன்னார்.இலக்கியப் படைப்புகள் என்று எதையும் இன்னும் படிக்காதவர்கள்,படிக்கக் கிடைக்காதவர்கள்,படிக்க நேரமும் உகந்த வாழ்க்கை சுழலும் வாய்க்கaதவர்கள் வாழ்க்கையின் கோரப் பல்சக்கரங்களின் நடுவே அரைபட்டுக் கிடப்பவர்கள் என்ற நிலையில் எப்படி அவர்களால் நமது "உன்னத' இலக்கியங்களில் ஈடுபாடு காட்ட முடியும்?இந்த நிலையில் என்ன எழுதலாம்,எப்படி எழுதத் தொடங்கலாம்,என்னென்ன வடிவங்களைக் கையில் எடுக்கலாம் என்ற பல கேள்விகளும் அதற்கான விடைகளும் அவர்களின் நடுவேதான் இருப்பதாக உணர்ந்தேன்.எனஊடன் வந்திருந்த கருத்தாளர்களும் அதே உணர்வைத் தான் அடைந்திருப்பார்கள்.ஒரு விதை ஊன்றப் பட்டிருக்கக் கூடும்;அவ்வளவுதான்.அது முளைத்துத் துளிர்த்து,பூவும் காயும் கனியும் என்று வளர்ந்தொங்குவது என்று?விடை தெரியாத கேள்வியாகத்தான் இப்போதைக்கு இருக்கிறது.

Friday, July 30, 2010

காலம் என்னும் கவிதை...

காலம் என்ற சொல்லின் அர்த்த அழகு குறித்து யோசிக்கையில் எண்ணங்கள் அலை பாய்கின்றன.'கால நடை'என்று ஒரு சொல்லாடலை பாரதி கையாள்கிறான்.'அவர் ஒருவர் நாம் ஒருவர் என்றான மழைக்காலம்' என்று ஒரு பழம்பாடல் வரி பேசும்.'பால்ய கால சகி'என்ற வைக்கம் மொகம்மது பஷீர் எழுதிய குறுநாவல் காலம் கடந்தும் உயிர்ப்புடன் நிலைத்திருக்கும் பிஞ்சுப்பருவத்து உறவு பற்றிப் பேசுகிறது."நானெல்லாம் அந்தக் காலத்துல இப்படியா இருந்தியன்?"என்று அங்கலாயிக்கிற குரல்கள் எத்தனை?இன்று நாம் இருக்கும் நிலைக்கும் என்றோ ஒரு காலச் சூழலில் நமது நிலைக்கும் இடையிலான வேறுபாட்டைக் குறித்துக் குற்ற உணர்வு கொள்ளாதவர்கள் யார்?இந்தக் காலம் என்ற சொல் எல்லாப் படைப்பாளிகளின் படைப்புகளிலும் எஅதோ ஒரு வகையில் என்றும் இறவாத உயிர்ப்புடன் உலவிக் கொண்டேதான் இருக்கிறது.காலம் ஒரு கறாரான நீதிமான்.அதன் எடைக்கல்லில் எந்த ஒரு படைப்பும் அதன் சுய பலத்தினாலும்,அது தன உள்ளுறை கருவாய்க் கொண்டிருக்கும் ஒரு சத்தியமான உண்மையினாலும் மட்டுமே நின்று நிலைக்க முடியும்.யார் எந்தக் காரணம் கருதித் தூக்கிப் பிடித்தாலும் இந்த உள்ளுறை உண்மையின் அழகில் மட்டுமே ஒரு படைப்பு காலம் கடந்து நிற்பதற்கான வேர் ஓடி நிற்கிறது.எம். டி.வாசுதேவன் நாயர் எழுதிய காலம் நாவலை ஆங்கில மொழியில் தந்த கீதா கிருஷ்ணன் குட்டி என்ற மொழி பெயர்ப்பாளரின்  அனுபவப் பதிவு இந்தக் காலம் பற்றிய எண்ணங்களை மீளவும் உறுதி செய்வதாக அமைந்தது.'காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே' என்ற பாடல் என் சிறு வயது முதலே என் மனப் பரப்பில் பதிந்த ஒன்று."எங்களுக்கும் காலம் வரும்;காலம் வந்தால் வாழ்வு வரும்;வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே"என்று இன்னொரு  பாடல் நம் மனதில்நீங்கா இடம் பெற்றிருக்கும். இந்தப் பாடல் உழைப்பவர் பாடும் பாடலாக 'பாவ மன்னிப்பு'படத்தில் இடம் பெற்று இருந்தது.உழைக்கும் வர்க்கம் மட்டுமே தனக்கு வாழ்வு வந்ததும் சக மனிதர்கள் அனைவருக்கும் வாழ்வு தரும் முனைப்புடன் இருக்கிற ஒரே வர்க்கம் என்ற உண்மை இந்தப் பாடலின் உள்ளுறையும் சத்தியம்.எனவே இது காலம் கடந்து நிற்கிறது;நிற்கும்.

Sunday, June 20, 2010

சாதாரண மனிதர்களின் விலைதான் என்ன?

போபாலில் இருபத்தாறு ஆண்டுகளுக்கு முன் நடந்த விஷவாயுக் கசிவும் அதைத் தொடர்ந்து பதினாறாயிரம் பேர் ஒரே இரவில் மரணம் அடைந்ததும் இன்று உலகம் அறிந்த செய்திகள்.அந்தக் கொடுமை நிகழக் காரணமான அன்டர்சன் என்ற அமெரிக்கன் உட்பட பல உயர் அதிகாரிகள் இன்று சுதந்திரப் பறவைகள்.இவ்வளவு ஆண்டுக்காலம் நடந்த வழக்கும்,அதன் மீது வந்துள்ள தீர்ப்பும் இன்று மீண்டும் உலகை உலுக்கி இருக்கின்றன.அந்த இரவில் மடிந்து போன பல்லாயிரவர் தவிர இன்றளவும் அதன் பாதிப்பில் துன்புறும் பல லட்சம் பேருக்கு என்ன நிவாரணம் என்ற விவாதங்கள் சூடு பறக்கின்றன.உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகுதான் இந்த வழக்கு நீர்த்துப் போனது என்கிறார்கள்.தங்களின் தீர்ப்பு சரியே என்கிறார்கள் மாண்பமை நீதிமான்கள்.அமைச்சர்கள் குழு ஒன்று இப்போது மீளாய்வு நடத்திக் கொண்டு இருக்கிறது.இந்த நாட்டில் மட்டும் இன்றி எந்த நாட்டிலும் சாதாரண மனிதர்களின் உயிர்கள் கேவலம் கிள்ளுக்கீரை போலத்தான் கருதப்படுகின்றன.இந்த விவகாரம் முழுக்கப் படிக்கும் ஒரு சாதாரண மனிதன் எந்த நம்பிக்கையில் உயிர் வாழ்வான்?மனதி ஓடிக் கொண்டிருக்கும் கேள்வி இது ஒன்றுதான்.கோடிக்கணக்கான பேரின் கடும் எதிர்ப்புகளுக்கு இந்தப் பிரச்னையைக் கையாண்டவர்கள் சொல்லும் பதில்தான் என்ன?ஆண்டர்சன் என்ற கயவன் இந்தக் கொடும் விபத்துக்குப் பின் மிகப் பத்திரமாகத் தன நாட்டுக்குப் போய்ச் சேர உதவியவர்கள் யார்?இன்று நம் மனதில் தார்மீக நெறி சார்ந்துஎஞ்சி இருக்கும் உணர்வுகள் என்ன?ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு வெறும் பிரமையா?கேள்விகள் குடைகின்றன.பதில்தான் கிடைப்பது இல்லை.

Sunday, June 6, 2010

வாசித்தலின் எல்லைகள்..

எனது சிந்தனைகளைப் பதிவு செய்து ஒன்றரை மாதங்களுக்கு மேலாகி விட்டது.அன்றாட வேலைகள்;அலைச்சலும் உளைச்சலும் மிக்க வாழ்க்கை;எண்ணங்களின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாத நடைமுறை அலுவல்கள்;இப்படியாக நாட்கள் ஓடிவிட்டன.இன்று சிறிது அவகாசம் கிடைத்தது.கடந்த சில நாட்களில் புத்தகம் பேசுது இதழின் நூறு இதழ்களையும் படித்து அது பற்றி எழுதும் ஒரு வேளையில் ஈடுபட நேர்ந்தது.தமிழில் புத்தகங்களுக்கு என்றே வருகிற பத்திரிகை இது ஒன்றுதான்.வாசிப்பு அனுபவம் என்ற ஒன்று விவரிப்புக்கு அப்பாற்பட்டது.சொல்ல முற்படும் போதே சொல்லில் அடங்காமல் நழுவும் அது,பாவண்ணன் அவர்கள் அயோத்திதாசப் பண்டிதர் பற்றி எழுதிய கட்டுரை ஒன்று முன்பு வந்திருந்தது,அதை இப்போது படிக்கையில் எல்லையற்ற சிந்தனைகளின் ஊற்றுக் கண்ணை அது குத்தித்  திறந்து விட்டாற்போல் இருந்தது,அது போன்றே மாதவராஜ் எழுதிய காற்றுகென்னஎல்லை என்ற கட்டுரைதொடரும் பலப்பல சிந்தனைகலைத் தூண்டியது. வாசிப்பின் எல்லைகள் தாண்டி புனைவின் வெளியில் பயணம் செய்ய உதவும் எழுத்துகள் இவை.விரிவாக இது பற்றி எழுதும் முனைப்புடன் சிறிது இடைவேளை.....!

Tuesday, April 20, 2010

களப்பணியாளர்களும் அங்கீகாரமும்..........!

அங்கன்வாடி என்கிற ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மையங்களில் பணியாற்றுகின்ற களப் பணியாளர்களின் பணிகள் நடுவே நடைபெறும் புத்தாக்கப் பயிற்சி முகாம்களில் கலந்து கொண்டு அவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது,தொடர்ந்து சில தினங்களாக அவர்கள் நடுவே பேசியசந்தர்ப்பத்தில் சில உண்மைகளை அவதானிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.ஒப்பீடு அளவில் குறைந்த சம்பளம்;இன்னும் அரசு ஊழியர் என்ற நிரந்தரத் தகுதி பெறாத நிலை;நீண்ட காலமாகக் கோரி வரும் சில சலுகைகள் கிடைக்காத ஏமாற்றம்;இவ்வளவு இருந்தும் தம் பொறுப்பில் இருபத்தைந்து குழந்தைகள் ஒப்படைக்கப் பட்டிருகின்றனர் என்பதில் அவர்களுக்கே உரித்தான பெருமிதம்;சமூகம் அங்கீகரிக்க விட்டாலும் தம்மிடம் வளரும் குழந்தைகள் எவ்வளவு பெரியவர்கள் ஆனாலும் தம்மை மதித்து வந்து எங்கே கண்டாலும் பேசு கிரார்கள்; என்கிற ஒரு நிறைவை அவர்கள் அடைந்திருக்கிறார்கள்.அதுதான் அவர்களை இயக்கம் உயிராற்றல்.அவர்களுக்கு உணர்வுபூர்வமான ஈடுபாடு ஏற்பட வேண்டும் என்பது பயிற்சியின் நோக்கம்.நாம் வாசிப்பு,பாடல்கள்,கதைகள்,பல்வேறு பெரியோர்களின் வாழ்க்கை வரலாறுகளில் இருந்து சில எடுத்க்காட்டுக்கள் என்று அந்த ஈடுபாட்டை ஏற்படுத்தமுயல்கிறோம். அது நிறைவேறவும் செய்கிறது.அதை அவர்களின் முகப் பிரகாசத்திலும்,கண்களின் ஒளியிலும் ஓரளவு பேச்சிலும் நம்மால் உணர முடிகிறது.ஆனால், இந்த மாதிரிக் களப் பணியாளர்களுக்கு என்று,எப்படி,யார் அங்கீகாரம் வழங்கப்போகிறார்கள்?இந்தக் கேள்விதான் கடந்த ஒரு வருடமாகவே என் மனத்தைக் குடைந்து கொண்டிருக்கிறது.அறிவொளி இயக்கம் என்கிற எழுத்தறிவுத் திட்டத்தில் வயது வந்தோர் கல்விப் பணியில் இருபது ஆண்டுகள் இடைவெளியே இல்லாமல் பணியாற்றிய அனுபவம்,பட்டறிவு மட்டுமே இப்போது மீந்திருக்கிறது.இந்தப் பணிகளின் வெற்றி,தோல்விகள் ஒரு புறமிருக்க,இப்படி பணி செய்திருக்கிறார்கள் என்பதையாவது இந்தச் சமூகம் தன மனதில் பதிவு செய்திருக்கிறதா?இது மில்லியன் டாலர் கேள்வி.இந்தக் கேள்வியை மனதில் சுமந்து கொண்டேதான் எங்களை போலவே களப்பணி செய்யும் அங்கன்வாடிப்  பணியாளர்களை உற்சாகப் படுத்தும் பயிற்சியை நடத்த நாங்கள் போகிறோம்.நல்ல நகைமுரண்தான் இது!

Sunday, April 18, 2010

அறிவியல் கட்டுரைகள் உலகப் பொதுவானவை...!

அறிவியல் உலகம் இன்று விரிவும் ஆழமும் பெற்று வருகிற காலம்.புதிய புதிய ஆராய்சிகள் நடைபெறுகின்றன.புதிய முடிவுகளுக்கு விஞ்ஞானிகள் தம் ஆய்வின் முடிவில் செல்கின்றனர்.அந்த ஆய்வின் முடிவுகள் உலகம் முழுவதும் உள்ள சக விஞ்ஞானிகளின் கவனத்திற்குப் போக வேண்டும் என்று விரும்புகின்றனர்.வெளிநாட்டு அறிவியல் இதழ்கள் எதிலாவது அந்த ஆய்வின் முடிவுகள் வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.ஆனால் அம்மாத்ரி இதழ்களின் சந்தா மிகவும் அதிகம்.தனி நபர்களால் அந்த இதழ்களை வாங்க முடியாது.பெரும்நிருவனங்கள் கூட வாங்க முடியாத நிலை. இந்த நிலை பற்றி முது.மதன் எழுதிய ஒரு கட்டுரையை வாசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.திறந்த வெளி அணுகுமுறையின் மூலம் நாமே அம்மாதிரியான இதழ்கள் நடத்தவும்,அவற்றில் நம் ஆராய்சிக் கட்டுரைகளை வெளியிடும் வாய்ப்புக் கிடைக்கும் என்கிறார் முத்து.மதன்.இந்தியா போன்ற நாடுகளின் ஆராய்சியாலர்களுக்கு வேறு என்ன மாற்று?

Sunday, April 11, 2010

எழுதும்வேளைகளில் நம் மன உலகம்....

எழுதும்வேளைகளில் நம் மன உலகம்.......மார்ச் மாதம் பதிவுக்குப் பின் வேறு ஒரு பதிவும் செய்ய முடியாமல் வெளியில் அலைந்து கொண்டிருந்தேன்.இன்று படித்த சில வாக்கியங்கள் இப்படி உட்கார வைத்தன."உங்கள் எழுத்தின் ஊடே நீங்கள் மூச்சு விட்டுக்கொள்ள தவறினால்,உங்கள் எழுத்தில் நீங்கள் கதறிக் குரல் எழுப்பவில்லை என்றால்,உங்கல் எழுத்தின்  இடையே நீங்கள் பாடவில்லை என்றால் பிறகு நீங்கள் எழுதுவதை நிறுத்தி விடுங்கள்.நமது கலாச்சாரத்திற்கு உங்கள் எழுதினால் ஒரு பயனும் கிடையாது...!"      மிக ஆழமான சிந்தனைகளை எழுப்பும் கருத்து இது.ஒவ்வொரு எழுத்தாளனும் தன அனுபவத்தில் உணர்கிற ஒன்றினை இந்த வரிகள் சொல்லுகின்றன.நாம் உணர்கிரவற்றை உணர்ந்தபடி முழுமையாகக் கொண்டு வர முடியாவிட்டாலும்,பெரும் அளவுக்கு படிக்கிறவர்கள் உணரும் வகையில் பதிவு செய்ய வேண்டும் என்றால் எழுதும் ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் கதறிக் குரல் எழுப்பித்தான் ஆக வேண்டும்.ஒவ்வொரு வரியின் ஊடேயும் நாம் நம் ஆத்மா இசைக்கும் பாடல் ஒன்றின் சாயலையாகிலும் கோடிட்டுக் காட்டி இருக்கவேண்டும்.வெளியில் வரத் தவித்துக் கொண்டு அலை மோதும் மூச்சு நம் e ழுத்தில் சுதந்திர உணர்வுடன் பீரிட்டு வந்திருக்க வேண்டும்.இப்படி உணர்ந்து எழுதினால் எழுத்தின் ஜீவனை வாசிப்பவர்கள் நன்றாக உணர முடியும்.இது நம் ஆசை.நிறைவேற வேண்டும் அல்லவா?

Wednesday, March 24, 2010

இன்றொரு புதிய உலகம்.

இன்றொரு புதிய உலகம்....தினசரி வேலைகளின் அழுத்தம் காரணமாக இந்தப் பதிவுகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை.இன்று எனது துணைவியாரின் "பாடினியார்"வலைப் பக்கங்களில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.ஒரு வாசகன் ஆக என்னை மாற்றிக் கொண்டு படிக்கையில் அவரின் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந்தன.ஒரு பெண்,தாய்,மனைவி,மகள் என்ற பல பரிமாணங்கள் அவரின் பதிவுகளில் வண்ணங்கள் காட்டுகின்றன.பிரசவ வேதனை மிக்க ஒரு நாளில் தன பக்கத்துப் படுக்கையில் சின்னப்பொண்ணு என்று ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பதிவையும் கவனத்தில் வைத்திருந்து இதனை வருடம் சென்ற பிறகும் உயிர்ப்புடன் எழுத்துவடிவம் தர முடிந்தது பெரும் வியப்புத் தரும் விஷயம்.தான் பார்க்கும் படங்கள்,தன இளமைக்கால நினைவுகள்,குடும்பம்  என்கிற ஒரு வெளியில் கடந்து செல்லும் இனிமையும் வலியும் மிக்க நேரங்கள்,  வெளியில் பயணங்களில் காண நேர்ந்த காட்சிகளும் மனிதர்களும் ...என்று பன்முகம் கொண்டவை ஜெயந்தியின் பதிவுகள்.அவருக்குள் ஒரு படைப்பாளி இருப்பதை எப்போதோ உணர்ந்திருக்கிறேன். "அதுவும்...."என்ற தலைப்பில் நான் எழுத்து வடிவம் தந்த சிறுகதை அவர் சொன்ன அவரின் சிறுவயது அனுபவம்தான்.சின்ன வயதில் பாட்டி வீட்டில் அவரின் பிரியத்திற்குரிய பூனை ஒன்று ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகும் அவர் அங்குப் போனதும் ஓடி வந்து மடியில் ஏறி விளையாடும் சிறு நிகழ்வுதான் கதை.அவரே எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.என்றாலும் என் சிறுகதைகளில் மிகச் சிறப்பாக வடிவம் பெற்ற ஒருசில கதைகளில் இதுவும் ஒன்று.                                                   தன தனிமை துயரம்,தன கனவுகள்,நடைமுறை வாழ்கையில் தன முயற்சிகள்,இடையூறுகள் பற்றிக் கவலைப்படாமல் தன பாதையில் தளராமல் நடைபோடும் துணிவு என்று அவரின் பண்புகள் மிளிரும் வலைப் பக்கங்கள்.சில நிகழ்வுகள் நானும் உடனிருன்தவை என்றாலும் அவர் எழுத்தில் வாசிக்கும்போது மிகப் புதிய ஒரு காட்சி மனக்கண்ணில் எழுகிறது.ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீடு தன்னுள் ஒரு நடமாடும் உணர்வுக்களஞ்சியம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.அதன் தரிசனம் நம் கண்களில் படாமலே போகும் நிலை பல சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது.இயந்திர மயமான இன்றைய வாழ்கையில் அற்பக் கவலைகளால் மனதில் இருப்பதைக் கூடப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம்.எதிர்பாராமல் தொடர்ந்த பல நாட்கள் மழைக்குப் பின் திடீர் என்று ஒரு நாள் காலைச் சூரியனின் வருகையின் பரவசம் இன்று தெரிந்த உலகில் கிடைக்கிறது.அறிந்த பழைய உலகமே கூடப் புதிய வடிவமும் வண்ணமும் காட்டி நிற்கிறது.நாம் தவற விட்ட உன்னத நிமிடங்கள் குறித்த குற்ற உணர்வும் கூட நம்மை உறுத்துகிறது.ஒரு எளிய மன உலகம்வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்."பாடிநியாரின்"மன உலகம் அதுதான்.........................!

Thursday, March 18, 2010

படைப்புகளின் பின் உறைகிற வலிகள்

படைப்புகளின்  பின்  உறைகிற  வலிகள் பற்றிப் பேச முற்படும் பொது வாசகனின் மனநிலைகள் பலவிதமானவை.கண்காணாத இடங்களில் கரும்புத் தோட்டங்களில் உழைத்து வாடும் கூலிகள் பற்றிப் பாடுகிற பாரதி நம் முன்னோடி.தேயிலைத் தோட்டங்களில் பிழைப்புத் தேடித் போன மனிதர்களின் சோகங்கள் "எரியும் பனிக்காடு"நாவலில் ரத்தமும் சதையுமாய் இடம் பெற்றிருக்கின்றன.மொழிபெயர்த்த இரா.முருகவேளின் தமிழ்நடையில் முன் எப்போதோ கூலிகள் சிந்திய ரத்தவாடை அடிப்பதை படிக்கும் வாசகர் உணர முடியும்.பிஜித் தீவில் கூலிகள் ஆகப் பிழைக்கப் போன நம் தமிழ்ப்பெண்கள் சிந்தும் கண்ணீர் பாரதியை விம்மி விம்மி விம்மி விம்மி அழச் செய்தது.அந்தக் கவிதையின் தாக்கத்தில் தென்னாப்பிரிக்காவில் துயரப்படும் பெண்களின் காப்பாளர் ஆகத் தன்னைக் கற்பித்துக் கொள்ளும் சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி பற்றி மைதிலி சிவராமன் எழுத்து வரிகள் கண்ணீரை வரவழைக்கின்றன.                             ஆழி சூழ் உலகு நாவல் படிக்கும் ஒருவர் ஆழ்கடலில் கட்டுமரங்கலேறிச் சென்று மீன்கள் பிடிக்கத் தங்கள் உயிரைப் பணயம் வைக்கும் மீனவ மக்களின் துயரக் கடலில் மூழ்கிப் போவார்."அந்த தூரத்து மலைகளின் நடுவே யாரோ மெல்ல விசும்பி அழும் குரல் கேட்டு"'உங்கள் மனம் நடுங்கச் செய்வார் நா.பா.நோயால் துடிக்கும் கணவனின் பசிப்பிணியைத் தீர்க்கத் தன கற்பைப் பணயம் வைக்கும் மனைவி புதுமைப்பித்தனின் எழுதுகோலில் உயிரோவியமாய் எழுவாள்.                                                                                        "அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் எந்தையும் உடையேம்,எம் குன்றும் உடையேம்;இற்றைத் திங்கள் இவ்வெண்ணிலவில் எந்தையும் இல்லாமல்,எம் குன்றும் இல்லாமல் வாடி நிற்கிறோம்"என்று மனம் நோகும் பாரி மகளிரின் சோகம் நம்மணப் பரப்பில் கொண்டு வரும் வெண்ணிலா கண்ணீர் சிந்தி வருவதை அறிவது சிரமமாய் இருக்காது.இப்படிப் படைப்புகளின் பின்னால் உறைந்து கிடக்கிற வலிகள் எண்ணற்றவை.எழுதும் படைப்பாளிகளின் உயிரைத் தின்று வடிவம் கொள்கிரவை.           "என் உயிரைக்கொட்டி நான் இசைத்த பாடல் உனக்குக் கேட்காமல் போனது எப்படி?" என்று வியக்கிறது ஜூலிஸ் புசிக்கின் மனம்..........இந்த "நிலம் மறுகும் நாடோடிகளின்" துரப்பாடல்களை இசைக்கும் "கண் தெரியாத இசைஞ்ன்" யார் கண்ணிலும் படாமலே மறைந்து போவதை எப்படி எழுதுவது?...........................!

Tuesday, March 16, 2010

வாழ்க்கையின் துகள்கள்.... ஒரு குறும்படமும், நூலும்...

மார்ச் பன்னிரண்டாம் தேதி அன்று மைதிலி சிவராமன் தன பாட்டி எழுதிய டயரி  மற்றும் பல குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய "வாழ்க்கையின் துகள்கள்'என்ற புத்தக வெளியீடு நடை பெற்றது,அந்தப் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உமா சக்கரவர்த்தி என்ற வரலாற்று ஆய்வாளர் எடுத்த ஒரு குறும்படமும் திரை இடப்பட்டது.சுப்பலக்ஷ்மி என்ற பாட்டி தன மன உணர்வுகளை ஒரு இரண்டு வருட காலம் ஒரு நோட்டுப் புத்தகத்தில் தினமும் எழுதி வந்திருக்கிறார்.தன மகள் பங்கஜத்தை சாந்தி நிகேதன் கல்வி நிலையத்தில் படிக்க வைக்க வேண்டும் என்ற அவரின் கனவு நனவாகவில்லை.ஏற்கனவே தன இரண்டு மகன்களைப் பரி கொடுத்த துயாம் தாங்காமல் அவர் வலிப்பு நோயாளி ஆக இருப்பவர்.அவரின் கணவர் கோபாலக்ருஷ்ணன் பிரிட்டிஷ் அரசின் சால்ட் இன்ஸ்பெக்டர் ஆக வேலை செய்தவர்.எனவே அவர் வேலை பார்த்த இடங்கள் எல்லாம் மனித நடமாட்டம் இல்லாத கடற்கரை ஓர ஊர்கள்.பெரிய வீடு.ஆனால் கணவர்,மனைவியும் மகளும் ஆக மூன்றே பேர்தான்.கணவர் வேலை நிமித்தம் நீண்ட தூரப் பயணங்களில் மாதக்கணக்கில் போய் விடும் நேரங்களில் சுப்பலக்ஷ்மி மகளுடன் தனிமையில் உசன்று கொண்டிருப்பார்.மகளின் படிப்புக்காக சென்னை வரும் அவர் எழுதிய குறிப்புகளின் ஊடே ஒரு துயரமிக்க பெண்ணின் கதை உருக்கொள்கிறது.வெண்ணிலாவின் பால் ஒளியில் மனம் பரி கொடுக்கிறார்.பறவைகளின் குரல்களில் ,செடிகொடிகளின் அழகில் இரவு வானின் மாயத் தோற்றங்களில் மனம் தொய்கிறார்.அவரின் ஒரே நண்பர் கிரேஸ் சாமுவேல் எழுதும் கடிதங்கள் மட்டுமே அவருக்கு ஆறுதல்.அப்போது நடந்த விடுதலைப் போராட்டங்களில்,சென்னைக் கடற்கரைக் கூட்டங்களில்,பாரதி கவிதைகளில் அவரின் ஈடுபாடு தன கூண்டில் இருந்து விடுபட்டு வெளியே வர அவராக உருவாகிய வெளியாக இருக்கிறது.அந்த வாழ்க்கையின் துகள்கள்தான் எத்தனை வீறு கொண்டவையை இருக்கின்றன?புத்தக வாசிப்பும் அவரின் மிகப் பெரிய வெளியாக இருந்திருக்கிறது.அன்று சென்னைப் பல்கலைக்கழக நூலகர் ஆக இருந்த,பிற்பாடு இந்தியாவின் நூலகத்தந்தையாக விளங்கிய எஸ்.ஆர்.ரங்கநாதன் சுப்பலக்ஷ்மியின் ஆர்வத்தை உணர்ந்து அவரை நூலக உறுப்பினர் ஆக அனுமதிக்கிறார்.இடைவிடாமல் படித்துக் கொண்டே இருந்த சுப்பலக்ஷ்மியின் வாசிப்புப் பட்டியல் நம்மைப் பிரமிக்க வைக்கும்.ஆம்,பள்ளிக்கூடம் பக்கமே போக வைக்காத ஒரு பெண்ணின் வாசிப்பு அவ்வளவு ஆழமானது என்றால் யாரால் நம்ப முடியும்?ஆனால் அது உண்மை.அந்த வரலாற்றுப் புத்தகத்தை உடலுடனும் உயிருடனும் பார்த்தது போன்ற உணர்வைத் தந்தது குறும்படம்.யுரைந்து போக வாய்த்த நிகழ்வு...................!

Saturday, January 16, 2010

சிவகுமாரும் சூர்யாவும்..........

இன்று திரைக்கலைஞர் சிவகுமார் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.நானும் துணைவியாரும் சென்று அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.ஒரு மணி நேரம் போனது தெரியாமல் ஓடி விட்டது.கம்பன் என் காதலன் என்ற தலைப்பில் அவர் நிகழ்த்தும் உரைகள் இப்போது குறுந்தகடு வடிவில் வந்துள்ளன.மனைவி,தாய் என்ற பாத்திரங்களை வகிக்கிற பெண்களை இந்த சமூகம் எப்படி மதிக்கிறது,எப்படி அணுக வேண்டும் என்று தன வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பேசுகிறார் சிவகுமார்.அந்தக் குறுந்தகடை முந்தைய சந்திப்பில் தந்தார். அதை நாஞ்சில் சம்பத்,சூர்யாவின் தமிழ் ஆசிரியர் மற்றும் நான்,சிவகுமார் ஆகியோர் அவரின் அலுவலகத்தில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது.ஒவ்வொரு மனிதனும் தன மனைவியின் பங்களிப்பு என்ன என்று மனப்பூர்வமாக உணர்வதற்கு அவரின் அனுபவப் பிழிவு உதவும்.இன்றைய உரையாடலின்மையமாக இந்தக் கருத்தே அமைந்தது.நாங்கள் விடைபெறும் வேளையில் சூர்யாவின் அனுபவப்பதிவான "இப்படிக்கு சூர்யா"என்ற புத்தகத்தைத் தந்தார்,திரு சிவகுமார்.வீடு வருமுன் இருபத்தைந்து பக்கங்கள் வரை படிக்க முடிந்தது.இன்று மிகப்பெரும் வெற்றிகளை திரையுலகில் அடைந்து விட்ட சூர்யா,தன சிறு வயதில் எந்த அளவுக்குத் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார் என்று படிக்கும் வேளையில் அது நம்பவே முடியாத ஒரு செய்தியாகவே இருக்கிறது.அனால் அவரே சொல்லும் செய்திகளை நம்பாமல் இருக்க முடியாது அல்லவா?சூர்யாவின் உணர்வுகளை எழுத்து வடிவில் தந்தவர் ஆர்.சி.ஜெயந்தன்.கல்கி இதழில் தொடராக வந்த சமயம்,ஓரிரு பகுதிகளைப் படித்து இருந்தாலும் இப்போது நூல் வடிவில் படிக்கும் போதுதான் அதன் வலிமை புரிகிறது.மிக வித்தியாசமான பதிவு.சிவகுமாரின் புதல்வர் அல்லவா?நூல் முழுவதும் படித்த பின் இன்னும் நிறையப் பதிவுகலைத்  தரக்கூடிய நூல்தான் இது.

Sunday, January 10, 2010

artham iyangum thalam

எந்த ஒரு படைப்புக்கும் அதன் மையமான பொருள் ஒன்று இருக்கவே செய்யும்.இது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று.அர்த்தம் என்று வடமொழியில் சொல்லப்படும் இந்தப் பொருள் எது?சொல்கிறவரின் மனதில் இருந்ததா?சொல்லில் வெளிப்பட்டதா?சொல் கடந்த ஒன்றா?எல்லாம்தான்  "சொல்லினால் தொடர்ச்சி நீ,சொல்லப்படும் பொருளும் நீ.....சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ.......சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்......சொல்லினால் சுருங்க நீ நின் குணங்கள் சொல்ல வல்லரே....."என்று நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல் உண்டு.அது படைப்பிலக்கியதிற்கும் பொருந்தும் என்று இன்று கிடைத்த ஒரு நூலின் பதிப்புரையில் படித்தேன்."அர்த்தம் இயங்கும் தளம்"என்பது தலைப்பு.தேவகோட்டை வா.மூர்த்தி,'பாரவி',எஸ்.சுவாமிநாதன் ஆகிய மூன்று எழுத்தாளர்கள் "அர்த்தம்"என்பதன் அர்த்தம் பற்றிச் சிந்திதவற்றின் தொகுப்பு.மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன.இன்று காலையில் பாரவி என்கிற என் நீண்ட நாள் நண்பரைச் சந்திக்க நேர்ந்த பொது அவர் தந்த நூல் இது.பல்லாண்டு காலமாக தொடர்ந்து எழுதி வருகிறவர் பாரவி.குறைவாகவே எழுதி இருந்தாலும் மிக நவீன சொல்முறையில் எழுதுபவர்.இன்னும் இவரின் எழுத்துகள் ஒரு தொகுப்பாக வராமல் இருப்பது பற்றி எனக்கு மிகுந்த ஆதங்கம் உண்டு.இது பற்றி அவரைச் சந்திக்கும் போதெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறேன்.இன்றும் சொன்னேன்.இந்த நூலில் முதல் கட்டுரையின் பதினைந்து பக்கங்கள் வரை படித்ததில் சில முக்கியமான சிந்தனைகள் எழுந்தன.வா. மூர்த்தியும் நீண்ட காலமாகத் தமிழில் எழுதி வருபவர்தான்."தீபம்"இதழ் காலம் தொட்டு இவரின் படைப்புகள் எனக்கு அறிமுகம்.படைப்பாளியின் கருத்து என்ன என்று ஒரு படைப்பில் நமக்குப் புலப்படும் பொருளும்,அவரின் மனதில் இருக்கும் பொருளும் ஒன்றாகவே அமைந்து விட்டால் பிரச்னை இல்லை.அவ்வாறு இல்லாமல்,வேறு வேறு பொருள்கள் எழுந்தால்,என்ன செய்வது.அங்கு,நான் சொல்ல வந்தது இதுதான் என்று படைப்பாளி விளக்கம் அளிக்க நேர்கிறது.இந்த விளக்கம் அளிக்கும் செயலில் பொதுவாகப் படைப்பாளிக்கு ஆர்வம் இருப்பது இல்லை.அது சற்று கலைத்திறன்  குறைவான செயல் என்றே கருதப்படுகிறது.இது போன்று பல கருத்துக்கள் இந்த நூலின் வாசிப்பைத் தொடர்ந்து என் மனதில் எழுந்தன.

Friday, January 1, 2010

indru puthaandu piranthathu............!

பிரபஞ்சனின் உலகம் பற்றிய பதிவுக்குப் பின் இன்று மீண்டும் தொடர்கிறேன்.இன்று புத்தாண்டு பிறந்திருக்கிறது.ஒரு புதிய நாளின் பிறப்பு பற்றி எழுதும் வேளையில் "பிரபஞ்சப் பூன்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்திருக்கிறது"என்று நா.பா. எழுதுவார்.பழைய ஆண்டு முடிந்து ஒரு புதிய ஆண்டு பிறந்திருக்கும் இந்த வேளையில் இந்தப் பிறப்பு பற்றி எப்படி சொல்லுவார்?டிசம்பர் மாதம்தான் அவரது பிறந்த நாளும்,மறைந்த நாளும் என இரண்டுமே வருகின்றன.இப்போது அந்த இரு நாட்களும் கடந்து சென்று விட்டன.அவரை பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தில் எனது நினைவுகள்  சிலவற்றைப் பதிவு செய்ய ஒருவாய்ப்புக்   கிடைத்தது.                                அவர் வாழ்ந்த அந்த வீட்டில்,அவர் பயன்படுத்திய மாடியறையில்,அவர் சேர்த்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களின் நடுவே அவரின் புகைப்படம் என் துயரத்தைக் கிளறி விட்டது.அழுகை குமுறிக் கொண்டு வந்தது.அந்த மனநிலையில் இருந்து விடுபட்டு என் கருத்துக்களைச் சொல்லும் வரை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அன்பர் திரு.ரங்கராஜ்.நா.பா.வின் மென்மையான படைப்புலகம் இன்றும் ஏராளமான வாசகர்களின் மனப்பரப்பில் அழியாத உயிரோவியமாகவே திகழ்கிறது. "தீபம்" அவரின் இலக்கிய நினைவாலயம்.அவரின் நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் இவை பற்றி விமர்சனக் கருத்துக் கொண்டிருப்பவர்கள் கூட தீபத்தின் பங்களிப்பு பற்றிக் குறை சொல்ல மிகவும் யோசிக்க வேண்டியிருக்கும்.தீபம் இலக்கியக் குடும்பத்தின் எண்ணற்ற உறுப்பினர்கள்  என்றும் அழியாத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்......!                                                                                                                                                                                         இன்று ஒரு கணம் யோசித்தால் இந்த நினைவுகள் காலப்   பெருவெளியின் மிகச் சிறிய ஒரு துளியாகவே தென்படுகின்றன.இப்போது தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் துயரங்கள் நம் மனப் பரப்பில் பெரும் சுமையாகவே அழுத்துகின்றன.மீள முடியாத சுமை அது.என்றும் பரிகாரம் காண முடியாத பெரும் பாவம்.அதைஎந்த வார்த்தைகளில் சொல்லுவது என்று யோசித்தால்,விடைகானவியலாத ஒரு புதிர்...................!