Saturday, October 25, 2014

meendum en jannalil

மீண்டும் என் ஜன்னலில்

 இந்த ஆண்டில் இதுவரை மூன்று பதிவுகள் மட்டுமே செய்திருக்கிறேன்.இன்று மீண்டும் என் ஜன்னலைத் திறந்து பார்க்கையில் சென்று மறைந்த நாட்களின் நினைவுகள் அலை மோதுகின்றன.காலம் ஒரு கொடூரம் மிகுந்த சக்தி.அதன் போக்கில் போய்க் கொண்டிருக்கும் போது எதைப் பற்றியும் அதற்குத் தாட்சண்ணியம் இருப்பதில்லை.எனது மொழிபெயர்ப்பு முயற்சிகள் தொடங் கி கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடி விட்ட போதிலும்,முதல் அங்கீகாரம் சமீபத்தில் "திசை எட்டும்" காலாண்டு இதழின் மூலம் கிடைத்தது.குறிஞ்சிவேலன் எனக்கு "நல்லி-திசை எட்டும்"விருது வழங்கப் பட இருப்பதாகத் தெரிவித்த  நாளில்  சற்றே உற்சாகம் வரத்தான் செய்தது.ராஜபாளையம் நகரில் செப்டம்பர் பதினெட்டு அன்று விருதை வழங்கினார்கள்.அடுத்த மாதமே இன்னொரு விருதும் அந்த நூலுக்குக் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லைதான்.கலை இலக்கியப் பெருமன்றமும்,என்.சி.பி.ஹெச்.புத்தக நிறுவனமும் இணைந்து வழங்கும் மொழிபெயர்ப்பு விருது அக்டோபர் பன்னிரண்டாம் தேதி அன்று வழங்கப் பட்டது.திருச்சியில் நடந்த விழா அது.அறுபதாவது வயதின் தொடக்கத்தில் இப்படி ஒரு விருது வழங்கப் படுவது என்ன விளைவை உண்டாக்கும் என்பது இனி இருக்கிற நாட்களில்தான் தெரிய வரும்.எழுதுவதும்,படிப்பதுமே வாழ்க்கை என்று இருந்து விட்ட பலரும் இறுதிக் காலத்தில் அடைகிற உணர்வு என்னவாக இருக்கும்?பெருபாலும் சோர்வு என்றுதான் தோன்றுகிறது. எனினும் இன்று ஒரு புதிய நூலில் ஒரு பக்கம் படிப்பது கூட ஒரு புத்துணர்வைக் கொண்டு வரத்தான் செய்கிறது.
புத்தகங்கள் செய்யும் மாயம் அது.