Friday, September 30, 2011

அண்மைக்கால நாவல்கள்

 தமிழ் நாவலுக்கு நூறு வயதுக்கு மேல் ஆகி விட்ட பின்பும்,இன்னமும் தமிழில் நாவல் என்று ஒன்று அதன் உண்மையான அர்த்தத்தில் வரவில்லை என்று சாதிப்போர் உள்ளனர்.இந்த மாதிரியான அபிப்ராயங்கள் ஒரு புறம் இருந்த போதும் இதுவரை இல்லாத வகையில் புதிய வடிவங்கள்,புதிய வண்ணங்கள் கொண்டு பல நாவல்கள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.வாசிப்பு அனுபவத்தில் மட்டும் இன்றி அதன் பாடுபொருள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கத்திலும் இவை வலிமை மிகுந்தவையே.சமீப கால நாவல்களின் விகசிப்பு மலைப்பை உண்டாக்குவது.பக்காளவு என்று பார்த்தாலும் மிக பிரம்மாண்டமான அளவில் உள்ளன.ஆயிரம் பக்க நாவல் என்பது சர்வ சாதாரணம். விரிந்த ஒரு கான்வாஸில் மனித வாழ்க்கையின் பல பரிமாணங்களை இந்த நாவல்கள் உயிரோவியமாகத் தீட்டுகின்றன.மொழி,சொல்,பொருள் எல்லாம் புதிது.எழுதக்கூடாதவை என்று பலகாலம் விலக்கப்பட்ட பாடுபொருள்கள் இவற்றில் மிக இயல்பாக இடம் பெறுகின்றன.இன்னொரு விசேசம் வரலாற்றின் பக்கங்களில் இதுவரை இடம்பெறாத விளிம்புநிலை மாந்தர்கள் இவற்றில் இடம்பெறுவது.அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை,அவற்றின் போராட்டங்கள்,உணர்சிக் கொந்தளிப்புகள்,அவர்கள் அடைந்த அவமானங்கள்,வெற்றிகள்,தோல்விகள்,பட்ட பாடுகள் எல்லாம் இடம்பெறுகின்ற விதம் புதியது.போரும்,அமைதியும் வெறும் செய்திகள் என்ற நிலை மாறி அவை இந்த விளிம்புநிலை மக்களின் அன்றாட வாழ்வை எப்படிஎல்லாம் சிதைத்துச் சின்னாபின்னம் ஆக்குகின்றன என்ற விசயத்தைப் பேசுகின்றன."அமைதி திரும்பிவிட்ட" போர்ப்  பிரதேசங்களில்இந்த விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை லட்சணங்கள் என்னவாக இருந்தன,இருக்கின்றன என்று உரக்கப் பேசுகின்றன.வாசிக்கவே மிகுந்த மனோதிடம் தேவைப்படும் விதத்தில் இவற்றின் விவரணங்கள் இருக்கின்றன.இவற்றில் சில நாவல்களை வாசித்த அனுபவம் இங்கு பதிவு செய்வதற்குரியது... 

Sunday, September 25, 2011

நீண்ட இடைவெளிக்குப் பிறகு......

இடுகைகள் இடுவதில் நீண்ட இடைவெளி.காரணம் எதுவாக இருப்பினும்,இது ரொம்ப அதிக இடைவெளிதான்.என்ன செய்ய?இந்த இடைக்காலத்தில் படித்த,கேட்ட,எழுதிய விஷயங்கள் எண்ணற்றவை.கடந்த வாரத்தில் நான் எழதிய புத்தகம் ஒன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள்,கலைஞ்ர்கள் சங்கத்தின் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது.ஆப்ரிக்கப் பெண் தலைவர் மேரி மெக்லியோட் பெத்யுனே பற்றிய புத்தகம் அது.பருத்திக்காட்டில்,பருத்தி பொருக்கி வாழ்க்கை நடத்தும் கறுப்பின அடிமைப் பெற்றோரின் மகள் அவர்.உனக்குப் படிக்க வராது  என்று ஒரு வெள்ளைக்காரப் பெண் சொல்லும் வார்த்தைகள் அவரைப் பாதிக்கின்றன.அன்று முதல் "நான் படித்தே தீருவேன்" என்று உறுதி எடுத்துக் கொண்டு அதே சிந்தனையில் மூழ்கி அமெரிக்காவின் மாபெரும் கருப்பு இன கல்வி நிலையம் ஒன்றை நிறுவி வெற்றி காண்கிறார் அவர். இந்தக் கதையை நான் ஆங்கில மூலத்தின் அடிப்படையில் எழுதியிருக்கிறேன்.இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு ஆதவன் தீட்சண்யா வெள்ளிக்கிழமை அன்று நீண்ட நேரம் பேசினார்.உதய சங்கரும்,எஸ்.வி.வேணுகோபாலும் பேசினார்கள்.எனக்கும் இந்தப் புத்தகம் என் எழுத்து வாழ்கையில் ஒரு குறிப்பிடத் தக்க நூல் என்றே தோன்றுகிறது.              பிறகு,படித்தவை.ஒப்ரா வின்பிரே பேசுகிறார் என்றொரு புத்தகம்.ஒப்ராவும்      கறுப்பினப் பெண்தான்.படிப்புதான் சுதந்திரத்தின் நுழைவாயில் என்கிறார்.புத்தக வாசிப்பு என்பது தனது மாபெரும் ஆர்வமிக்க செயல் என்கிறார்.மிக மிக மோசமான சூழலில் பிறந்து வளர்ந்து இன்று உலகம் போற்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளினி என்ற வெற்றியை அடைந்திருக்கிறார்.             சுஜாதாவின் ஆழ்வார் பாடல்கள் ஓர் அறிமுகம் என்ற நூலை மறு வாசிப்புக்கு எடுத்திருந்தேன் பெரியாழ்வாரின் பாடல்கள்,ஆண்டாள் பாடல்கள் இரண்டையும் பற்றி அவர் எழுதியிருக்கும் விதம் அபாரம். நேற்று என்.சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையும்,இயக்கமும் என்ற புத்தகம் படித்து முடித்தேன் அந்த நூல் பற்றிய அறிமுகக் கட்டுரையும் இன்று எழுதினேன்.பொதுவுடைமைக் கட்சி தலைவர்கள் பற்றி இன்றைய இளம் எழுத்தாளர்கள் பலரும் சிறுபிள்ளைத் தனமாக எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் அவர்களின்,குறிப்பாக சங்கரய்யா அவர்களின் வாழ்க்கையைப் படித்துப் பார்த்தல் தெரியும்.எப்படிப்பட்ட தியாக வாழ்க்கை அவர்களுடையது என்று.அவருக்கு தொண்ணூறு வயது.அதில் எழுபது ஆண்டுகள் போராட்ட வாழ்க்கை.பிரிட்டிஷ் இந்தியாவில் நான்கு ஆண்டுகளும்,சுதந்திர இந்தியாவில் நான்கு ஆண்டுகளும் சிறையில்;தலைமறைவு வாழ்க்கை ஒரு மூன்று  ஆண்டுகள்.விடுதலைப் போராட்டத்திற்குப் போவதற்காக தன கல்வியைத் தியாகம் செய்கிறார்.அவரின் சிறைவாசம்,சட்டமன்ற அனுபவம்,கட்சிப்பணிகள்,பொதுவாழ்க்கை,இலக்கிய ஆர்வம்,குடும்பம் என்று எல்லாம் படிக்கப் படிக்க பிரமிப்புத் தருகிறது."விடுதலைப் போரினால் வீழ்ந்த மலரே தோழா"என்ற பாடல் அன்று சுதந்திரப் போராடத் தியாகிகள் பற்றிய நினைவு அஞ்சலி.எழுதியவர் மணவாளன் என்ற தியாகி.இசையமைத்தவர் மறைந்த இசைக் கலைஞர் எம்.பி சீனிவாசன்.கேட்கும் போதே உருக வைக்கும் பாடலிது.கட்சி மாநாட்டில் இந்தப் பாடலை கேட்டு கண்ணீர் சிந்தி நின்ற சங்கரய்யாவின் மனம் நெகிழ்ச்சியானது.கலை இலக்கிய வடிவம் உள்ளடக்கம் பற்றிப் பேசியிருக்கும் பேச்சு அற்புதம்.இந்த நாட்களில் கொலைகாரர்களும்,கொள்ளைக்காரர்களும்,கிரிமினல்களும் அரசியல்வாதிகள் என்றும்,முதல்வர்கள் என்றும் மக்கள் பிரதிநிதிகள் என்றும் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.மக்களும் அவர்கள் பின்னால் மந்தைகள் போல போய்க் கொண்டிருக்கிறார்கள்.ஆனால்,சங்கரய்யா போன்றோரின் பணிகளை இன்று இந்தக் கூட்டம் அறியுமா?அறிந்து பின்பற்றுமா?