Saturday, January 26, 2013

கண்காட்சி முடிந்தது;வாசிப்பு ?

இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சி முடிந்து விட்டது.பதின்மூன்று நாட்கள் சென்னை நகர பிரதான் சாலையில் மக்கள் வெள்ளம் .அனேகமாக அனைவர் கைகளிலும் புத்தகங்கள்.பூமணியின் "அங்காடி" நாவல் இந்த ஆண்டின் கவனம் பெற்ற நூல்களில் ஒன்று.இந்த முறை நான்கைந்து நாட்கள் அங்கு போனதில் பல விஷயங்கள் கவனத்தில் பதிந்தன.வாசிப்பின் பயனை,சுவையை ஒவ்வொரு வருடமும் கூடுதலான மக்கள் உணர்ந்து வருகிறார்கள்;தீவிர இலக்கிய நூல்கள் வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகம் ஆகி வருகிறது;இளம் வாசகர்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள்.நான் வாசித்த ஒரு புத்தகம் இந்தக் கண்காட்சியில் வெளி வந்த கட்டுரைத் தொகுப்பு.கீரனூர் ஜாகீர் ராஜாவின் "குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை"என்ற அந்தப் புத்தகம்,தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் பற்றி அறிமுகம் செய்கிறது.முதல் சிறுகதை ஆசிரியர் என்று பொதுவாக அறியப்படும் வ.வே.சு.அய்யரின் "குளத்தங்கரை அரசமரம்" கதையில் தொடக்கி,இன்று மிக சமீப காலத்தின் கதை சொல்லிகள் வரை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து மிகுந்த ரசனையுனர்வுடன் எழுதி இருக்கிறார் ஜாகீர்.க.நா.சு.,தஞ்சை பிரகாஷ் ச.தமிழ்ச்செல்வன்,இன்னும் பல படைப்பாளிகளின் கதைகள்,கட்டுரைகள் ,நாவல்கள் பற்றி தன வாசிப்பு அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய கட்டுரை,ச.த .,அன்னா தச்தேவ்ச்கி பற்றிய கட்டுரைகள் மிக நுட்பமானவை.தான் விமர்சகர் அல்ல,ஆனால் சற்றுத் தீவிர வாசகர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்கிறார்.பல படைப்புகளின் அடி நாதம் குறித்து இவர் மிகச் சரியாகவே இனங் காண்கிறார்.தமிழ்ச் செல்வனின் முன்னுரையில் தனது மனதிற்கு நெருக்கமான,தன மனப்பதிவுகளே போன்ற கட்டுரைகள் இவை என்று பாராட்டி   இருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.வேறு பல நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.பூமணியின் நாவலை நான் படிக்க வேண்டும் என்று தொழார் பால்வண்ணம் அவரின் பிரதியைத் தந்தார்.சில பக்கங்கள் படித்தும் பார்த்தேன்.மிக முக்கியமான ஒரு படைப்புதான் என்று உறுதிப்பட்டது.வாசிப்பின் இசையில் எப்போதுமே மனம் பறி கொடுப்பவன் நான்.தீராத ஆச்சரியம் அது.வாழ்க்கையின் பல மேடுபள்ளங்களில் இடறி நான் விழுந்த போதெல்லாம் கைகொடுத்துத் தூக்கி விட்ட கரம் வாசிப்பு அல்லவா?இன்று நான் சரிவில் இருந்து மீளவும் அதுதானே கரம் கொடுத்தது?ஜாகீரின் புத்தகத்தை உதய சங்கருக்கும் மணிமாறனுக்கும் சமர்ப்பணம் செய்த்திருக்கிறார் அவர்.தமிழ்ச் செல்வனின் "வலையில் விழுந்த வார்த்தைகள்" புத்தகமும் வந்திருக்கிறது.அதன் முன்னுரையிலும் உதயசங்கர் பற்றிய வரியொன்று வருகிறது.இவை தவிர வேறுபல புத்தகங்களை அறிமுகம் செய்யும் பொருட்டு படிக்க நேர்ந்தது.பிபன் சந்திராவின் இரண்டு நூல்கள்,வே.ஜீவகுமார் காவிரி பற்றி எழுதியது,அணுவின் ஆற்றல் பற்றி ப.கு.ராஜன் எழுதியது,உணவுப் பாதுகாப்பு பற்றி பிருந்தா காரத் முன்வைக்கும் ஏராளமான வாதங்கள்,அதைத் தமிழில் தந்திருக்கும் பெரியசாமித் தோழர்,மார்க்சிய மூல நூல்களைப் படிப்பதற்கு உதவும் மாரிஸ் கான்போர்தின் கைஏடு இப்படிப் பலவும் படிக்க வேண்டியுள்ளது.வாசிப்புக்கு என்றும் முடிவில்லை,வாழ்க்கையைப் போலவே.....!     

Tuesday, January 15, 2013

மீண்டும் என் மானுட வீதியில்....

எழுதுகிறவன் என்ற முறையில்,தொடர்ந்து கடந்த முப்பத்தி ஐந்து ஆண்டுகளில் சிறுகதைகள்,கட்டுரைகள்,புத்தக அறிமுகங்கள் இப்படி எழுதிக் கொண்டேதான் இருக்கிறேன்.இதுவரை பதினோரு புத்தகங்கள் வந்து விட்டன.அவற்றில் ஏழு மொழிபெயர்ப்பு நூல்கள்.ஆங்கில வழி தமிழில் இலக்கியம்,அரசியல்,சுயசரிதை,தத்துவம் என்று பல பொருள்கள் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகள் அவை.அவற்றில் ஒரு தொகுப்பு நூல் "மானுட வீதி".2007 ஆம் ஆண்டில் கவிஞர் யுகபாரதியின் இயற்கை வெளியீடு மூலம் கொண்டு வரப்பட்டது.எனக்கு மிகப் பிடித்தமான கட்டுரைகள் அவை.கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்த நூலின் பல பிரதிகள் நண்பர்களுக்கு என்று வாங்கி கொடுத்துக் கொண்டிருந்தேன்.கையில் ஒரு பிரதி கூட இல்லாதிருந்தது.இன்று தற்செயலாக நண்பர் கண்ணன் மூலம் அவருக்கு நான் கொடுத்திருந்த பிரதி திரும்பக் கிடைத்தது.அதன் முன்னுரை இன்றும் பொருத்தமான ஒன்றாகவே இருக்கிறது :மொழிபெயர்ப்பு என்பது படைப்பாக்கச் செயலுக்கு சற்றே மாற்றுக் குறைவான ஒன்றென ஒரு கருது நிலவுகிறது.இதை யாரும் வெளிப்படையாக அறிவிப்பது இல்லையே தவிர,மொழி பெயர்ப்பாளர்களுக்குத் தரப்படும் "சமூக மதிப்பு","இடம்"_இந்த நிலத்தடி நீராய்ப் போய்க் கொண்டிருக்கிற மதிப்புக்குச் சான்றுகள் ஆகும்." என்று தொடங்கும் அந்த முன்னுரை,தமிழின் மொழி பெயர்ப்புப் பாரம்பரியம் பற்றி நான் அறிந்த விவரங்களைத் தருகிறது.பிறகு இதில் உள்ள கட்டுரைகள் பற்றியும்,அவை வெளியான இதழ்கள் பற்றியும் குறிப்பிடுகிறது.சிற்பி வல்சன் கொலேரியின் "நம் எல்லோரிடத்திலும் ஒரு சிற்பி"என்ற அனுபவக் கண்ணோட்டம் இதில் உள்ளது.ஸ்பார்டகஸ் என்ற ரோமானிய அடிமைப் போராளி பற்றிய நூல் அறிமுகம்,மலையாள மொழிப் படைப்பாளிகள் எம்.டி.வாசுதேவன் நாயர் ,பவித்ரன்தீக்குநி  ஆகியோரின் நூல்கள் பற்றிய கட்டுரைகள் உள்ளன.ஆனந்த் பட்வரதன் எடுத்த ஆவணப் படங்கள் பற்றியும்,அவற்றை எடுக்கும் பொது அவர் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் அவருடன் நேர்காணல் உள்ளது. ஏ.ஜி.எத்திராஜுலு மொழிபெயர்த்த நூல்கள்,அவரின் அனுபவங்கள் பற்றிய நேர்காணல் ,சஷி தேஷ்பாந்தே யின் கட்டுரை,நாராயன் சுர்வே  எழுப்பிய கலாசாரக் கேள்விகள் கட்டுரைகள் இப்படி எல்லாமே எழுதுகிறவர்களின் அனுபவப் பிழிவுகள் அடங்கியதொகுப்பு "மானுட வீதி".கியூபாவின் புரட்சிகர போராளி ஹோசே மார்த்தி பற்றி அமரந்தா எழுதிய நூல் அறிமுகம் கடைசிக் கட்டுரை."மனிதன் அசிங்கமானவன்;ஆனால் மானுடம் அழகானது "என்கிறார் அவர்.எவ்வளவு அழகான உண்மை!இந்தக் கட்டுரைகளில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறோம் என்ற நிறைவு இன்று மீள் வாசிப்பின் இறுதியில் கிடைத்தது.ஐந்து ஆண்டுகள் கழித்து இன்று திரும்பிப் பார்க்கும் சமயம் இது."உனது தியாக உள்ளத்தை முட்களால் நிரப்பினேன்.முட்களின்  இடையே மலர்கள் மலரும் என்பதை மறவாதே" என்று தன அம்மாவிற்கு மார்த்தி எழுதும் கடிதம் எவ்வளவு அர்த்தம் நிறைந்தது!இப்படியான பல நல்ல விசயங்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தது பற்றி ஒரு நியாயமான பெருமிதம் எழத்தான் செய்கிறது.       

Monday, January 14, 2013

பொங்கல் புத்தாண்டு புத்தகக் கண்காட்சி

இன்று பொங்கல்.புத்தாண்டில் பதினான்கு நாட்கள் ஓடி விட்டன.ஒவ்வொரு புதிய ஆண்டின் போதும் மக்கள் புதிய நம்பிக்கைகளுடன் வாழ்வைத் தொடருகின்றனர்.அவை நிறைவேர்கின்றனவா என்பது வேறு விஷயம்.இன்று நாளை மறுநாள் என்று நம்பிக்கைகளின் எல்லைகள் விரிவடைந்து கொண்டே போகின்றன.என்றாவது ஒரு நாள் விடிவு வரும் என்று அவர்களின் பயணம் தொடர்கிறது.இந்த ஆண்டும் புத்தகக் கண்காட்சி தொடக்கி விட்டது.முன்பு ஒரு போதும் இல்லாத அளவுக்கு ஸ்டால்கள்.லட்சக்கணக்கான புத்தகங்கள். கூட்டம் கூட்டமாக குடுபத்துடன் வந்து செல்லும் மனிதர்கள்.இதுபற்றிய ஒரு விவாதத்தில் பங்கு கொள்ளும் வாய்புக் கிடைத்தது.புதிய தலைமுறை தொலைக் காட்சியில் நானும் காந்தி கன்னதாசனம் சல்மா பாமரன் ஆகியோரும் பங்கு கொண்டோம்.புத்தகங்கள் இன்று  மக்கள் கவனம் செலுத்தும் ஒரு விசயமாக மாறி வருகிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.நல்ல நூல்வாசிப்புக்கு இணையான வேறு ஒன்று இல்லை என்பதை உணர்ந்து வருகிறார்கள் என்றே  என்றே தோன்றுகிறது.இந்த விழிப்புணர்வை இன்னும் விரிவாக்க வேண்டும் என்பது நம் முன்புள்ள கடமை.எழுதுகிறேன்,ஆகவே இருக்கிறேன் என்று உதயசங்கர் எழுதியிருக்கிறார்.படிக்கிறேன்,ஆகவே இருக்கிறேன் என்று சொல்ல வேண்டும் என்பது என் எண்ணம்.படிப்பதால் நாம் வளர்கிறேன்.படிப்பது என் சக மனிதர்களைப் புரிய வைக்கிற வழியாகிறது.வாழ்க்கையாகிறது.நீரோடும் நதியின் கரையில் நின்று இரு கைகளாலும் வாரி வாரிக் குடித்துக் கொண்டிருப்பதும்.படிப்பதும் ஒன்றுதான்.படித்துத் தீரா நதியின் கரை அது.இந்தப் புத்தாண்டில் படிக்கவும்,எழுதவுமான விசயங்கள் மலையெனக் குவிந்து விட்டன.இந்த ஆண்டின் தொடக்கம் நம்பிக்கை அளிப்பதாகத் தான் இருக்கிறது.நம்புகிறேன் ஆகவே படிக்கிறேன் ஆகவே வாழ்கிறேன்