Saturday, January 16, 2010

சிவகுமாரும் சூர்யாவும்..........

இன்று திரைக்கலைஞர் சிவகுமார் அவர்களைச் சந்திக்கிற வாய்ப்புக் கிடைத்தது.நானும் துணைவியாரும் சென்று அவரின் இல்லத்தில் சந்தித்தோம்.ஒரு மணி நேரம் போனது தெரியாமல் ஓடி விட்டது.கம்பன் என் காதலன் என்ற தலைப்பில் அவர் நிகழ்த்தும் உரைகள் இப்போது குறுந்தகடு வடிவில் வந்துள்ளன.மனைவி,தாய் என்ற பாத்திரங்களை வகிக்கிற பெண்களை இந்த சமூகம் எப்படி மதிக்கிறது,எப்படி அணுக வேண்டும் என்று தன வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பேசுகிறார் சிவகுமார்.அந்தக் குறுந்தகடை முந்தைய சந்திப்பில் தந்தார். அதை நாஞ்சில் சம்பத்,சூர்யாவின் தமிழ் ஆசிரியர் மற்றும் நான்,சிவகுமார் ஆகியோர் அவரின் அலுவலகத்தில் பார்க்கும் அனுபவம் வாய்த்தது.ஒவ்வொரு மனிதனும் தன மனைவியின் பங்களிப்பு என்ன என்று மனப்பூர்வமாக உணர்வதற்கு அவரின் அனுபவப் பிழிவு உதவும்.இன்றைய உரையாடலின்மையமாக இந்தக் கருத்தே அமைந்தது.நாங்கள் விடைபெறும் வேளையில் சூர்யாவின் அனுபவப்பதிவான "இப்படிக்கு சூர்யா"என்ற புத்தகத்தைத் தந்தார்,திரு சிவகுமார்.வீடு வருமுன் இருபத்தைந்து பக்கங்கள் வரை படிக்க முடிந்தது.இன்று மிகப்பெரும் வெற்றிகளை திரையுலகில் அடைந்து விட்ட சூர்யா,தன சிறு வயதில் எந்த அளவுக்குத் தாழ்வு மனப்பான்மையுடன் இருந்திருக்கிறார் என்று படிக்கும் வேளையில் அது நம்பவே முடியாத ஒரு செய்தியாகவே இருக்கிறது.அனால் அவரே சொல்லும் செய்திகளை நம்பாமல் இருக்க முடியாது அல்லவா?சூர்யாவின் உணர்வுகளை எழுத்து வடிவில் தந்தவர் ஆர்.சி.ஜெயந்தன்.கல்கி இதழில் தொடராக வந்த சமயம்,ஓரிரு பகுதிகளைப் படித்து இருந்தாலும் இப்போது நூல் வடிவில் படிக்கும் போதுதான் அதன் வலிமை புரிகிறது.மிக வித்தியாசமான பதிவு.சிவகுமாரின் புதல்வர் அல்லவா?நூல் முழுவதும் படித்த பின் இன்னும் நிறையப் பதிவுகலைத்  தரக்கூடிய நூல்தான் இது.

Sunday, January 10, 2010

artham iyangum thalam

எந்த ஒரு படைப்புக்கும் அதன் மையமான பொருள் ஒன்று இருக்கவே செய்யும்.இது பொதுவாக ஏற்கப்பட்ட ஒன்று.அர்த்தம் என்று வடமொழியில் சொல்லப்படும் இந்தப் பொருள் எது?சொல்கிறவரின் மனதில் இருந்ததா?சொல்லில் வெளிப்பட்டதா?சொல் கடந்த ஒன்றா?எல்லாம்தான்  "சொல்லினால் தொடர்ச்சி நீ,சொல்லப்படும் பொருளும் நீ.....சொல்லினால் சொலப்படாது தோன்றுகின்ற சோதி நீ.......சொல்லினால் படைக்க நீ படைக்க வந்து தோன்றினார்......சொல்லினால் சுருங்க நீ நின் குணங்கள் சொல்ல வல்லரே....."என்று நாலாயிர திவ்ய பிரபந்தப் பாடல் உண்டு.அது படைப்பிலக்கியதிற்கும் பொருந்தும் என்று இன்று கிடைத்த ஒரு நூலின் பதிப்புரையில் படித்தேன்."அர்த்தம் இயங்கும் தளம்"என்பது தலைப்பு.தேவகோட்டை வா.மூர்த்தி,'பாரவி',எஸ்.சுவாமிநாதன் ஆகிய மூன்று எழுத்தாளர்கள் "அர்த்தம்"என்பதன் அர்த்தம் பற்றிச் சிந்திதவற்றின் தொகுப்பு.மூன்று கட்டுரைகள் இதில் உள்ளன.இன்று காலையில் பாரவி என்கிற என் நீண்ட நாள் நண்பரைச் சந்திக்க நேர்ந்த பொது அவர் தந்த நூல் இது.பல்லாண்டு காலமாக தொடர்ந்து எழுதி வருகிறவர் பாரவி.குறைவாகவே எழுதி இருந்தாலும் மிக நவீன சொல்முறையில் எழுதுபவர்.இன்னும் இவரின் எழுத்துகள் ஒரு தொகுப்பாக வராமல் இருப்பது பற்றி எனக்கு மிகுந்த ஆதங்கம் உண்டு.இது பற்றி அவரைச் சந்திக்கும் போதெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறேன்.இன்றும் சொன்னேன்.இந்த நூலில் முதல் கட்டுரையின் பதினைந்து பக்கங்கள் வரை படித்ததில் சில முக்கியமான சிந்தனைகள் எழுந்தன.வா. மூர்த்தியும் நீண்ட காலமாகத் தமிழில் எழுதி வருபவர்தான்."தீபம்"இதழ் காலம் தொட்டு இவரின் படைப்புகள் எனக்கு அறிமுகம்.படைப்பாளியின் கருத்து என்ன என்று ஒரு படைப்பில் நமக்குப் புலப்படும் பொருளும்,அவரின் மனதில் இருக்கும் பொருளும் ஒன்றாகவே அமைந்து விட்டால் பிரச்னை இல்லை.அவ்வாறு இல்லாமல்,வேறு வேறு பொருள்கள் எழுந்தால்,என்ன செய்வது.அங்கு,நான் சொல்ல வந்தது இதுதான் என்று படைப்பாளி விளக்கம் அளிக்க நேர்கிறது.இந்த விளக்கம் அளிக்கும் செயலில் பொதுவாகப் படைப்பாளிக்கு ஆர்வம் இருப்பது இல்லை.அது சற்று கலைத்திறன்  குறைவான செயல் என்றே கருதப்படுகிறது.இது போன்று பல கருத்துக்கள் இந்த நூலின் வாசிப்பைத் தொடர்ந்து என் மனதில் எழுந்தன.

Friday, January 1, 2010

indru puthaandu piranthathu............!

பிரபஞ்சனின் உலகம் பற்றிய பதிவுக்குப் பின் இன்று மீண்டும் தொடர்கிறேன்.இன்று புத்தாண்டு பிறந்திருக்கிறது.ஒரு புதிய நாளின் பிறப்பு பற்றி எழுதும் வேளையில் "பிரபஞ்சப் பூன்செடியில் மறுபடியும் ஒரு நாள் மலர் பூத்திருக்கிறது"என்று நா.பா. எழுதுவார்.பழைய ஆண்டு முடிந்து ஒரு புதிய ஆண்டு பிறந்திருக்கும் இந்த வேளையில் இந்தப் பிறப்பு பற்றி எப்படி சொல்லுவார்?டிசம்பர் மாதம்தான் அவரது பிறந்த நாளும்,மறைந்த நாளும் என இரண்டுமே வருகின்றன.இப்போது அந்த இரு நாட்களும் கடந்து சென்று விட்டன.அவரை பற்றிய ஒரு டாகுமெண்டரி படத்தில் எனது நினைவுகள்  சிலவற்றைப் பதிவு செய்ய ஒருவாய்ப்புக்   கிடைத்தது.                                அவர் வாழ்ந்த அந்த வீட்டில்,அவர் பயன்படுத்திய மாடியறையில்,அவர் சேர்த்து வைத்திருக்கும் நூற்றுக்கணக்கான புத்தகங்களின் நடுவே அவரின் புகைப்படம் என் துயரத்தைக் கிளறி விட்டது.அழுகை குமுறிக் கொண்டு வந்தது.அந்த மனநிலையில் இருந்து விடுபட்டு என் கருத்துக்களைச் சொல்லும் வரை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தார் அன்பர் திரு.ரங்கராஜ்.நா.பா.வின் மென்மையான படைப்புலகம் இன்றும் ஏராளமான வாசகர்களின் மனப்பரப்பில் அழியாத உயிரோவியமாகவே திகழ்கிறது. "தீபம்" அவரின் இலக்கிய நினைவாலயம்.அவரின் நாவல்கள்,சிறுகதைகள்,கவிதைகள் இவை பற்றி விமர்சனக் கருத்துக் கொண்டிருப்பவர்கள் கூட தீபத்தின் பங்களிப்பு பற்றிக் குறை சொல்ல மிகவும் யோசிக்க வேண்டியிருக்கும்.தீபம் இலக்கியக் குடும்பத்தின் எண்ணற்ற உறுப்பினர்கள்  என்றும் அழியாத நினைவுகளுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்......!                                                                                                                                                                                         இன்று ஒரு கணம் யோசித்தால் இந்த நினைவுகள் காலப்   பெருவெளியின் மிகச் சிறிய ஒரு துளியாகவே தென்படுகின்றன.இப்போது தமிழ்ச் சமூகம் அனுபவிக்கும் துயரங்கள் நம் மனப் பரப்பில் பெரும் சுமையாகவே அழுத்துகின்றன.மீள முடியாத சுமை அது.என்றும் பரிகாரம் காண முடியாத பெரும் பாவம்.அதைஎந்த வார்த்தைகளில் சொல்லுவது என்று யோசித்தால்,விடைகானவியலாத ஒரு புதிர்...................!