Wednesday, February 29, 2012

kalvichchinthanaikal

கல்வி என்ற ஒரு மருந்துதான் சமூகத்தின் பல அவலங்களுக்கும் நிவாரணி என்று உலகெங்கும் பல சிந்தனையாளர்கள் பல காலமாய் எழுதியும்,பேசியும் வந்திருகிறார்கள்.இந்திய நாட்டில் விடுதலைக்கு முன்னும் பின்னும் நாட்டு மக்கள் அனைவரும் கல்வி பெற்றுவிட வேண்டும் என்ற கனவுடன் உழைத்தவர்கள் ஏராளம்.அவர்களில் குறிப்பாக கிறித்துவ இறைப் பணியாளர்களின் பங்கு மிகப் பெரியது.பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் அதிகாரிகள் பெரும்பாலும்  ஒடுக்குமுறை இயந்திரத்தின் பகுதியாகவே இருந்தார்கள் என்றாலும் அவர்களில் சிலர் இந்த நாட்டு மக்களின்பால் அன்பும் அக்கறையும் உடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.சென்னையில் கர்னல் ஆள்காட் அவர்களில் ஒருவர். பஞ்சமர் இலவசப் பள்ளிகள் துவங்கி அவர் செய்த அரும்பணி பற்றிப் படிக்கும் போதுதான் தெரிகிறது இந்த மண்ணில் அவர் போன்றவர்கள் செய்த அளவுக்குக் கூட நம் நாட்டுத் தலைவர்கள் பலர் பெரிதாக ஒன்றும் செய்து விடவில்லை என்ற உண்மை."பறையர் வரலாறு" என்ற தனது நூலில் ஆள்காட் சொல்கிறார்:  "நிரந்தரமான நன்மைகளைத் தருமென்று நம்பியவைகளை மட்டுமே நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.  எந்த வகையான கட்டணமும் இல்லாமல் அவர்களுடைய குழந்தைகள் படிப்பதற்கான ஒரு பள்ளியைத் திறந்தேன்......சமையல் செய்வது,கிழிந்த ஆடைகளைத் தைப்பது,உணவு மேசையை ஒழுங்குபடுத்துவது,குடும்பக் கணக்கினை எழுதுவது போன்றவற்றை மாணவர்களுக்குக் கற்றுக் கொடுத்தேன்.அவர்களுக்கு எளிதில் கிடைக்கக் கூடியதும்நல்ல ஊதியம் தருவதுமான வேலையைப் பெற்று அவற்றில் நிலைத்திருப்பதை உறுதி செய்யும் வகையில் இப் பயிற்சியை  அவர்களுக்கு அளித்தேன்"    என்கிறார் கர்னல்.இந்தப் பார்வை நம்மில் எதனை பேருக்கு இருந்தது?இருக்கிறது?

Thursday, February 23, 2012

indrum innoru naalum....

இந்தப் பகுதியில் இடுகை என்று பதிவு செய்து நீண்ட காலம் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளின் முடிவிலும் நமது மனப் பரப்பில் எண்ணற்ற சிந்தனைகள் இடம் பெற்று விடுகின்றன.அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முயல்கிறோம் எல்லாவற்றையும் எல்லாருடனும் பகிர்ந்து கொள்ள முடிவது இல்லை.சிலருடன் பகிர்ந்து கொள்ளாமல் இருக்க முடிவதும் இல்லை.எழுத்து என்ற ஊடகம் நமக்குக் கை கொடுக்கிறது.இசை,ஓவியம்,நாடகம்,சினிமா,சின்னத் திரை என்று எத்தனையோ ஊடகங்களின்று. அசோகமித்திரன் எழுதிய கதைகளின் முதல் தொகுப்பு "வாழ்விலே ஒரு முறை"என்பது.பிறகு சில காலம் கழித்து "இன்னும் சில நாட்கள்' என்ற அடுத்த தொகுப்பு வந்தது.இன்றுடன் அல்லது வாழ்வில் ஒரு முறை என்று நினைக்கிறோம்.ஆனால் இன்னும் சில நாட்கள் இருக்கவே செய்கின்றன.நேற்று முடிந்து போய் விட்டது;இன்று முடியப் போகிறது என்பது எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மை நாளை வரத்தான் போகிறது என்பது.எனது எழுத்துப் பணிகளில் சில சமயம் சோர்வு ஏற்படும் வேளைகளில் இந்த "வாழ்விலே ஒரு முறை"யும் "இன்னும் சில நாட்கள்" தலைப்புமே நினைவுக்கு வரும்.மீண்டும் எழுதுவேன்.வாழ்க்கை என்னும் மகா நதியில் மிதந்து கொண்டிருக்கிற சிறு படகு நான்.எழுதும் வாசிப்பும் எனது இரு கண்கள் எனலாம்.இவை இல்லாதிருந்திருந்தால் நான் என்னவாகி இருப்பேன்?நினைக்கவே துயரம் தரும் கேள்வி இது.சற்று முன் வாசித்த தோழர் தொழார் கவின்மலரின் பதிவு ஒன்று மறைந்த தோழர்   உ.ரா.வரதராஜன் அவர்கள் பற்றிய ஒரு கண்ணீர்ததும்பும் பதிவு மௌனமாக் நம்மை அழச் செய்கிறது.போரூர்ஏரியைக்  கடக்கும் போதெல்லாம் அவரின் துயர நினைவு வந்து நெஞ்சைக் கனமாக்கி  விடும்.இன்றைய அரசியல் வானில் இப்படி பல துயர நிகழ்வுகள்.அவற்றின் பின்னால் எந்த விதமான "தத்துவ"சண்டைகள் நிகழ்ந்தனவோ?ஆனால் இவற்றின் பின்னுள்ள அவல நிலை நம்மைத் திகைக்கச செய்கிறது.எனினும் நாம் நின்று விட முடிவதில்லை."இருள் என்னும் விருந்தாளி இரவு வரைக்கும் தான்;எவர் தடுத்து இதுவரை விடியல் நின்றிருக்கிறது?"என்று உருதுக் கவிஞர் சாகிர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது இன்னொரு நாள் இதோ நாளை வருகிறது.....நடக்கிறோம்,நடப்போம்.