Sunday, December 27, 2009

pirapancanin ulakam.............!

பிரபஞ்சன் உயிர்மை இதழில் எழுதிய கட்டுரைகள் ஒரு தொகுப்பாக நேற்று வெளியிடப்பட்டுள்ளன.சற்று நீண்ட தலைப்பு.குமுதம்இதழில் அவர்  பணியாற்றிய அனுபவங்களும்,வேறு பல விசயங்கள் பற்றிய அவரின் சிந்தனைகளும் இந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன.புதுவை அனுபவங்களும் அவரின் முன்னோடிகளும் அவரின் பெற்றோர்களும் வாழ்ந்த விதம் பற்றியும் இந்தக் கட்டுரைகள் பேசுகின்றன.அவரின் மொழிநடை மிக வசீகரமான ஒன்று.குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி.பற்றி இவ்வளவு காலமும் வேறு யாராவது இப்படி எழுதி இருப்பார்களா?சந்தேகம்தான்.இவரின் பார்வை வித்தியாசமானதாக இருக்கிறது.அப்பாவின்,தாத்தாவின் கள்ளுக்கடை வியாபாரம் பற்றி பிரபஞ்சன் எழுதி இருக்கும் விதம் தனித்தன்மையானது.பொதுவில் கள்ளுக்கடை பற்றிய சித்திரம் ஒருவிதமானதாக இருக்கும்.ஆனால்,இவர் தரும் ஓவியம் வேறுவிதம்.ரசிக்கவும்,மகிழவும் முடிகிற விதத்தில் இந்தப் பதிவுகள் உள்ளன.அவரின் தம்பியும்,தங்கையும் அம்மை நோய்க்குப் பலியான நிகழ்வு நெஞ்சை உலுக்கும் விதத்தில் பதிவாகி உள்ளது.கிணற்றடியில் அண்ணனும்,தம்பியும்,தங்கையும் மூவரும் விளையாடுவதாகதான் நினைத்துக் கொண்டிருந்தேன்,ஆனால் நான்காவதாக மரணமும் எங்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததை என்னால் உணர முடியவில்லை;உணர முடிகிற வயது,அனுபவம் எதுவும் கிடையாது அப்போது என்கிறார் பிரபஞ்சன்.பானுவின் புத்தகப்பை ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது;ஆனால் அதைமாட்டிக்கொள்ள பானுதான் உயிருடன் இல்லை.என்ன ஒரு சோகம்.இவரின் அனைத்துக் கதைகளிலும் மூர்த்தி என்ற பெயர் மட்டுமே ஆண் கதாபாதிரங்களுக்குப் பெயராக வருவது ஏன் என்ற கேள்விக்குப் பதில் இந்தக் கட்டுரையை வாசிக்கும் வேளையில் கிடைத்தது.புதுவை பிரன்ச் ஆதிக்கத்தில் இருந்த சமயத்தில் வாழ்ந்த இரு பிரஞ்சுப் பெண்கள் பற்றிய கட்டுரையும் மிக வலிமையானது.படிக்கும் வேளையில் மனம் உலைந்து விடுகிறது.பிரபஞ்சனின் இசையார்வம்,வாசிப்பு விரிவும்,ஆழமும்,கூர்மை மிக்க பார்வை எல்லாம் நமக்குப் புலனாகின்றன.மேன்ஷன்களின் வாசனை,அதன் ஓசைகள்,அது நம் மீது திணிக்கிற கலவையான உணர்வுகளின் அழுத்தங்கள்....இப்படி ஒரு கட்டுரை.மென்மையான ஒரு நடையில் வாழ்வின் குரூரங்கள் பலவற்றையும் பதிவு செய்வது பிரபஞ்சனுக்கே உரிய ஒரு தனித்தன்மை.............!

No comments:

Post a Comment