Wednesday, March 24, 2010

இன்றொரு புதிய உலகம்.

இன்றொரு புதிய உலகம்....தினசரி வேலைகளின் அழுத்தம் காரணமாக இந்தப் பதிவுகளில் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை.இன்று எனது துணைவியாரின் "பாடினியார்"வலைப் பக்கங்களில் பயணம் செய்யும் வாய்ப்புக் கிடைத்தது.ஒரு வாசகன் ஆக என்னை மாற்றிக் கொண்டு படிக்கையில் அவரின் பதிவுகள் மிகவும் மகிழ்ச்சி தரும் விதத்தில் இருந்தன.ஒரு பெண்,தாய்,மனைவி,மகள் என்ற பல பரிமாணங்கள் அவரின் பதிவுகளில் வண்ணங்கள் காட்டுகின்றன.பிரசவ வேதனை மிக்க ஒரு நாளில் தன பக்கத்துப் படுக்கையில் சின்னப்பொண்ணு என்று ஒரு ஜீவனின் வாழ்க்கைப் பதிவையும் கவனத்தில் வைத்திருந்து இதனை வருடம் சென்ற பிறகும் உயிர்ப்புடன் எழுத்துவடிவம் தர முடிந்தது பெரும் வியப்புத் தரும் விஷயம்.தான் பார்க்கும் படங்கள்,தன இளமைக்கால நினைவுகள்,குடும்பம்  என்கிற ஒரு வெளியில் கடந்து செல்லும் இனிமையும் வலியும் மிக்க நேரங்கள்,  வெளியில் பயணங்களில் காண நேர்ந்த காட்சிகளும் மனிதர்களும் ...என்று பன்முகம் கொண்டவை ஜெயந்தியின் பதிவுகள்.அவருக்குள் ஒரு படைப்பாளி இருப்பதை எப்போதோ உணர்ந்திருக்கிறேன். "அதுவும்...."என்ற தலைப்பில் நான் எழுத்து வடிவம் தந்த சிறுகதை அவர் சொன்ன அவரின் சிறுவயது அனுபவம்தான்.சின்ன வயதில் பாட்டி வீட்டில் அவரின் பிரியத்திற்குரிய பூனை ஒன்று ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகும் அவர் அங்குப் போனதும் ஓடி வந்து மடியில் ஏறி விளையாடும் சிறு நிகழ்வுதான் கதை.அவரே எழுதி இருந்தால் இன்னும் சிறப்பாக வந்திருக்கும்.என்றாலும் என் சிறுகதைகளில் மிகச் சிறப்பாக வடிவம் பெற்ற ஒருசில கதைகளில் இதுவும் ஒன்று.                                                   தன தனிமை துயரம்,தன கனவுகள்,நடைமுறை வாழ்கையில் தன முயற்சிகள்,இடையூறுகள் பற்றிக் கவலைப்படாமல் தன பாதையில் தளராமல் நடைபோடும் துணிவு என்று அவரின் பண்புகள் மிளிரும் வலைப் பக்கங்கள்.சில நிகழ்வுகள் நானும் உடனிருன்தவை என்றாலும் அவர் எழுத்தில் வாசிக்கும்போது மிகப் புதிய ஒரு காட்சி மனக்கண்ணில் எழுகிறது.ஒவ்வொரு வீட்டிலும் அந்த வீடு தன்னுள் ஒரு நடமாடும் உணர்வுக்களஞ்சியம் ஒன்றைக் கொண்டிருக்கிறது.அதன் தரிசனம் நம் கண்களில் படாமலே போகும் நிலை பல சமயங்களில் ஏற்பட்டு விடுகிறது.இயந்திர மயமான இன்றைய வாழ்கையில் அற்பக் கவலைகளால் மனதில் இருப்பதைக் கூடப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாத நிலையில் உழன்று கொண்டிருக்கிறோம்.எதிர்பாராமல் தொடர்ந்த பல நாட்கள் மழைக்குப் பின் திடீர் என்று ஒரு நாள் காலைச் சூரியனின் வருகையின் பரவசம் இன்று தெரிந்த உலகில் கிடைக்கிறது.அறிந்த பழைய உலகமே கூடப் புதிய வடிவமும் வண்ணமும் காட்டி நிற்கிறது.நாம் தவற விட்ட உன்னத நிமிடங்கள் குறித்த குற்ற உணர்வும் கூட நம்மை உறுத்துகிறது.ஒரு எளிய மன உலகம்வாய்க்கப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள்."பாடிநியாரின்"மன உலகம் அதுதான்.........................!

No comments:

Post a Comment