Sunday, December 16, 2012

எழுதுகிறவர்களின் கனவுகள்

உதய சங்கரின் கட்டுரை ஒன்றை நற்றிணையில் நேற்றுப் படித்தேன்.இன்று தமிழில் எழுதுகிறவர்களில் மிக முக்கியமான ஒரு படைப்பாளி.குறுநாவல்,சிறுகதை,கவிதை,குழந்தை இலக்கியம்,கட்டுரை,பிற மொழிப் படைப்புகளைத் தமிழில் ஆக்கித் தருவது ,கட்டுரைகள் எழுதுவது என்று அனேகமாக எல்லா வகையான வடிவங்களிலும் அவர் தன படைப்புகளைத் தந்திருக்கிறார்.அத்தகைய எழுத்தாளர் நற்றிணையில் எழுதிய கட்டுரை ஒரு வகையில் மிகச் சிறப்பான ஒரு மன நிலையைச் சொல்லுகிறது.இன்னொரு வகையில் இன்று தமிழில் எழுதுகிறவர்கள் படும் மன அவசங்களைச் சித்தரிக்கிறது.எழுதாமல் இருக்க முடியாது;ஆகவே எழுதுகிறேன்;இது ஒரு குரல்.பணமும்,புகழும் கிடைக்கிறது.ஆகவே எழுதுகிறேன் என்று பலரின் குரல்கள்.சமூகம்ஏதேனும் ஒரு வகையில் பயன் பெறுவதற்காக எழுதுகிறேன் என்று மிகச்சில குரல்கள்.யாருடைய எழுத்தினாலும் எந்தக் காலத்திலும் சமூகம் ஒன்றும் பெரிதாக புரண்டு விடவில்லை,விடவும் விடாது என்று விடாமல் சொல்லுகிற பலர்.இவர்களுக்கு நடுவே ஒரு தனிக்குரல் உதய சங்கருடையது.அவரின் "யாவர் வீட்டிலும்"சிறுகதைத் தொகுப்பு இன்று எடுத்து வாசித்தாலும் மனதை உலுக்கும் கதைகளின் தொகுப்பு என்பேன்.டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல் என்ற ஒரு கதை போதுமே.எழுபதுகளில் வேலூரில் நான் இருந்த காலத்தில் வாசித்துப் பரவசம் அடைந்த எழுத்து உதயசங்கருடையது.அவரின் சமீப கால எழுத்துகளில் நவீன எழுத்து முறையிலான கதைகளைக் காண முடியும்.                      இங்கு அவரின் நற்றிணை கட்டுரை குறித்து............"என்றாலும் நான் எழுதுகிறேன்..ஆகவே நான் இருக்கிறேன் "என்பது தலைப்பு.ஒருவர் எழுத்தாளர் ஆவது எப்படி நிகழ்கிறது என்று யாராவது துல்லியமாகச் சொல்லிவிட முடியுமா என்று ஆரம்பிக்கிற கட்டுரை இன்று எழுதுகிறவனின் கனவுகளும் அவை பெரும்பாலும்  கானல் நீராகவே போய்விடுகிற கொடுமைகளும் பற்றி உரையாடுகிறது.இலக்கிய உலகம் இன்று என்னஎன்ன வேசங்கள் கட்டி ஆடிக் கொண்டிருக்கிறதோ அந்த வேசங்கள் அனைத்தையும் பற்றி அவர் எல்லா எழுத்தாளர்களின் மனதிலும் இருக்கிற வேதனைகளை பதிவு செய்திருக்கிறார்.வெறும் வாய்ப்பேச்சில் காற்றில் கரைந்து போய்க் கொண்டிருந்த புலம்பல்கள் இவை.இவையும் பதிவாகத்தானே வேண்டும்.அவர் துணிந்து பதிவு செய்து விட்டார்,நாம் வாசித்து ஆமாம்,நியாயமாகத் தானே எழுதி இருக்கிறார் என்று அங்கீகரிக்கலாம். 

1 comment: