Tuesday, February 5, 2013

சொல்வனமும் சொல்லாத சோகங்களும்

உதயசங்கரின் இரண்டு கட்டுரைகளை "சொல் வனம் " என்கிற இணைய இதழில் நேற்றுப் படித்தேன்.ஒன்று,க.நா.சு.பற்றியது;இன்னொன்று கடல்புரத்தில் நாவல் பற்றியது.உதயசங்கரின் எழுத்து என்றுமே என்னை வசீகரிக்கும் சொல் ஓவியங்கள்தாம்.மனித மனதில் எவ்வளவு சங்கடங்கள் மண்டிக் கிடந்தாலும் அவற்றை மீறி மேல் எழுந்து வரும் அன்பு ஒன்று அவை எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளி விடும் வல்லமை படைத்த ஒன்றாய் இருக்கிறது.தமிழுக்கு க.நா.சு.செய்த பங்களிப்பு பற்றி உதயசங்கர் பேசியிருப்பது மனதை நெகிழச் செய்யும் விதத்தில் இருக்கிறது.அதே போல வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் பற்றி எழுதியிருப்பது. வண்ணநிலவன் கதைகள் படித்து பரவசமாகித் திரிந்த அனுபவங்கள் உதயசங்கரின் கட்டுரையைப் படித்ததும் மளமளவென்று மனப்பரப்பில் வந்து அலைமோதின.சொல்லில் அடங்காத சோகங்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் பிலோமி போன்ற மனுஷிகள் தான் வாழ்க்கைக்கு புதிய அர்த்தங்களைத் தருகின்றார்கள்.யாவர் வீட்டிலும் தொகுப்பு வந்த ஒரு மாதத்தில் க.நா.சு. அதைப்படித்துப் பாராட்டிய செய்தி ஒன்றை நினைவுக்குக் கொண்டு வந்தது:நமது நண்பர்கள்  மௌனம் சாதிக்கும் விதம் பற்றி நிறைய அனுபவங்கள் இருந்தாலும் மீண்டும் அவறை உதயசங்கர் வாரி வெளியே கொண்டுவந்து கொட்டி விட்டார்.படைப்பின் நுட்பங்கள் யாவும் வசப்பட்ட ஒரு எழுத்தாளர் அவர்.அவரின் வாசிப்பு அனுபவமும் வாழ்க்கை அனுபவமும் ஒன்றுகலந்து உருவான சொல்வனத்தில் எழில் மரங்களும்,பயன்தரு கொடிகளும்,செடிகளும் செழித்துக் கிடக்கின்றன.எப்போதும்போல நான் அவற்றில் மனம் பறிகொடுத்து நிற்கிறேன்.நடக்கிறேன்.பறக்கிறேன்.இனம்புரியாத ஒரு சோகம் வந்து மனதில் நிறைந்து  தளும்பியது  

No comments:

Post a Comment