Thursday, February 10, 2011

சரஸ்வதி விஜயபாஸ்கரன் மறைந்தார்.....

வ. விஜயபாஸ்கரன் நேற்றிரவு காலமாகி விட்டார்.வெறும் விஜயபாஸ்கரன் என்றால் தமிழ் இலக்கிய உலகில் யோசிப்பார்கள்.சரஸ்வதி விஜயபாஸ்கரன் என்றால் சட்டென்று புரியும்.தமிழில் வெளி வந்த அற்புதமான ஒரு இடைநிலை இதழ் அது.ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி,ஜி.நாகராஜன் இப்படியான அன்றைய இளம் எழுத்தாளர்களின் படைப்புகளை வெளியிட்டு அவர்களுக்குக் களம் அமைத்துத் தந்தவர் அவர்.மிக நல்ல சிறுகதைகளும்,கட்டுரைகளும்,கவிதைகளும் இடம் பெற்ற பத்திரிகை.ஆயிரக்கணக்கில்     அன்று விற்பனையான ஒரே இலக்கிய இதழ்  என்று கூடச் சொல்லலாம்.அன்று அவர் ஒன்றாக இருந்த பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருந்தவர்.கட்சி அன்று இருந்த நிலையில் கலை இலக்கியப் படைப்புகளை எப்படி அணுகுவது என்பதில் அவ்வளவு தெளிவும் பக்குவமும் தலைவர்களில் பலருக்கு இருந்திருக்க வாயிப்புக் குறைவு.எனவே சரஸ்வதியில் வெளியான படைப்புகள் குறித்த புரிதல் இல்லாமல் அவர் கட்சி நிலைப்பாட்டுக்கு விரோதமான படைப்புகளை வெளியிடுவதாக ஒரு கருத்து பரவ ஆரம்பிதிருந்ததுஅதன் விளைவாக "தாமரை"இதழ் அன்றைய கட்சி தலைவர் ஜீவா அவர்களால் ஆரம்பிக்கப் பட்டது.சரஸ்வதி நின்று போனதற்கு கட்சிதான் காரணம் என்ற வருத்தம விஜயபாச்கரனுக்கு இருந்தது.இந்த வருத்தத்தை பொதுவுடைமைத் தத்துவத்தின் விரோதிகள் இன்றளவும் மிகத் திறமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஆனால் விஜயபாஸ்கரன் தொடர்ந்து கட்சியில்தான் இருந்தார்.சோர்வுடன் இருந்தார் என்று சொல்லலாம்."சரஸ்வதி காலம்"தொடரில் தீபத்தில் இந்த அனுபங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.சமீபத்தில் கலைஞன் பதிப்பகம் மூலம் "சரஸ்வதி களஞ்சியம்"என்ற தொகுப்பு நூலாக இரு பகுதிகளாக சரஸ்வதி இதழின் படைப்புகள் தேர்வு செய்யப்பட்டு தொகுக்கப் பட்டுள்ளன.சரஸ்வதி காலம் தொடரை எழுதியவர் வல்லிக்கண்ணன் அவர்கள்.அது நூலாகவும் வந்துள்ளது.ஆனால் இன்று விஜய பாஸ்கரனுக்கு இரங்கல் குறிப்பு எழுதியிருக்கும் ஜெயமோகன் அந்த நூலை விஜய பாஸ்கரனே எழுதினார் என்று குறிப்பிட்டிருக்கிறார்.வல்லிக்கண்ணன்,தி.கே சிவசங்கரன் என்ற பெயர்களின் மேல் ஜெயமோகன் மற்றும் அவரின் நண்பர்கள் வட்டத்திற்கு இருக்கும் அசூயையும்,வெறுப்பும் எள்ளலும் இலக்கிய உலகம் நன்கு அறிந்தவை.அந்த விவகாரம் பற்றித் தனியே எழுத வேண்டுமே தவிர இன்றைய சந்தர்ப்பம் அதற்குஏற்றதல்ல.எது எப்படி இருந்தாலும் ஒரு பொதுவுடைமை வாதிதான் இன்று இவர்கள் கொண்டாடும் சுந்தர ராமசாமியின்,ஜி.நாகராஜனின் படைப்புகளை நல்ல முறையில் முறையில் அன்றைக்கே இனம் கண்டு வெளியிட்டவர் என்பதையாவது மறக்காமல் இருந்தால் சரிதான்.........விஜயபாச்கரனுக்கு நம் அஞ்சலி! 

2 comments:

 1. அன்புத் தோழர்

  வணக்கம்...உங்களது வலைப்பூ பற்றி நீங்கள் சொன்னதே இல்லையே...

  நல்லது, விஜயபாஸ்கரன் மறைவிற்கான அஞ்சலியில் உங்களது இணையதள முகவரி பிடிபட்டது, எத்தனையோ விஷயங்களை ஒரு சிறு குறிப்பில் அடையாளப்படுத்திக் கொள்ள உதவியது...

  காலம் எல்லாத் தவறுகளையும் வருத்ததோடு அசைபோடுகிறது. அதுவே அதன் பலம். அதுவே அதன் பெருமிதம். அதுவே எதிர்காலத்திற்கான நம்பிக்கை....

  சரஸ்வதி விஜயபாஸ்கரன் மறைவை தோழர் தி க சி அவர்களோடு இன்று மாலை, இந்த இதழ் உயிர் எழுத்து பத்திரிகையில் வந்திருக்கும் அவரது பேட்டியை முன்வைத்துப் பேசும்போது அவர் சொல்லித் தெரிந்து கொண்டேன். சரஸ்வதி பற்றியும், விஜயபாஸ்கரன் பற்றியும் உங்களிடம் தெரிந்து கொண்டேன்.
  கை வண்ணம் அங்கு கண்டேன். கால் வண்ணம் இங்கு கண்டேன் என்ற மேனிக்கு...

  எஸ் வி வேணுகோபாலன்

  ReplyDelete