Saturday, January 26, 2013

கண்காட்சி முடிந்தது;வாசிப்பு ?

இந்த ஆண்டின் புத்தகக் கண்காட்சி முடிந்து விட்டது.பதின்மூன்று நாட்கள் சென்னை நகர பிரதான் சாலையில் மக்கள் வெள்ளம் .அனேகமாக அனைவர் கைகளிலும் புத்தகங்கள்.பூமணியின் "அங்காடி" நாவல் இந்த ஆண்டின் கவனம் பெற்ற நூல்களில் ஒன்று.இந்த முறை நான்கைந்து நாட்கள் அங்கு போனதில் பல விஷயங்கள் கவனத்தில் பதிந்தன.வாசிப்பின் பயனை,சுவையை ஒவ்வொரு வருடமும் கூடுதலான மக்கள் உணர்ந்து வருகிறார்கள்;தீவிர இலக்கிய நூல்கள் வருவது ஆண்டுக்கு ஆண்டு அதிகம் ஆகி வருகிறது;இளம் வாசகர்கள் அதிகமாகிக் கொண்டு இருக்கிறார்கள்.நான் வாசித்த ஒரு புத்தகம் இந்தக் கண்காட்சியில் வெளி வந்த கட்டுரைத் தொகுப்பு.கீரனூர் ஜாகீர் ராஜாவின் "குளத்தங்கரை அரசமரம் முதல் கோணங்கி வரை"என்ற அந்தப் புத்தகம்,தமிழின் மிக முக்கிய ஆளுமைகள் பற்றி அறிமுகம் செய்கிறது.முதல் சிறுகதை ஆசிரியர் என்று பொதுவாக அறியப்படும் வ.வே.சு.அய்யரின் "குளத்தங்கரை அரசமரம்" கதையில் தொடக்கி,இன்று மிக சமீப காலத்தின் கதை சொல்லிகள் வரை ஒரு பருந்துப் பார்வையில் பார்த்து மிகுந்த ரசனையுனர்வுடன் எழுதி இருக்கிறார் ஜாகீர்.க.நா.சு.,தஞ்சை பிரகாஷ் ச.தமிழ்ச்செல்வன்,இன்னும் பல படைப்பாளிகளின் கதைகள்,கட்டுரைகள் ,நாவல்கள் பற்றி தன வாசிப்பு அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார்.தஞ்சைப் பெரிய கோயில் பற்றிய கட்டுரை,ச.த .,அன்னா தச்தேவ்ச்கி பற்றிய கட்டுரைகள் மிக நுட்பமானவை.தான் விமர்சகர் அல்ல,ஆனால் சற்றுத் தீவிர வாசகர் என்று வேண்டுமானால் சொல்லலாம் என்கிறார்.பல படைப்புகளின் அடி நாதம் குறித்து இவர் மிகச் சரியாகவே இனங் காண்கிறார்.தமிழ்ச் செல்வனின் முன்னுரையில் தனது மனதிற்கு நெருக்கமான,தன மனப்பதிவுகளே போன்ற கட்டுரைகள் இவை என்று பாராட்டி   இருப்பது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.வேறு பல நூல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.பூமணியின் நாவலை நான் படிக்க வேண்டும் என்று தொழார் பால்வண்ணம் அவரின் பிரதியைத் தந்தார்.சில பக்கங்கள் படித்தும் பார்த்தேன்.மிக முக்கியமான ஒரு படைப்புதான் என்று உறுதிப்பட்டது.வாசிப்பின் இசையில் எப்போதுமே மனம் பறி கொடுப்பவன் நான்.தீராத ஆச்சரியம் அது.வாழ்க்கையின் பல மேடுபள்ளங்களில் இடறி நான் விழுந்த போதெல்லாம் கைகொடுத்துத் தூக்கி விட்ட கரம் வாசிப்பு அல்லவா?இன்று நான் சரிவில் இருந்து மீளவும் அதுதானே கரம் கொடுத்தது?ஜாகீரின் புத்தகத்தை உதய சங்கருக்கும் மணிமாறனுக்கும் சமர்ப்பணம் செய்த்திருக்கிறார் அவர்.தமிழ்ச் செல்வனின் "வலையில் விழுந்த வார்த்தைகள்" புத்தகமும் வந்திருக்கிறது.அதன் முன்னுரையிலும் உதயசங்கர் பற்றிய வரியொன்று வருகிறது.இவை தவிர வேறுபல புத்தகங்களை அறிமுகம் செய்யும் பொருட்டு படிக்க நேர்ந்தது.பிபன் சந்திராவின் இரண்டு நூல்கள்,வே.ஜீவகுமார் காவிரி பற்றி எழுதியது,அணுவின் ஆற்றல் பற்றி ப.கு.ராஜன் எழுதியது,உணவுப் பாதுகாப்பு பற்றி பிருந்தா காரத் முன்வைக்கும் ஏராளமான வாதங்கள்,அதைத் தமிழில் தந்திருக்கும் பெரியசாமித் தோழர்,மார்க்சிய மூல நூல்களைப் படிப்பதற்கு உதவும் மாரிஸ் கான்போர்தின் கைஏடு இப்படிப் பலவும் படிக்க வேண்டியுள்ளது.வாசிப்புக்கு என்றும் முடிவில்லை,வாழ்க்கையைப் போலவே.....!     

No comments:

Post a Comment